Showing posts with label Paddy. Show all posts
Showing posts with label Paddy. Show all posts

Thursday, September 24, 2009

செம்மை நெல் சாகுபடி செய்வது எப்படி? வேளாண்மை உதவி இயக்குனர் விளக்கம்

செம்மை நெல் சாகுபடி செய்வது எப்படி என்று வேளாண்மை உதவி இயக்குனர் ப.சிதம்பரம் விளக்கமளித்துள்ளார்.

இது தொட‌ர்பாஅவ‌ரவெ‌ளி‌யி‌‌ள்அ‌றி‌க்கை‌யி‌ல், ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் தண்ணீர் திறந்துவிட‌ப்ப‌ட்டுள்ளது. விவசாயிகள் அனைவரும் ஒன்றை நாற்று நடவு முறை என்றழைக்கப்படும் செம்மைநெல் சாகுபடி செய்து அதிக மகசூல் பெறலாம்.

செம்மை நெல் சாகுபடி முறைக்கு ஏ.டி.டி. 38, 39 போன்ற அனைத்து ரகங்களையும் பயன்படுத்தலாம். செம்மை நெல் சாகுபடி முறையில் நடவு செய்ய ஏக்கருக்கு 2 முதல் 3 கிலோ சான்று பெற்ற விதை நெல் போதுமானது.

ஏக்கருக்கு ஒரு சென்ட் மேட்டுப்பாத்தி நாற்றங்கால் அமைத்து நாற்று விட்ட 12 முதல் 15 நாட்களுக்குள் 22.5 செ.மீ., க்கு 22.5 செ.மீ. என்ற இடைவெளியில் மார்க்கர் கருவி கொண்டு அடையாளமிட்டு அல்லது கயிறு பிடித்து நடவு செய்யவேண்டும்.

நடவு செய்த 10, 20, 30 மற்றும் 40 வது நாளில் கோனோவீடர் களை எடுக்கும் கருவியை கொண்டு களையை வயலிலேயே அமுக்கி விடவேண்டும். இதனால் களைகள் மக்கி பயிருக்கு உரமாக மாற்றப்படுகிறது. இதன் மூலம மண்ணில் அங்ககப் பொருளின் அளவு அதிகரிக்கின்றது.

மேலும் மண்ணில் அதிக காற்றோட்டம் ஏற்படுகிறது. செம்மை நெல் சாகுபடி முறையில் நல்ல காற்றோட்டம் ஏற்படுகிறது. இதோடு நல்ல சூரிய வெளிச்சமும் கிடைப்பதால் அதிக சிம்புகள் வெடிக்க ஏதுவாகிறது. பூச்சி மற்றும் நோய் தாக்குதலும் குறைவாக இருக்கும்.

சாதாரண நடவில் பத்து முதல் பதினைந்து சிம்புகள் உருவாகும். ஆனால் செம்மை நெல் சாகுபடியில் 60 முதல் 70 கதிர் பிடிக்கும் சிம்புகள் உருவாகும்.

இதனால் மகசூல் சாதாரண முறையைவிட ஏக்கருக்கு 500 முதல் 1000 கிலோ வரை கூடுதலாக மகசூல் கிடைக்கும். அதாவது ஏக்கருக்கு 16 முதல் 18 பொதிவரை மகசூல் கிடைக்கும் எ‌ன்றவேளாண்மை உதவி இயக்குனர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.

Monday, September 14, 2009

செம்மை நெல் சாகுபடி முறை மூலம் சட்டிஸ்கரில் உணவு மற்றும் வாழ்க்கை பாதுகாப்பு – அனுபவங்கள் மற்றும் அறிவுறைகள்

கேள்வி : செம்மை நெல் சாகுபடி முறை மூலம் சட்டிஸ்கரில் உணவு மற்றும் வாழ்க்கை பாதுகாப்பு – அனுபவங்கள் மற்றும் அறிவுறைகள்.

தொகுத்தவர்கள் : கோபி கோஷ் மற்றும் ராணு போகல்
தேதி : ஜனவரி 23, 2009

திருந்திய நெல் சாகுபடி முறையில் சந்தேகத்தை கேட்டவர், மானாஸ் சத்பாதி, பிரதான், பூவனேஸ்வர்

நான் பிரதானில் வேலை செய்கிறேன். இந்தியாவில் பல இடங்களில், செம்மை நெல் சாகுபடி முறைக்கு கிடைத்த வெற்றியால், ஏழை விவசாயின் உணவு பாதுகாப்பிற்காக, இந்த தொழில் நுட்பத்தை பஸ்தர் மற்றும் சட்டிஸ்கரின் மலை பகுதிகளுக்கு, ஏனைய அரசு சாரா நிவனங்களுடன் இணைந்து கொண்டு செல்ல நினைக்கிறேன். எங்கள் அனுபவத்தில், பண்ணை மற்றும் பண்ணைசாராமல் வாழ்பவர்களுடைய, உணவு பாதுகாப்பு ஏற்பட்டுவிட்டால், அவர்களுடைய வாழ்க்கை தரம் உயர்ந்துவிடும். இல்லையென்றால், அவர்கள் இயற்கை வளங்களை போதுமான அளவு உபயோகபடுத்தாமல், கூலி வேலையை எதிர்பார்த்து கொண்டிருப்பர்.
மேலும் விவசாயத்திலிருந்து வரும் வருமானம் குறைவாக இருப்பதால், விவசாயிகளை, அவர்கள் நிலத்தின் மகசூலை பெருக்க ஊக்குவிப்பது கடினமாகும். இந்த பகுதியில் விவசாயிகளின் சராசரி நில அளவு அரை ஹெக்டர் ஆகும். மானாவரியில் வழக்கமான முறையில் மிகக்குறைந்த முதலீட்டில் சாகுபடி செய்யும் விவசாயிக்கு, Êசராசரி அரை ஹெக்டர் நிலத்தில், ஒரு டன் நெல் கிடைக்கும். ஆனால் ஒரு குடும்பத்திற்கு உணவு பாதுகாப்பிற்காக தேவைப்படும் நெல்லின் அளவு 2.4 டன் ஆகும்.
செம்மை நெல் சாகுபடி முறையை பின்பற்றுவது மூலம் நெல்லின் மகசூலை, வழக்கமான 1-2 டன் / ஹெக்டர்லிருந்து 8-10 டன் /ஹெக்டர் வரை அதிகப்படுத்தலாம். ஆனால் இந்த பகுதியில், இந்த முறையை கடைபிடிப்பதற்கு சில சவால்களை எதிர் கொள்ள வேண்டும். அவையாவன;
1. திருந்திய நெல் சாகுபடி முறையில், குறிபிட்ட நாற்று வயதில் நடவேண்டும். மேலும், நிலத்தை உளர்த்தல் மற்றும் ஈரப்பதத்திற்கு மாறி மாறி கொண்டு வரவேண்டும். இதை மழையை சார்ந்த சாகுபடியில் கடைபிடிப்பது கடினம்.
2. திருந்திய நெல் சாகுபடியை 3-4 வருடங்கள் கடைபிடித்த பின்னரும், மண் வளத்தை மற்றும் நிலையான மகசூலையும் பெறுவது கடினம்.

பஸ்தர் மற்றும் சட்டிஸ்கரின் வடமலை பகுதிகளில் வெற்றிகரமாக, இந்த முறையை தொடங்குவதற்கு உறுப்பினர்கள், கீழே குறிப்பிட்டு உள்ளவைகளுக்கு கருத்தினை தெரிவிக்குமாரு கேட்டுக் கொள்கிறேன்.

  • இந்த பகுதியின் விவசாயிக்கு எந்த விதமான சாகுபடி நுட்பங்களை செம்மை நெல் சாகுபடி முறையில் பின்பற்றலாம்.
  • போதுமான மகசூல் தொடர்ந்து கிடைப்பதற்கு எந்த விதமான இயற்கை வேளாண் முறையை பின்பற்றலாம். விவாயிகள் இரசாயன உரம் மற்றும் பூச்சிகொல்லிகளை சற்றும் உபயோகிக்காமலையே இருக்க முடியுமா?
  • எந்த விதமான குறைந்த விலை கருவிகள், இம்முறையில் நடுவதற்கும் களை எடுப்பதற்கும் உபயோகிக்கலாம்.
  • நிறைய விவசாயிகள் உயர் மற்றும் சற்றும் குறைந்த நில பகுதிகளில் விதைகளை தூவும் முறையை பின்பற்றுகிறார்கள். எனவே எந்த விதமான செம்மை நெல் சாகுபடி முறையை பின்பற்றினால் இவர்களின் மகசூல் பெருகும்.
  • இம்முறையில், பாரம்பரிய இரகத்தை உபயோகித்து எடுத்த மகசூலின் அளவை உறுபினர்கள் குறிப்பிடவும்.

இந்த கேள்விகளுக்குபதில் அளித்தவர்கள்

  • அருண் ஜின்டால், சொஸைட்டி பார் சஸ்டைனபில் டெவளப்மெண்ட் (SSD), கரோலி, இராஜஸ்தான்.
  • தெபஸிஸ் மொகபத்ரா, OXFAM GB ஆப்கானிஸ்தான், காபூல், ஆப்கானிஸ்தான்
  • ராஜ் கங்குலி, கன்சல்டன்ட், புது டெல்லி
  • ஹிம்மான் தக்கார், சவூத் ஆசியா நெட்வோர்க் ஆன் டாம்ஸ், ரிவர்ஸ், பீப்புள், புதுடெல்லி
  • K.K.டத்தா, நேஷனல் சென்டர் ஃபார் அக்ரிகல்சரல் எக்னாமிக்ஸ் அன்ட் பாலிஸி ரிசெர்ச், புதுடெல்லி.
  • சதீஷ் சிரிவஸ்தா, ஸ்டெட் நீயூடிரிஷன் கன்சல்டண்ட், RCH/NRHM மத்திய பிரதேசஷ்
  • பிரபாத் குமார், ஏசியன் இன்ஸ்டியூட் ஆஃ டெக்னாலோஜி, தாய்லாந்து
  • நார்மன் உப்ஹாப்ஃ, கார்னல் பல்கலைகழகம், நீயு யார்க் யூனைட்ட ஸ்டேட்ஸ்.

பதில்களின் தொகுப்பு

அனுபவங்களின் தொகுப்பு

பதில்களின் தொகுப்பு
செம்மை நெல் சாகுபடி (SRI) முறையானது, அதிக மகசூல் மற்றும் வேறுசில நன்மைகளையும் அளிக்கவல்லது. அவையாவன, குறைந்த நீர் மற்றும் ஆட்கள் தேவைப்படுவதால் குறைந்த முதலீடு, விரைவான பயிர் முதிர்ச்சி, உயிர் மற்றும் உயிரற்றவவைகளால் உண்டாகும் தாக்கத்திற்கு எதிர்ப்புதன்மை, அதிக அறவை சதவீகிதம் மற்றும் பல. மானாவரி செம்மை நெல் சாகுபடி முறைக்கான தொழில்நுட்பங்களை, இதேமாதிரியான பகுதிகளில், இம்முறையை கடைப்பிடித்தவர்களின் அனுபவங்களை உறுப்பினர்கள் பகிர்ந்து கொண்டனர். இந்த அனுபவங்கள், சட்டீஸ்கர் போன்ற இடங்களில் செம்மை நெல் சாகுபடி முறையை மேற்கொள்ள பெரிய அளவில் பயன்படும்.
விடையளித்தவர்கள், இப்பகுதிகளில் முக்கிய சவாலே, நீர் மேலாண்மை என்றனர். மழைசார்ந்த விவசாயத்தில், குறிபிட்ட காலத்தில் நாற்று நடுதல் மற்றும் நிலத்தை உலர்த்துதல் மற்றும் நீர் பாய்ச்சுதல் கடினமான செயலாகும். இந்த சாவலை எதிர்கொள்ள, 25 வருடங்களுக்கு முன் மடகாச்கரில், ஹென்றி டி லாலானியால், வடிவமைக்கபட்ட, செம்மை நெல் சாகுபடி முறையில் சில மாறுதல்களை கொண்டுவர வேண்டும் என்ற கருத்தை கூறியுள்ளனர்.
குறிப்பிட்ட நேரத்தில், நடுவதற்கான சவாலை எதிர்கொள்ளுவதற்கு, மேற்கு வங்காளத்தில் கையாலும் முறையை பின்பற்றலாம் என்று உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர். மேற்கு வங்காளத்தில், விவசாயிகள் 10 நாட்கள் இடைவெளியில், 3 நாற்றாங்காலை விதைப்பார்கள். இதனால், சரியான வயதையுடைய (5-15 நாட்கள்) நாற்றை நடுவதற்கான வாய்ப்பு, 6வாரங்கள் வரை கிடைக்கும். இதனால், பருவமழையை பொறுத்து, குறிப்பிட்ட காலத்தில் நடலாம். ஆனால், இம்முறையில் 70% விதைகளையே சேமிக்க முடியும் (செம்மை நெல் சாகுபடியில் 90% விதையை சேமிக்கலாம்). நாற்றாங்கால் வீண் அடிக்கப்பட்டாலும், மகசூலில் கிடைக்கும் லாபத்தினால், அந்த நஷ்டம் பெரிதாக தெரியாது.

25 x 25 சென்டிமீட்டர் இடைவெளியை, குறித்து கொண்டு, முளைத்த விதையை நேரடியாக நிலத்தில் விதைக்கலாம். இதில் தாய்லாந்தில் கையாளப்படும் விதை தெளிப்பு முறையை பின்பற்றி, விதைத்த 3 - 4 வாரங்களில், செடியின் அடர்த்தியை குறைத்துவிடலாம். நிலத்தின் அளவு மற்றும் வேலையாட்கள் கிடைப்பதை பொறுத்து, விவசாயிகள் நடுவதையோ அல்லது நேரடி விதைப்பையோ பின்பற்றலாம். ஒரு ஹெக்டருக்கு மேல் உள்ள நிலத்திற்கு நேரடி விதைப்பே சரியானதென்று உறுப்பினர்கள் கருத்து தெரிவேத்னர். இது தொடர்பாக இலங்கையில், செம்மை நெல் சாகுபடி முறையை பின்பற்றி கிடைத்த மகசூலை பற்றியும் குறிப்பிட்டுள்ளனர்.

நீர் மேலாண்மை, இடஅமைப்பு, மழைவீச்சி, மண் நீர் பிடிதிறன் ஆகியவற்றை பொருத்து இருப்பதால், மானாவாரி திருந்திய நெல் சாகுபடியில், நீர் கட்டுபாடு கடினமாகும். ஆகையால், இப்பகுதியில் நீரை நீண்டநாட்கள் தேங்கவிடக்கூடாது. அதிகப்படியான நீரை வெளியேற்ற மட்டமான நிலத்தையும், நிலத்தை சுற்றிவடிகால் அமைப்பையும் ஏற்படுத்த வேண்டும் என்று கருத்தை தெரிவித்துள்ளனர். உறுப்பினர்கள், மானாவரி முறையில், செடியை வளர்ப்பதைவிட, வேரை வளர்க்கவேண்டும் என்ற கருத்தை தெரிவித்துள்ளனர். எனவே, வேரை அடிக்கடி ஆய்வு செய்யவேண்டும். மேலும் மண் மேலாண்மைக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். ஏன்னென்றால், இதுவே நீர் மேலாண்மைக்கு அவசியமாகும்.
இப்பகுதியில், மண் வளம் மற்றும் நிலைக்கும் மகசூலை, பராமரிக்கும் சவாலை எதிர்கொள்வதற்கு, இயற்கை உரங்கள் ஒரு முக்கியமான விஷயம் என்று கூறியுள்ளனர். மடகாஸ்கர் நாட்டின் அனுபவங்களை எடுத்துரைத்து, உறுப்பினர்கள், இயற்கை உரங்கள் (குறிப்பாக நெல் வைக்கோல்) மண்ணில் சேர்த்தல், மகசூலை அதிகமாகவும் மற்றும் நிலையானதாகவும் ஆக்கும் என்று கூறியுள்ளனர். மேலும் விரைவாக விளையக்கூடிய பயறு வகை பயிர்களான செஸ்பேன்யா, கிளைரிசிடா போன்றவைகளை சாகுபடி செய்தல் நிலத்தில் தழைச்சத்து அதிகமாக ஏதுவாகும். மேலும் தாய்லாந்தில், நேரடியாக விதைக்கும் SRI யில், வரிசை இடைவெளியில், பச்சைபயிரை தூவி அதை விதைத்த 35 நாட்களில் மண்ணுக்குள் மடக்கிவிடுதல் வழக்கமாக உள்ளது என்றும் கூறியுள்ளனர்.
பஸ்தர் மற்றும் சட்டீஸ்கரின் வடபகுதியில் உள்ள விவசாயிகளின் சூழ்நிலையை கருத்தில் கொண்டு, கலந்து ஆலோசிப்பவர்கள், இரசாயன உரங்கள் மற்றும் பூச்சிகொல்லிகளை உபயோகிக்க வேண்டாம் என்று கூறியுள்ளனர். மேலும் அவர்கள் SRI முறையில், எரு உரங்களை மட்டுமே உபயோகப்படுத்த வேண்டும் என்ற அவசியமில்லையென்றும், வளம் குறைவாக உள்ள மண்ணில், இரசாயன உரங்கள் பயன்படுத்தபடுவதையும் கூறியுள்ளனர். மேலும், மக்குப்பையை அதிகமாகவும் நேர்த்தியாகவும் உபயோகப்படுத்தினால், வழக்கமான மகசூலைவிட அதிகமாக கொடுக்கும், என்று கூறியுள்ளனர். மேலும், அவர்கள், மண்ணை வளர்த்தல் தான், மண்ணானது செடியை வளர்க்கும் என்றும் வலியுறுத்தியுள்ளனர். மேலும், பயிர் மேலாண்மையை மிக நேர்த்தியாக கையாண்டால், பூச்சி மற்றும் நோய் பயிரை தாக்காது. இதனால் இரசாயன பொருள்களை உபயோகப்படுத்த அவசியமில்லை என்றும் கூறியுள்ளனர்.

பல இடங்களில், பாரம்பரிய இரகங்கள் மிகச்சிறந்த மகசூலை, செம்மை நெல் சாகுபடி முறையில் கொடுத்துள்ளதையும், இதனால் பல பாரம்பரிய இரகங்களை இம்முறையில் பரிசோதிக்க வேண்டிய அவசியத்தையும் கூறியுள்ளனர். இலங்கையில், SRI யில், மேம்படுத்தப்பட்ட இரகங்களைவிட, பாரம்பரிய இரகங்கள் சற்றுகுறைந்த மகசூலை அளித்திருந்தாலும், சந்தையில் மதிப்பில் பாரம்பரிய இரகங்கள் அதிக பணம் கொடுப்பதையும் மேற்கோள்காட்டியுள்ளனர். எனவே, விவசாயிகள் நிலம், ஆள், நீர் மற்றும் பொருள் மதிப்பு ஆகியவற்றை கருத்தில் கொள்ளவேண்டும் என்றும் கூறியுள்ளனர்.

இறுதியில் பஸ்தர் விவசாயிகளுக்கான சாகுபடி நுட்பங்கள் பற்றிய கேள்விக்கு, பல நுட்பங்களை ஒன்றாக்கி உருவாக்கவேண்டும், என்று அறிவுரை கூறியுள்ளனர். இதனால் வட்டார பகுதிக்கு ஏற்ப, நாற்றின் வயது, இடைவெளி, ஒரு கொத்தில் செடியளவு, நீர் மேலாண்மை, களையெடுத்தலின் எண்ணிக்கை மற்றும் ஊட்டச்சத்து மேலாண்மை ஆகியவைகளை வகுக்கவேண்டும். மேலும் அறிவியலாளர்கள், பங்குபெறுவோர், விவசாயிகள் இவர்கள் அனைவரும் கலந்து, தகுந்த சாகுபடி நுட்பங்கள் வகுக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.

மொத்தத்தில், செம்மை நெல் சாகுபடியில், நிறைய நன்மைகள் இருப்பதையும், ஆனால் துல்லியமாகவும் சவால்களை நேர்த்தியாகவும் எதிர்கொள்ள வேண்டும் என்றும் கூறியுள்ளனர். முடிக்கும் வகையில், பல இடங்களில், SRI பாசனத்தில் நன்றாக செயல்பட்டதையும், மானாவாரி பகுதியில் வெற்றிகரமான முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதையும் சுட்டிக்காட்டி, சட்டீஸ்கர் விவசாயிகள் இதை உணர வேண்டும் என்பதையும் குறிப்பிட்டுள்ளனர்.

அனுபவங்களின் தொகுப்பு
தேசிய அளவில்
மேற்கு வங்காளம்
மழைக்கு ஏற்பசெம்மை நெல் சாகுபடி, புருளியா மாவட்டம் (நார்மன் உப்ஹாப்ஃ, கார்னல் பல்கலைகழகம், நீயூயார்க், USA)

செம்மை நெல் சாகுபடி செய்த விவசாயிகள், நெல்லில் 7.7 டன் மகசூலை ஒரு ஹெக்டர்க்கு பெற்றுள்ளனர். இந்த பயிரில் பூச்சி மற்றும் நோய்கள் தாக்கியன. மேலும் நடும்பொழுதும் மற்றும் விதைகட்டும் பருவத்தில், வறட்சியும் ஏற்பட்டது. இருந்தபோதும், இந்த வெற்றிக்கு காரணம், அவர்கள் பாரம்பரிய இரகத்தையும், தேவையான இடைவெளி மற்றும் மழை அளவுக்கு ஏற்ப பயிர்த்திட்டத்தை வகுத்துக்கொண்டதாகும்.

தமிழ்நாடு
பாலசுந்தரம்கிராமம், பழனி தாலுக்கா, திண்டுகல் மாவட்டத்தின் விவசாயிகள், செம்மை நெல் சாகுபடிமூலம் போதுமான மகசூலை பெற்றுள்ளனர் (ராஜ் கங்குலி, கன்சல்டண்ட், புதுடெல்லி).

இப்பகுதியில் விவசாயிகள், மக்காச் சோளத்தை பயிரிட்டுவந்தனர். ஆனால் மாநில வேளாண்துறையின் தூண்டுதலால் மிகக்குறைந்த முதலீட்டில், செம்மை நெல் சாகுபடி முறையில் அதிக மகசூலை பெறுகின்றனர். இப்பொழுது இம்முறையில் 14.27 டன் மகசூலை ஒரு ஹெக்டருக்கு கண்டுள்ளனர். இது வழக்கமாக அவர்்களின் மகசூலைவிட இரண்டு மடங்கு ஆகும். நிறைய விவசாயிகள் இம்முறையை இப்பொழுது கடைபிடிக்கின்றனர்.

புதுச்சேரி
என்டியூரில், பெண்விவசாயிகள் செம்மை நெல்சாகுபடி முறையில் சாதனை புரிகின்றனர். (ராஜ்கங்குலி, புதுடெல்லி)

சில பெண்கள், தங்களின் ஒரு பகுதி நிலத்தில் இம்முறையை செய்கிறார்கள். மிகுந்த தயக்கத்துடன் நிலத்தை, இவர்களுக்கு கொடுத்த அவர்களது வீட்டார், பின்னர், SRI முறையை பின்பற்றி, அரை ஏக்கரில் 23.5 மூட்டை நெல்லை அறுவடை செய்ததை கண்டு வியக்கிகின்றனர். வழக்கமாக, ஒரு ஏக்கருக்கு 29 மூட்டை தான் கிடைக்கும். இதனால், அவர்கள் குடும்பம் SRI முறையில் திருப்தியடைந்து, இப்பொழுது தங்கள் மொத்த நிலத்தையும் SRI முறைக்கு மாற்றிவருகின்றனர்.

உலகளவில்
தாய்லாந்து
ஊடு பயிருடனும் SRIமுறையை கையாளலாம். (பிரபாத்குமார், ஏசியன்இன்ஸ்டியுட் ஆஃ டெக்னாலஜி, பேங்காக்)
ஒரு சோதனை திட்டத்தில், SRI முறையை, ஈரபதமான நிலத்திலும், வழக்கமான நீர்கட்டி சாகுபடிமுறையிலும், கடைபிடித்ததில், ஈரப்பத முறை, நீர்கட்டு முறையை போன்றே மகசூல் அளித்தது. SRI முறையில் ஊடுபயிரான, பாசிபயிர், மிகுந்த தழையுடன், மணல் ஈரத்தை பாதுகாப்பும் அளித்தது.

கம்போடியா
நிலையான நெல்மகசூல் (டி.என் அனுராதா, ஆராய்ச்சி ஆலோசகர்)

1190-ல், 28 விவசாயிகள் SRI முறையில், மானாவரி நிலங்களை சாகுபடிசெய்தனர். இது, வழக்கமாக ஒரு ஹெக்டர் மானாவாரி நிலத்தில் கிடைக்கும் மகசூலான 1.65-1.8 டன் காட்டிலும் அதிகமாக, 5டன்/ஹெக்டர் மகசூலை அளித்தது. 2001 லிருந்து, 500விவசாயிகள் இம்முறையை பின்பற்றினர். 393 விவசாயிகளில், பாதிக்கும் மேற்பட்டோர், 3 டன்/ஹெக்டர் மகசூலைப் பெற்றனர். சுமார் 57 பேர், 5 டன்னும், 3 பேர் 10டன்/ஹெக்டரும் பெற்றுள்ளனர்.

Sunday, September 13, 2009

செம்மை நெல் சாகுபடி

செம்மை நெல் சாகுபடி பற்றிய முறையான ஆய்வு 2002 - 2003 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. ஆந்திர பிரதேசம், தமிழ்நாடு, மேற்கு வங்காளம், ஜார்கண்ட், சட்டிஸ்கர், குஜராத் போன்ற மாநிலங்களில் திருந்திய நெல் சாகுபடி முறை செயல்படுத்தப்பட்டு வருகிறது.

ஆந்திரப்பிரதேசம்

வேர்ல்ட் வைட் பண்ட் மற்றும் ஆந்திர வேளாண் பல்கலைக் கழகம் இணைந்து திருந்திய நெல்சாகுபடி முறையை மதிப்பீடு செய்ய செயல் திட்டம் தீட்டின. கடந்த பீசானம் பருவத்தில் மேற்கொள்ளப்பட்ட இச்செயல் திட்டம் தற்பொழுது முடிவுக்கு வந்துள்ளது. இச்செயல்திட்டம் 11 மாவட்டங்களில் பரவியுள்ள 250 விவசாயிகளுக்கு பயன் அளித்துள்ளது. வயல்வெளிப் பார்வையின்போது விவசாயிகளிடம் இம்முறை பற்றிய கலந்தாய்வு நடத்தப்பட்டது. திருந்திய நெல் சாகுபடியின் மூலம் நெல்லுக்கு செலவிடப்படும் நீரின் அளவு குறைந்துள்ளதாகவும், விளைச்சல் அதிகரித்துள்ளதாகவும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர் (வினோத் கெளட், வேர்ல்ட் வைட் பண்ட் - செய்தி அறிக்கை இதழ் எண் 15. ஜீன் 2005). 2003 ஆம் ஆண்டு கார் பருவத்தில் வயல் வெளி செயல் விளக்கங்கள் மூலம் 22 மாநிலங்களில் திருந்திய நெல்சாகுபடி முறை மேற்கொள்ளப்பட்டது. விதையின் அளவு ஒரு எக்டருக்கு 5 கிலோவாக இருப்பதால் 95% விதையினை தங்களால் சேமிக்க முடிந்தது என்றும் பயிருக்கு செலுத்தப்படும் தண்ணீரின் அளவு 50% குறைந்துள்ளதாகவும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர். உருளை கருவியால் களையெடுப்பதிலும், இளநாற்றை நடுவதிலும், தண்ணீர் பராமரிப்பிலும் சில சிரமங்கள் உள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். ஆனாலும் திருந்திய நெல் சாகுபடி செய்யப்பட்ட வயல்களில் பயிர்கள் வளமாக இருப்பதாக தெரிவித்தனர்.

மகபூப்நகர் மாவட்டத்தில் உள்ள திரு தாமோதர் ரெட்டி என்பவர் இம்முறையை செயல்படுத்தி 30 மூட்டைகள் அதிகமான மகசூலை பெற்றுள்ளார். ஆனால் இவர் இதற்காக செய்த ஆரம்ப முதலீடு ரூ. 3000 மட்டுமே ஆகும். அவரைப் போலவே மற்ற விவசாயிகளும் இம்முறையின் மூலம் மிகுந்த மகழ்ச்சி அடைந்துள்ளனர் என்று செல்வி உமாமகேஸ்வரி கடந்த மே 10 ஆம் தேதி மகபூப்நகர் மாவட்டத்தில் உள்ளராமனப்பாடுகிராமத்தில் நடந்த திருந்தி நெல் சாகுபடி உழவர் தினத்தில் தெரிவித்துள்ளார்.

வாசன் மற்றும் சி.எஸ்.ஏ இணைந்து வேர்ல்ட் வைட் பண்ட் - இக்ரிசாட் செயல்திட்டத்தின் உதவியுடன் ஆந்திரமாநிலத்தில் உள்ள 1000 விவசாயிகளுடன் பணியாற்றி, விவசாயிகளின் புதிய தொழில்நுட்பங்களை ஊக்குவித்தனர்.

இந்தியாவில் முதன்முதலாக ஆந்திர மாநிலத்தில் திருந்திய நெல் சாகுபடி பற்றிய கொள்கை ஏற்படுத்தப்பட்டது. திருந்திய நெல் சாகுபடியின் வெற்றியை கண்டு, ஆந்திர முதலமைச்சரும், வேளாண் அமைச்சரும் திருந்திய நெல் சாகுபடியை பிரபலப்படுத்துவதற்கு ரூ. 4 கோடி நிதியுதவியுடன் கூடிய திட்டத்தை அறிவித்தனர். திருந்திய நெல் சாகுபடி முறையினை பற்றிய கலந்தாய்வை ஹைதராபாத்தில் உள்ள திரு. நாகரத்தினம் நாயுடு அவர்களின் பண்ணையில் நவம்பர் 15, 2005 ல் வேர்ல்ட் வைட் பண்ட் நடத்தியது (தி ஹிந்து நாளிதழ், நவம்பர் 16, 2005 ஆந்திர பிரதேசம்). அதன் பின்னரே 4 கோடி ரூபாய் செயல்திட்டம் அறிவிக்கப்பட்டது.

இதில் முதல் கட்ட நடவடிக்கையாக

1. விவசாயிகளுக்கு திருந்திய நெல் சாகுபடியை ஒவ்வொரு கிராமங்களிலும் செயல்முறை விளக்கத்துடன் பயிற்சி அளிப்பதற்காக பெருந்திட்டம் தீட்டபப்ட்டது.

2. உருளை கருவிகள் மற்றும் குறியீடுகளை விவசாயிகளுக்கு 50% சதவீத மானியத்துடன் அளித்தல்

3. திருந்திய நெல்சாகுபடி விவசாயிகளுக்கு இலவச மின்சார நிறுத்தத்தில் இருந்து விலக்கு அளித்தல்

தமிழ்நாடு

கிள்ளிகுளத்தில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின், வேளாண்மை கல்லூரியில் 2003 - 2004 திருந்திய நெல்சாகுபடி பற்றிய ஆய்வு நடத்தப்பட்டது. இதில் 53% நீரை திருந்திய நெல் சாகுபடி முறையின் மூலம் சேமிக்க முடியும் என்று தெரிய வந்துள்ளது. இந்த கணக்கெடுப்பில், 21 நாட்கள் இளவயதுடைய நாற்றுகள் 15 x 10 செ.மீ என்ற இடைவெளியில் சாதாரணமாக நடவு செய்யப்பட்டது. ஆனால் திருந்திய சாகுபடி முறையில் 14 வயதுடைய இளநாற்றுகளை 20 x 20 செ.மீ என்ற இடைவெளியில் நடவு செய்தனர். திருந்திய நெல் சாகுபடி முறையில் 2.5 செ.மீ உயரத்திற்கு நீர் கட்டப்பட்டது. பஞ்சு கட்டும் பருவம் வரை, முதலில் கட்டிய நீர் வடிந்து மண்ணின் மேல் பரப்பில் சிறு கீரல் வெடிப்புகள் தோன்றிய பின் மறுமுறை நீர் கட்டப்பட்டது.

ஆனால் சாதாரண முறையில் 5 செ.மீ உயரத்திற்கு நீர் நிறுத்தப்பட்டது. விளைச்சலை ஒப்பிட்டு பார்த்தபொழுது, திருந்திய நெல் சாகுபடி முறையில் 28% அதிக விளைச்சல் கிடைத்தது (3, 892 கிலோ / எக்டர்).

தமிழ்நாடு மாநில நிதியுதவியுடன் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகம் திருந்திய நெல் சாகுபடி முறையை இரு வயல்வெளி திட்டம் மூலம் மதிப்பீடு செய்தது. இதில் தாமிரபரணி பாசனப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட மதிப்பீட்டில் திருந்திய நெல் சாகுபடியின் மூலம் 7227 கிலோ/எக்டர் மகசூல் கிடைத்துள்ளதாக தெரியவந்துளள்து. ஆனால் தற்போதைய சாதாரண சாகுபடியின் மூலம் 5637 கிலோ/எக்டர் மகசூல் மட்டுமே கிடைத்தாக தெரிவித்துள்ளனர். திருந்திய நெல் சாகுபடி முறையில் சராசரியாக 1 எக்டருக்கு 1570 கிலோ மகசூல் அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளனர். மேலும் சுமார் 31 விவசாயிகள் திருந்திய நெல் சாகுபடி முறையை பின்பற்றி ஒரு எக்டருக்கு 8 டன்னுக்கு மேல் மகசூல் பெற்றுள்ளனர்.

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் திருந்திய நெல் சாகுபடி முறையை பரிந்துரை செய்துள்ளது. 2004 ஆம் ஆண்டில், அரசு வேளாண் துறை நெல்சாகுபடி செய்யப்படும் பகுதிகளில் திருந்திய நெல் சாகுபடி பற்றிய செயல்முறைகளை மேற்கொண்டது.

மேற்கு வங்காளம்

மேற்கு வங்காளத்தின் புருலியா மாவட்டத்தில் உள்ள ஜால்தா மற்றும் பல்ராம்பூர் ஒன்றியங்களில் திருந்திய நெல் சாகுபடி அனுபவம் பற்றி ஆய்வைபிரதாண்அமைப்பு நடத்தியது. இந்த ஆய்வு கார் பருவத்தில் சுமார் 110 விவசாயிகளிடம் நடத்தப்பட்டது. இந்த ஆய்வில், திருந்திய நெல் சாகுபடி முறையின் செயல் முறைகளில் பாதியை கடைபிடித்தால் கூட 32% அதிக மகசூல் பெறமுடியும் என்று தெரிவித்துள்ளனர். பல்ராம்ப்பூரில் 59 பாத்திகளில் திருந்திய நெல் சாகுபடி மற்றும் சாதாரண சாகுபடி ஆகிய இருமுறைகளின் மகசூல் ஒப்பீடு செய்யப்பட்டது. இதில் ஒரு எக்டருக்கு திருந்திய நெல் சாகுபடி முறையில் 6,282 கிலோவும் சாதாரண சாகுபடியில் 4194 கிலோவும் கிடைத்தது. அதாவது திருந்திய நெல் சாகுபடியில் 49.8% அதிக மகசூல் கிடைத்துள்ளது. மேலும் வைக்கோல் உற்பத்தியும் திருந்திய நெல்சாகுபடியில் (5150 கிலோ/எக்டர்) சாதாரண முறையைவிட (3456 கிலோ/எக்டர்) அதிகமாக கிடைத்தது.

ஆனால் ஜால்தா ஒன்றியத்தில் 11.9% அதிக மகசூலை மட்டுமே பெறமுடிந்தது. வறட்சியினாலும், ஒரே ஒரு களையெடுத்ததனாலும், சற்று வயதான நாற்றுகளை நடவு செய்ததாலும் விளைச்சல் குறைந்திருந்தது.

குஜராத்

குஜராத் வேளாண்மை பல்கலைக்கழகம் மேற்கொண்ட ஆய்வில், திருந்தி நெல் சாகுபடியில் 5,813 கிலோ/எக்டர் மகசூலும், சாதாரண முறையில் 5840 கிலோ/எக்டர் மகசூலும் கிடைத்தது. ஆனால் 46% நீர் மட்டும் செலவிடப்பட்டது,

பாண்டிச்சேரியில் ஆரோவில்லில் உள்ள அண்ணபூர்ணா கிராமத்தில் திருந்திய நெல் சாகுபடி முறை பற்றிய சோதனை நடத்தப்பட்டது. பின்னர் ம.சா. சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம் இச்சோதனையை நடத்தியது.

பிரதாண்அமைப்பு ஜார்கண்ட் மாநிலத்திலும் திருந்திய நெல் சாகுபடியை செயல்படுத்தியது.

பஞ்சாப் மாநிலத்தில் ஜெ.டி.எம். சங்கம், குறைந்த அளவு நீரை பயன்படுத்தி நெல் சாகுபடி செய்ய பல்வேறு யுக்திகளை புகுத்தி வருவதாக சுதீந்தர் ஷர்மா கூறியுள்ளார். திருந்திய நெல் சாகுபடி முறையின் மூலம் 60-70 % தண்ணீரை சேமிக்க முடியும் என்றும் இது நீர் பற்றாக்குறைக்கு ஒரு தீர்வாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.