Saturday, July 3, 2010

சொட்டு நீர் பாசன அமைப்பு



பொது பராமரிப்பு:

சொட்டுவான்களின் செயல்பாடு, ஈரப்பரப்பு, குழாய், அடைப்பான் இணைப்புகள் போன்றவற்றை நாள்தோறும் மேற்பார்வையிட்டு பராமரிக்க வேண்டும்.

சொட்டுவான்கள், நுண்குழாய்கள் மற்றும் பக்கவாட்டுக் குழாய்கள் அமைந்துள்ளதை சரி செய்ய வேண்டும். இணைப்பு விலகியிருந்தால், நுண்குழாய்களை சரியான இடத்திலும் பக்கவாட்டுக் குழாய்களின் வளைவுகளை நேராகவும் வைக்க வேண்டும். வடிகட்டி மூடி, அடைப்பான்களில் நீர்க்கசிவை நாள்தோறும் பார்த்து சரி செய்ய வேண்டும்.

வடிகட்டி அமைப்பின் பராமரிப்பு:

சொட்டுநீர் பாசனத்தின் இதயம் போன்ற பகுதி வடிகட்டி. இவ்வமைப்பு பழுதடைந்தால் சொட்டுநீர் பாசன அமைப்பின் அனைத்து பகுதிகளிலும் பழுது ஏற்படும். அழுத்தமானியின் உதவியால் மணல் மற்றும் வலை வடிகட்டியின் ªச்யல்திறனை கண்காணிக்கலாம்.

மணல் வடிகட்டி அமைப்பின் பராமரிப்பு:

ஒவ்வொரு நாளும் சொட்டுநீர் பாசன அமைப்பை இயக்கும் போதும் குறைந்த பட்சம் 5 நிமிடங்களுக்கு பின் கழுவும் அமைப்பை இயக்கி முதல் நாள் பாசனத்தில் வடிகட்டப்பட்ட கசடுகள் மற்றும் மண்துகள்களை வெளியேற்ற வேண்டும். வாரம் ஒரு முறை, கழுவும் அமைப்பை இயக்கும் வேளையில், மணல் வடிகட்டியின் மூடியை திறந்து, கைகளால் கலக்கி வடிகட்டப்பட்ட நீர் மற்றும் கசடுகளை உடன் வெளியேற்ற வேண்டும்.

வலை / திரை வடிகட்டி அமைப்பின் பராமரிப்பு:

தினமும் வடிகட்டி அமைப்பில் உள்ள கசடு வெளியேற்றியை திறந்து விட வேண்டும். வடிகட்டியை திறந்து வலை/திரையை வெளியே எடுத்து அதை ஓடும் நீர் அல்லது அழுத்தக்காற்றால் சுத்தம் செய்ய வேண்டும். வலையை வடிகட்டி அமைப்புடன் இணைக்கும் இரப்பர் அமைப்பையும் கவனமாக கழுவ வேண்டும். இதை சரியாக கையாளவில்லை என்றால் இரப்பர் அமைப்பு கிழியும் வாய்ப்புள்ளது.

நுண்குழாய் மற்றும் பக்கவாட்டுக் குழாய்களின் பராமரிப்பு:

சில நேரத்தில் நுண்ணிய மண் துகள்கள் சரியாக வடிகட்டப்படாமல் தப்பி நுண்குழாய்கள் மற்றும் பக்கவாட்டுக் குழாய்களில் படியும் வாய்ப்புள்ளது. மேலும் நீரில் கலந்துள்ள பாசிகள் மற்றும் பாக்டீரியா, மண்துகள்கள் ஆகியவை குழாயின் கவர்களுடன் வேதியியல் வினை புரிந்து குழாய்களில் படிவு ஏற்பட்டு அடைப்பு ஏற்படுவதும் உண்டு.

இம்மாதிரி படிவுகளை துணைகுழாய்களின் முடிவில் உள்ள கசடு வெளியேற்றியைத் திறந்தும் பக்கவாட்டுக் குழாய்களின் முடிவில் உள்ள கடைமுனை அமைப்பை திறந்தும் வெளியேற்றலாம். குழாய்களில் படிந்துள்ள உப்பும் வெளியேற வாய்ப்புள்ளது . கசடு வெளியேற்றி மற்றும் கடைமுனை அடைப்பை சுத்த நீர் வெளியேறும் வரை திறந்து வைக்க வேண்டும்.

இரசாயன முறை பராமரிப்பு:

நீரல் கரைந்துள்ள கார்பனேட், பை கார்பனேட், இரும்பு, கால்சியம், மாங்கனீஸ், பாசி, பாக்டீரியா, உப்புகள், கனிமங்கள் ஆகியன குழாய்களுடன் வினை புரிந்து உப்பு படிவ அடைப்பை ஏற்படுத்துகிறது. இவ்வடைப்பை குளோரின் அல்லது அமிலம் கலத்தல் மூலம் கலையலாம். இரசாயன முறையை கையாளும் முன் நீரை பரிசோதித்து, நீரில் கரைந்துள்ள உப்புகள், கனிமங்கள், பாசி மற்றும் முறையை தக்க அளவில் தேர்ந்தெடுக்க வேண்டும்

மழைக்காலத்தில் அமைப்பின் பராமரிப்பு:

மழைக்காலத்தில் சொட்டுநீர் பாசன அமைப்பை பயன்படுத்தாமல் விடுதல் கூடாது. அப்படிச் செய்தால் குழாய்களிலும், சொட்டுவான்களிலும் இயற்பியல், இரசாயன மற்றும் உயிரியல் அடைப்புகள் ஏற்படும். அதனை தடுக்க மழைக்காலங்களில் கூட தினமும் 15 நிமிடங்களாவது சொட்டு நீர்ப்பாசனம் செய்யப்பட வேண்டும்.

அரசின் உதவித் திட்டங்கள்

எல்லா சிறப்புகளையும் கொண்ட சொட்டுநீர் பாசன அமைப்பின் ஒரே குறைபாடு அதிகப்படியான தொடக்க முதலீடு தான். நடுத்தர விவசாயிகளான நாம் விதை,உரம் போன்றவை வாங்கவே சிரமப்படும் வேளையில் அதிக தொடக்க முதலீடு கொண்ட சொட்டுநீர் பாசன அமைப்பை அமைப்பது இயலாததாகிறது.

விவசாயிகளின் நலனை காக்கவும், நாட்டின் வளத்தை காக்கவும் மத்திய மற்றும் மாநில அரசு சொட்டுநீர் பாசன அமைப்பை அமைப்பதற்கு 1991&92 முதல் மான்யம் வழங்குகிறது. சிறு, குறு, பெண், தாழ்த்தப்பட்ட, ஆதிதிராவிட, பழங்குடி வகுப்பினரைச் சார்ந்த விவசாயிகளுக்கு சொட்டுநீர் பாசன அமைப்புக் கருவிகள் தொகையில் 90% அல்லது ஒரு எக்டேருக்கு ரூ.25,000/& இதில், எது குறைவோ அத்தொகை மானியமாக வழங்குகிறது.