Showing posts with label Government help. Show all posts
Showing posts with label Government help. Show all posts

Wednesday, September 9, 2009

மாற்று முறை பயிர் சாகுபடி மேற்கொள்ள விவசாயிகளுக்கு கலெக்டர் வேண்டுகோள்

கலெக்டர் சண்முகம் பேசியதாவது: விவசாயத் தொழில் என்பது பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்து மேற்கொள்ளப்பட்டு வரும் தொழிலாகும். இந்த விவசாய சாகுபடி தொழிலில் பல சோதனைகள் ஏற்பட்டாலும் அவ்வப்போது சின்ன சின்ன சாதனைகளை விவசாயிகள் படைத்து வருகின்றனர். நாட்டில் பல தொழில்களில் பல பதவிகள் இருந்தாலும் நிலையான பதவி என்றால் அது விவசாயி என்ற பதவி தான். தற்போதைய விவசாய சாகுபடியில் தட்பவெட்ப நிலை, பருவ கால சூழ்நிலையும் மாறி வருகிறது. காலம் கடந்து மழை பெய்வது, கடல் சீற்றம், கடல் உள்வாங்குவது போன்ற இயற்கை சூழ்நிலையால் விவசாயம் பல பிரச்னைகளை சந்தித்து வருகிறது. இன்றைய கால கட்டத்தில் நமது பகுதியில் நல்ல மழை பெய்து சாகுபடி செழித்திருக்க வேண்டும். ஆனால், மழை பொய்ததால் நிலத்தடி நீர் ஆதாரம் குறைந்து வருகிறது. நம் நாட்டில் நீர்வளம் அதிகம் உள்ள 40 சதவிகித நிலப்பரப்பில் நீர் ஆதாரத்தை கொண்டு விவசாயம் செய்யப்படுகிறது. மீதமுள்ள 60 சதவிகித நிலப்பரப்பில் மானாவாரி சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. தற்போது விவசாயத்தில் பருவகால சவால்களை அதிகம் எதிர்கொள்ள வேண்டியுள்ளது. அதற்கேற்றவாறு திட்டங்களையும் நாம் வகுக்க வேண்டியுள்ளது.
பருவகால மாற்றத்தால் மட்டும் விவசாயம் குறைந்து போகவில்லை. புகை, காற்று, ஓசோன் படலம் உள்ளிட்ட இயந்திரங்களை பயன்படுத்துவதாலும் பருவ சூழல் மாறி விவசாயம் குறைந்து வருகிறது.
விவசாயத்தை பெருக்கும் வகையில் 1968ம் ஆண்டு முதல் சுவாமிநாதனின் அறிவுரைப்படி ரசாயன விவசாயத்தை நாம் கையாண்டு வருகிறோம். ஒருங்கிணைந்த வேளாண் திட்டத்தால் விவசாயத்தை மேம்படுத்தி வருகிறோம். தற்போது சாகுபடி செய்யப்பட்ட விளைபொருள்களை நாம் சந்தை நிலவரத்துக்கு ஏற்றவாறு சேமித்து வைத்து விற்பனை செய்ய பழகி கொள்ள வேண்டும். தற்போது விவசாயத்தில் நாம் இரண்டு பிரச்னைகளை எதிர்கொண்டு வருகிறோம். முதலில் ரசாயனங்களையும், அதற்கு ஏற்ற உரங்களையும் பயன்படுத்துவதால் மனித உடல்களுக்கு தீங்கு ஏற்படுகிறது. இரண்டாவதாக நாம் ஒரே மாதிரியான சாகுபடி பயிரை தேர்ந்தெடுப்பது.
விவசாயிகள் ஒவ்வொரு காலத்திலும் மாற்றுமுறை சாகுபடியை மேற்கொள்ள வேண்டும். நிலத்தில் சாகுபடி செய்த உடன் நிலத்தை ஆறப்போட்டு மீண்டும் கால இடைவெளி விட்டு வேறு பயிர் சாகுபடி செய்தால் பூச்சிகள் அழிந்துவிடும். அல்லது தொடர்ந்து ஒரே மாதிரியான விவசாயம் செய்தால் அதனை தாக்கும் பூச்சிகளும் அப்படியே நிலத்தில் தங்கி விவசாயத்தை பாதிக்கும் வகையில் தாக்கி வரும். உலகத்தில் மக்கள் தொகை பெருக்கத்துக்கு ஏற்ப உணவு உற்பத்தியை நாம் அதிகப்படுத்த வேண்டிய தருணத்தில் உள்ளோம். இயற்கை முறையில் சாகுபடி செய்வது தற்போது அதிகரித்து வருகிறது. வயலில் சாகுபடியின் போது கிடைக்கும் அனைத்து பொருள்களையும் தானியங்களை தவிர மற்றவற்றை நிலத்துக்கே கொடுத்துவிட வேண்டும். ரசாயன உரங்களை பயன்படுத்தாமல் சில முன்னோடி விவசாயிகள் விவசாய சாகுபடியில் வெற்றி பெற்று வருகின்றனர். அதேபோல் அதிகமான விவசாயிகள் இயற்கை சாகுபடியிலும், மாற்றுமுறை பயிர் சாகுபடியிலும் ஈடுபட்டு உணவு உற்பத்தியை அதிகரிக்க வேண்டும். இவ்வாறு கலெக்டர் சண்முகம் பேசினார். இந்திய உணவு கழக ஆலோசனை குழு உறுப்பினர் குத்தாலம் கல்யாணம், மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலர்கள் கல்யாணசுந்தரம், அன்பழகன், திருவிடைமருதூர் யூனியன் தலைவர் ராமலிங்கம், துணைத் தலைவர் இளங்கோவன், ஆர்.டி.ஓ., செங்குட்டுவன், வானொலி உழவர் சங்கத் தலைவர் கிலி சுப்பிரமணியன் உள்பட பலர் பங்கேற்றனர்.

Tuesday, September 8, 2009

தோட்டக்கலை பயிர் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு உதவி

காய்கறி, மலர், பழங்கள் போன்ற தோட்டக்கலை பயிர்களை சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு அரசு பல உதவிகளை செய்கிறது.

இது பற்றி திருப்பத்தூர் தோட்டக்கலை உதவி இயக்குனர் பா.இளங்கோவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, திருப்பத்தூர் மற்றும் நாட்டறள்பள்ளி பகுதிகளில் உள்ள காய்கறி சாகுபடி செய்பவர்கள், மலர் சாகுபடி செய்பவர்கள், ா, கொய்யா, சப்போட்டா, நெல்லி, முந்திரி சாகுபடி செய்பவர்கள் அனைவரும் தோட்டக்கலை துறை உதவியுடன் பதிவு செய்து, பயிர் சாகுபடியை அதிக லாபம் உடையதாக செய்திட உரிய வழிமுறைகளை கலந்து பேசி அரசுக்கு பரிந்துரை செய்யலாம். இதில் தோட்டக்கலை துறையின் திட்டங்களின் பயனாளிகள் முக்கிய பங்கு பெறுவர்.

ஒவ்வொரு கிராமத்திலுள் உள்ள விவசாயிகள் தாம் சாகுபடி செய்யும் பயிரை குறிப்பிட்டு, உறுப்பினராக சேர விருப்பக்கடிதத்தை நேரிலோ, தபாலிலோ, தோட்டக்கலை துறை உதவி இயக்குனருக்கு அனுப்ப வேண்டும். பயிர் வாரியாக உற்பத்தியாளர்கள் சங்கம் அமைக்கவும், அதற்குரிய சங்க தலைவர், பொருளாளர் மற்றும் சங்கம் உள்ள இடத்தின் முழு முகவரியும் அரசுக்கு அனுப்பிட அறிவுரைகள் பெறப்பட்டுள்ளது. எனவே தோட்டக்கலை பயிர் சாகுபடி செய்வோர் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளலாம் என்று கூறியுள்ளார்.

கிழக்கு வட்டார விவசாயிகள் கவனத்துக்கு: தோட்டக்கலை பயிர் சாகுபடி செய்ய விவசாயிக்கு மானியத்தில் திட்டங்கள்

மதுரை கிழக்கு வட்டாரத்தில் தோட்டக் கலை தோட்டக் கலைப் பயிர்கள் சாகுபடி செய்ய பல்வேறு மானியத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும், இத்திட்டத்தில் சேர்ந்து விவசாயிகள் பயனடையவேண்டும் எனவும் தோட்டக் கலை (மதுரை கிழக்கு) உதவி இயக்குநர் த. காமராஜ் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதுகுறித்து அவர் விடுத்துள்ள செய்திக் குறிப்பு:
தேசிய தோட்டக் கலை இயக்கத் திட்டத்தின் மூலம் மா, நெல்லி, வாழை ஆகிய பயிர்களில் புதிய தோப்புகள் அமைக்க மானியத் திட்டம் பெறப்பட்டுள்ளது. திட்டத்தில் உயர்ரக ஒட்டுக் கன்றுகளும், திசுவாழைக் கன்றுகளும் வழங்கப்பட உள்ளன.

மா, நெல்லி சாகுபடிக்கு 75 சதம் மானியமாக 1 ஹெக்டருக்கு ரூ. 11,250 மதிப்புள்ள ஒட்டுச் செடிகள், உரங்கள், மருந்துகள் அனைத்தும் மானியமாக வழங்கப்படும்.

வாழை சாகுபடி செய்துள்ள விவசாயிகள் 50 சதம் மானியத்தில் ஹெக்டேருக்கு ரூ. 7,500 மதிப்புள்ள இடுபொருள்களை மானியமாகப் பெற்றுக்கொள்ளலாம்.
மல்லிகை சாகுபடிக்கு சிறு, குறு விவசாயிக்கு 50 சதம் மானியத்தில் ஹெக்டேருக்கு ரூ. 12,000 மதிப்புள்ள மல்லிகை நாற்று மற்றும் இடுபொருள்களும் இதர விவசாயிகளுக்கு 33 சதம் மானியத்தில் ஹெக்டேருக்கு ரூ. 7,920 மதிப்புள்ள நாற்று மற்றும் இடுபொருள்களும் மானியத்தில் வழங்கப்பட உள்ளன.

மானியத் திட்டங்களில் பயன்பெற விவசாயிகள் தங்களது நில உடமை ஆவணங்களுடன் 2 புகைப்படங்களை மதுரை கிழக்கு வட்டாரத் தோட்டக்கலை அலுவலகத்தைத் தொடர்பு கொண்டு பதிவு செய்ய வேண்டும்.

பழமர சாகுபடி செய்யும் விவசாயிகள் தொடர்ந்து 2 ஆண்டு பராமரிப்புக்கு இடுபொருள்கள் மானியமாக பெறும் வாய்ப்புள்ளது.

மேலும் திட்டங்கள் குறித்து அறிய உதவி இயக்குநர் செல்போன் 98652-80167 எண்ணில் தொடர்புகொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளார்.