Monday, November 15, 2010

சபரிமலை யாத்திரை - விரத முறைகள்

சபரிமலை யாத்திரை பொழுது போக்கிற்காகவும், கண்டு களிப்பதற்காகச் சென்று வரும் சுற்றுலா அல்ல என்பதை ஒவ்வொரு ஐயப்பன்மார்களும் உணர வேண்டும். மாலை போட்டுக் கொள்ளும் ஐயப்பன்மார்கள் தாங்களாக விரும்பி வந்து விரதத்தை மேற்கொள்ளுகிறார்கள். யாருடைய கட்டாயத்தின் பேரிலும் இதை மேற்கொள்ளுவதில்லை. ஆதலால் ஐயப்பன்மார்கள் விரதத்திற்கு பங்கம் ஏற்படா வண்ணம், இவ்விரதத்தை கடைப்பிடிக்க வேண்டும். குறிப்பாக மாலை அணிவிக்கும் குருசாமி இதில் கவனமாகவும், கண்டிப்பாகவும் இருக்க வேண்டும்.

விரத முறைகள்

இப்பூவுலகிலேயே பக்தி உணர்ச்சி தழைத்தோங்கி தூய உள்ளத்துடன், உலக மாயை அகற்றி, உள்ளம் தெளிவாக்கி பற்றற்ற பரந்த மனப்பான்மையோடு பக்தர் வெள்ளம் பயபக்தியுடனும், பரவசத்துடனும் பயணம் தொடர்கின்ற புனித யாத்திரை சபரியாத்திரை என்பதனை உலகறியும். பல்லாண்டுகளாகப் பெரியோர் பலரால் போற்றி காப்பாற்றப்பட்டு வரும் பயண, விரத விதிமுறைகளையும், கட்டுப்பாடுகளையும் இக்காலத்தில் சபரி யாத்திரை செல்லும் இளம் தலைமுறையினர் உறுதியுடனும், உள்ளத்தெளிவுடனும், ஒழுங்குடன் பின்பற்றி சபரி யாத்திரையின் புனிதத் தன்மையை மாசின்றி நிலை நிறுத்த வேண்டியது கடமையாகும்.



1. பக்தர்கள் கார்த்திகை முதல் நாள் மாலையணிவது சாலச்சிறந்தது. அன்று நாள், கிழமை பார்க்க வேண்டுயது இல்லை. குறைந்த பட்சம் ஒரு மண்டலம் (41 நாட்கள்) விரதம் மேற்கொண்டுதான் சபரிமலை யாத்திரையைத் துவங்க வேண்டும்.

2. துளசிமணி அல்லது உருத்திராட்சை மாலை 108 அல்லது 54 மணிகள் உள்ளதாகப் பார்த்து வாங்கி அத்துடன் ஐயப்ப திருவுருவப் பதக்கம் ஒன்றினை இணைத்து பலமுறை முறையாக விரதம் இருந்து பெருவழிப் பாதையில் சென்று வந்த பழமலை ஐயப்பன்மார் ஒருவரை குருவாக ஏற்று திருவிளக்கு முன்பாகவோ, திருக்கோயில்களிலோ குருநாதரை வணங்கி அவர் தம் திருக்கரங்களால் மாலையணிந்து கொள்ள வேண்டும். மாலையணிந்து கொண்டவுடன் குருநாதருக்கு தங்களால் இயன்ற குரு தட்சணையை கொடுத்து அடிவணங்கி ஆசிபெற வேண்டும். ஐயப்பனாக மாலை தரித்த நேரத்திலிருந்து குருசாமியை முழு மனதுடன் ஏற்று அவர் தம் மொழிகளை தேவவாக்காக மதித்து மனக்கட்டுப்பாட்டுடன், பணிந்து நடந்து யாத்திரையை இனிதாக்க ஒத்துழைக்க வேண்டியது அவசியம்.

3. நீலம், கருப்பு காவி இவற்றுள் ஏதாவது ஒரு நிறத்தில் உடைகள் அணிய வேண்டும். தங்கள் கடமைகளை ஆற்றுகின்ற சமயங்களில் அணிய இயலாவிட்டாலும் பஜனையில் கலந்து கொள்ளும் போதும் யாத்திரையின் போதும் முழுவதும் கண்டிப்பாக வண்ண ஆடைகளை அணிவது அவசியம்.

4. காலை, மாலை இருவேளைகளிலும் (சூரிய உதயத்திற்கு முன்பும் சூரிய அஸ்தமனத்திற்கு பின்பும்) குளிர்ந்த நீரில் தவறாமல் நீராடி ஐயப்பன் திருவுருவப் படத்தை வைத்து வணங்குதல் வேண்டும். தினமும் ஆலய வழிபாடும், கூட்டுப் பஜனைகளிலும் கலந்து கொண்டு வாய் விட்டுக் கூவி சரணம் விளித்து ஐயப்பன் புகழ்பாடி மகிழ்தல் பேரின்பம் நல்குவதாகும்.

5. களவு, சூதாடுதல், பொய், திரைப்படங்கள், விளையாட்டு, வேடிக்கைகள், உல்லாசப் பயணங்கள், போதையூட்டும் பொருட்கள், புகைப்பிடித்தல் முதலியவைகளைத் தவிர்க்க வேண்டும். படுக்கை தலையணைகளை நீக்கி தன் சிறுதுண்டை மட்டும் தரையில் விரித்து துயில வேண்டும். காலணிகளை அணிவதை தவிர்க்க வேண்டும்.

6. பிரம்மச்சாரிய விரதத்தை ஒழுங்குடன் தவறாமல் கடைப்பிடிப்பது தலையாய விரதமாகும். மனம், வாக்கு, செயல் ஆகிய மூன்றிலும் காம இச்சையைத் தவிர்க்க வேண்டும். மது, மாமிசம், லாகிரி வஸ்துக்கள் ஆகியவற்றை அறவே ஒழிக்க வேண்டும்.

7. மற்ற ஐயப்பன்மார்களிடம் பேசும்போது ‘‘சாமி சரணம்’’ என்று தொடங்கி பின் விடைபெறும் போது ‘‘சாமி சரணம்’’ எனச் சொல்ல வேண்டும்.

8. விரத காலத்தில் அசைவ உணவு உண்ணுவது மாபெரும் தவறாகும். எனவே இயன்றவரை வீட்டிலேயே தூய்மையாகத் தயாரித்த சைவ உணவையே உண்ண வேண்டும். மாலை தரித்த வீட்டைத்தவிர மற்றவர்கள் வீட்டில் எக்காரணத்தை கொண்டும் உணவு உண்ணக்கூடாது.

9. பக்தர்கள் மாலை தரித்த பிறகு சந்திக்கின்ற ஆண்களை ‘‘ஐயப்பா’’ என்றும் பெண்களை ‘‘மாளிகைபுறம்’’ என்றும் சிறுவர்களை ‘‘மணிகண்டன்’’ என்றும் சிறுமிகளைக் ‘‘கொச்சி’’ என்றும் குறிப்பிட்டு அழைக்க வேண்டும்.

10. சபரிமலை செல்லும் பக்தர்கள் புதிதாக யாத்திரை செல்லும் பக்தர்களிடம் ‘‘நான் பத்திரமாக கூட்டிக் கொண்டு போய் வருகிறேன், என்னோடு தைரியமாக வரலாம்’’ என்று சொல்லக்கூடாது. பயணம் புறப்படும்போது ‘‘போய் வருகிறேன்’’ என்று யாரிடம் சொல்லிக் கொள்ளக்கூடாது. எல்லாப் பொறுப்பினையும் ஐயப்பனிடம் ஒப்படைத்து, அவன் திருவடிகளே சரணம் என்ற பக்தி உணர்வுடன் சரணம் விளித்து புறப்பட வேண்டும்.

11. மாலையணிந்த பிறகு குடும்பத்தில் நெருங்கியவர் எவரேனும் காலமாகி, அதன் காரணமாக துக்கத் தீட்டு ஏற்படுமானால் அந்த வருடம் யாத்திரை செல்லக்கூடாது. சவரம் செய்தல் கூடாது, துக்கக் காரியங்களில் கலந்து கொள்ளவோ, பெண்களின் ருது மங்களச் சடங்கிற்கோ, குழந்தை பிறந்த வீட்டிற்கோ, திருமணங்களிற்கோ சென்று கலந்து கொள்ளக் கூடாது. மாத விலக்கானப் பெண்களைக் காணக்கூடாது. அப்படி தெரியாது காண நேர்ந்தால் உடனே நீராடி ஐயப்பனை வணங்குதல் வேண்டும்.

12. பன்னிரண்டு வயதுக்குட்பட்ட ருது காலம் அடையாத சிறுமிகள், ருது காலம் நின்ற வயதான பெண்களும் சபரிமலை யாத்திரையை மேற்கொள்ளலாம். இதனை எல்லா குருசாமிகளும் கவனத்தில் மேற்கொள்வது அவசியம்.

13. யாத்திரை புறப்படுவதற்கு சில நாட்களுக்கு முன் ‘‘கன்னி பூஜை’’ நடத்த வேண்டும். சற்றே விரிவான முறையில் பஜனை, கூட்டு வழிபாடுகள் ஆகியவைகள் நடத்தி ஐயப்ப பக்தர்களுக்கும், மற்றவர்களுக்கும் பிரசாதம் அளித்து அன்னதானம் செய்ய வேண்டும்.

14. முதன் முறையாக யாத்திரையை மேற்கொள்ளும் ஐயப்பன்மாரைக் ‘‘கன்னி ஐயப்பன்’’ என்றும் அதன் பிறகு மலையாத்திரை செய்யும் ஐயப்பன்மார்களை ‘‘பழமக்காரர்கள்’’ என்றும் அழைக்கப்படுவார்கள்.

15. இருமுடி கட்டு பூஜையை தன் வீட்டிலோ, குருசாமி வீட்டிலோ கோயில்களிலோ வைத்து நடத்த வேண்டும். வீட்டை விட்டு கிளம்பும் முன்பு விடலைக்காய் ஒன்றை வீட்டின் முன் அடித்துவிட்டு ‘‘சுவாமியே சரணம் ஐயப்பா’’ என்று சரணம் விளித்து புறப்பட வேண்டும்.

16. கன்னி ஐயப்பன்மார்கள் யாத்திரை புறப்பட்ட திகதியிலிருந்து ஐயப்பன் சன்னிதானம் செல்லும்வரை அவர்களாக இருமுடியை தலையிலிருந்து இறக்கி வைக்கவோ, ஏற்றி வைக்கவோ கூடாது. குருநாதர் அல்லது பழமலை ஐயப்பன்மார்களைக் கொண்டுதான் ஏற்றவோ, இறக்கவோ வேண்டும்.

17. யாத்திரை வழியில் அடர்ந்த வனங்களில் காட்டு யானை, புலி, கரடி முதலான விலங்குகள் இருக்குமாதலால் பக்தர்கள் கூட்டமாக சரணம் விளித்துக் கொண்டே செல்ல வேண்டும். இரவு நேரங்களில் காட்டிற்குள் மலஜலத்திற்காக தனியே அதிக தூரம் செல்லக்கூடாது. சரணம் விளித்தல், சங்கு ஒலித்தல், வெடி வைத்தல் பாதுகாப்புக்கு சிறந்த வழிகளாகும். பம்பை நதியில் நீராடும்போது மறைந்த நம் முன்னோர்களுக்கு ஈமக் கடன்கள் செய்து முன்னோர்களின் ஆத்மா சாந்தி பெற வழி வகுக்க வேண்டும். பம்பையில் சக்தி பூஜையின் போது ஐயப்பன்மார்கள் சமைக்கும் அடுப்பிலிருந்து சிறிதளவு சாம்பல் சேகரித்து சன்னதி ஆழியில் இருந்து எடுக்கப்பெற்ற சாம்பலை அத்தடன் கலந்து தயாரிக்கப் பெறுவதுதான் சபரிமலை பஸ்மம். இது மிகவும் சக்தி வாய்ந்ததாகும்.

18. ஐயப்பன்மார்கள் எல்லோரும் குறிப்பாக, கன்னி ஐயப்பன்மார்கள் பெரிய பாதையில் (அழுதை வழி) சென்று வருவது மிகுந்த பயன்விளைவிக்கும். ஆனால் சிலர் தங்கள் தொழில் கடமை சூழ்நிலை கருதி எரிமேலியிலிருந்து சாலக்காயம் வழியாகவும் சபரிமலை செல்கிறார்கள் என்றாலும் மேற்குறிப்பிட்ட பெரியபாதையில் செல்லும்பொழுது மலைகளில் விளையும் பல மூலிகைகள் கலந்த ஆற்று நீரில் குளிப்பதால் உடல் நலம் ஏற்படுவதாலும், எழில் மிக்க இயற்கைக் காட்சிகளைக் கண்டு களிப்பதாலும், உள்ளம் பூரிப்பதாலும் பேரின்பமும் பெரு நலமும் அடைகின்றோம். நீண்ட வழிப் பயணத்தில் ஐயப்பன் சரணமொழி அதிகம் விளிப்பதால் பகவானின் திருநாம உச்சரிப்பு மிகுந்த பக்தி உணர்ச்சியை வளர்க்கின்றது. யாத்திரை முடிந்து வீடு திரும்பியதும் ஐயப்பனின் திருவருள் பிரசாதக் கட்டினை தலையில் ஏந்தியபடி வாயிற்படியில் விடலைத்தேங்காய் உடைத்து வீட்டிற்குள் நுழைய வேண்டும். வழிபாட்டு அறையில் கற்பூர ஆரத்தியோடு கட்டினை அவிழ்த்து பூஜை செய்து பிரசாதங்களை எல்லோருக்கும் வழங்க வேண்டும். யாத்திரை நிறைவேறியதும் குருநாதர் மூலம் மாலையை கழற்றி ஐயப்பன் திருவுருவப் படத்திற்கு அணிவித்து விட்டு விரதம் பூர்த்தி செய்து கொள்ள வேண்டும். ஐயப்பன் திருவருளால் எல்லா நலன்களும் வாய்க்கப்பெற்று பல்லாண்டு இனிது வாழ பகவான் நாமம் துதிப்போமாக.

சபரிமலை யாத்திரைப் பலன்கள்

அரிது அரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது என்ற முதுமொழிக்கேற்ப கிடைத்தற்கரிய மனிதப் பிறவி எடுத்த நாம் இப்பூவுலகில் வாழ்க்கையின் பல்வேறுபட்ட கோணங்களில் ஆட்பட்டு இயங்கி வருகிறோம். உலகின் பல சூழல்களில் மாட்டிக்கொண்டு பிறவிப் பெருங்கடலில் எதிர் நீச்சல் போட்டுக் கடந்து கரையேற முயன்று வருகிறோம். உலகில் உள்ள மதங்களில் ஒவ்வொரு மதங்களும் தங்களுக்கென்று ஒரு விரதமும் கட்டுப்பாடும் வரையறுத்து வைத்திருக்கின்றன. குறிப்பாக இஸ்லாமியர்களாலும் கண்டிப்பாக இஸ்லாம் மதத்தில் நாற்பது நாள் ராம்ழான் நோன்பு என்பது எல்லா இஸ்லாமியர்களாலும் கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும் என்று அவர்களுடைய புனித குர்ஆனில் கூறப்பட்டுள்ளது. அதேபோல் கிறிஸ்த்துவ மதத்திலும் ஈஸ்டர் நோன்பு என்பது ஒவ்வொரு கிறிஸ்த்துவர்களும் மேற்கொள்ள வேண்டும் என்று புனித பைபிளில் கூறப்பட்டுள்ளது. ஆனால் இந்து மதத்தில் எந்த விரதமும் கண்டிப்பாக மேற்கொள்ள வேண்டும் என்று எந்த இதிகாசத்திலும் கூறப்படவில்லை. இருந்தும் வாழ்வின் பல சிக்கல்களில் மாட்டிக் கொண்டு தினமும் அல்லல்பட்டு உழன்றுவரும் நாம் வருடத்திற்கு ஒரு முறையாவது சில நாட்களாவது தூய மனத்துடனும் மெய்யான பக்தியுடனும் நல்ல சிந்தையுடனும் மனதைக் கட்டுப்படுத்தி விரதங்களிருந்து பூஜைகள், அன்னதானங்களை இயன்றவரை சக்திக்கேற்ப செய்ய நாமாக மேற்கொள்ளும் இந்த சபரிமலை யாத்திரை நோன்பு நமக்கு ஒரு நல்ல வாய்ப்பினைத் தருகிறது.

எருமேலி மார்க்கத்தில் சபரிமலை யாத்திரை செல்வதில் மற்றொரு விசேஷம் உடல் நலம் காக்கும் மூலிகைகளின் மணம் தாங்கி வரும் காற்;றைச் சுவாசிக்கும்பேறு கிடைத்தற்கரிய ஒன்றாகும். ஆயுர்வேத சாஸ்த்திரப்படி மனித தேகத்தில் வாத, பித்த கபதாதுக்கள் இருக்கின்றன. ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட அளவு வரையில் இருந்தால் தேகத்திற்கு ஆரோக்கியம் அளிக்கும். அதிகமாகவோ, குறைவாகவோ ஆனால் வியாதிகள் உடலைத் தீண்டுகின்றன. இம்மூன்றின் தொல்லைகளைக் குணப்படுத்தும் மூலிகைகளை; எருமேலியிலிருந்து சபரிமலை வரையிலும் அதற்கப்பாலும் மண்டிக் கிடக்கின்றன.

வாதரோகத்தை அடக்குவதற்கு கருங்குறிஞ்சி மூலிகை உபயோகப்படுத்தப்பட்டு வருகிறது. எருமேலியிலுந்து கல்லிடும் குன்று வரையில் முக்கியமாக அழுதா நதிப் பிரதேசத்தில் இம்மூலிகைகள் நிறைந்து இருக்கின்றன. கபரோகத்தைத் தீர்க்கும் மூலிகைகள் கல்லிடும் குன்றிலிருந்து கரிமலை ஆறாவது தட்டுவரை வளர்ந்து இருக்கின்றன. அங்கிருந்து புல்மேடுவரை உள்ள சபரிமலைப் பிரதேசத்தில் பித்தரோக சமனியான மூலிகைகள் மண்டிக் கிடக்கின்றன. இம்மூன்று பிரதேசங்களிலும் தங்கிச் செல்பவர்கள் மேற்படி மூலிகைகளில் மணம் நிறைந்த காற்றைச் சுவாசிப்பதாலும், மூலிகைவளம் செறிந்த நீரை அருந்துவதாலும், மூலிகைகளை எரித்த சாம்பலைத் தரிப்பதாலும் ரோகங்கள் நீங்கி நல்ல ஆரோக்கியம் அடைகிறார்கள்.

சமவெளிப் பிரதேசமாகிய வயல் சூழ்ந்த தமிழ்நாட்டில் வாழும் நமக்கு படிகள் இல்லாத மலை ஏறும் வாய்ப்பு அதிகமாக கிடைப்பதில்லை. ஆண்டுக்கொரு முறையாவது சபரிமலைக்கு எருமேலியிலிருந்து நடந்து பெருவழிப்பாதையாக சபரிமலை சென்றுவரும் பக்தர்களுக்கு மலையேறும் நல்வாய்ப்புக் கிடைப்பதனால் அவர்களின் இதயம் பலம் பெறுகிறது. இரத்தம் சுத்தமடைகிறது. நரம்புகளும், தசை நார்களும் உறுதி பெறுகின்றன. கெட்ட உணர்வுகள் பட்டுப்போகின்றன.

சபரிமலை யாத்திரையின்போது சாதி சமய வேறுபாடுகள் சரணம் போட்டுப் பறக்கின்றன. ஏழை, பணக்காரர் என்ற பேதம் இல்லை. உயர்ந்தவர், தாழ்ந்தவர், படித்தவர், பாமரர் என்ற வித்தியாசம் இல்லை. எல்லோரும் ஓர் குலம், எல்லோரும் ஓர் நிரை என்ற உணர்வோடும், அன்போடும், பண்போடும் மேற்கொள்கின்ற யாத்திரையே இந்த சபரிமலைப் புனித யாத்திரை. ஐயப்பனும் வாபர் சுவாமியும் இரண்டறக் கலந்து நின்று அருள் புரிவதைப் போலவே இஸ்லாம் மதத்தாரும் மாலை அணிந்து இருமுடிதாங்கி ஐயப்பசுவாமி கோயிலுக்குப் பெரும் திரளாக வந்திருந்து வழிபட்டு அருள் பெறுகிறார்கள். இதனால் இந்து, இஸ்லாம் இன ஒற்றுமை ஆல்போல் தழைத்து அறுகுபோல் வேரோடி வளர்கின்றது. எனவே இந்த யாத்திரையின்மூலம் ஒருமைப்பாட்டு உணர்வு வளர்கின்றது. சாதி, சமய வேறுபாடுகள் வேரறுக்கப்படுகின்றன. சமத்துவம் என்பது நடைமுறையில் நடாத்திக் காட்டப்படுகிறது. நல்லவைகளையே செய்து நல்லவைகளையே நினைத்து சுவாமியே சரணம் ஐயப்பா என்ற தாரக மந்திர சக்தியுடன் பக்தர் பெருவெள்ளம் பரம்பொருளை உணர்ந்து கொள்ளத் துடிக்கும் ஓர் அறப்போர்க்களமே ஐயப்ப சுவாமியின் சபரிமலை யாத்திரை என்றால் மிகையாகாது.

இந்த யாத்திரையின்போது வாழ்வின் பல்வேறு துறையிலிருப்பவர்களும், பலவிடங்களில வசிப்பவர்களும், பல திறத்தவரும், பல குணத்தவரும், ஓரிடத்தில் வந்து ஒன்று கூடுகின்றார்கள். ஒருவரோடொருவர் மனம் விட்டு பேசிப் பழகுகிறார்கள். இதன் பயனாக கூச்ச மனப்பான்மையுள்ளவர்களுக்கு மனக்கூச்சம் விலகி மனத்தெளிவு பிறக்கிறது. மனப்பயம் நீங்கி தைரியமும் மன உறுதியும் ஏற்படுகின்றன. தாழ்வு மனப்பான்மையுள்ளவர்கள் உயர்வுள்ளம் பெறுகிறார்கள். எல்லோரையும் போலவே நாமும் நம்மை போலவே எல்லோரும் என்ற உணர்ந்து உறுதி பெறுகின்றார்கள்.



புண்ணியம் நல்கும் சபரியாத்திரை

உலகெங்கும் உள்ள ஐயப்ப பக்தர்கள் தங்கள் தேசத்திலிருந்து புறப்பட்டு எருமேலி என்ற இடத்தில் வந்து கூடுவார்கள். பக்தர்களின் கணக்கற்ற வருகை எருமேலி இன்று ஜன நெரிசல் நிறைந்த இடமாக மாறியுள்ளது. இங்கு ஒரு சாஸ்தா ஆலயம் உண்டு ஆலயத்திலிருந்து சுமார் 1 /2 மைல் வடகிழக்கில் எருமேலி பேட்டைக் களமாகும். இங்கு ஐயன் ஐயப்பனின் அருமை நண்பரான வாவரின் ஆலயமும் பேட்டை சாஸ்தாவின் பிரதிஷ்டையுள்ள சிறுகோயிலும் உண்டு. இந்த ஆலயங்களைச் சுற்றி அநேகம் முஸ்லீம் அன்பர்கள் குடியிருக்கிறார்கள். மார்கழி மாதத்தில் வாவர் ஆலயத்தில் கொடியேற்றப்படும்.

எருமேலி

எருமேலிப் பேட்டை ஆடுதல் சபரிமலை யாத்திரையில் முக்கியமான அம்சமாகும். இங்கு இந்துக்களும், முஸ்லீம்களும் ஒரு தாய் மக்கள் போல் சகோதர பாசத்துடன் பழகுவதைக் காணலாம். ஜனசந்தடி நிரம்பப்பெற்ற எருமேலி கடைவீதியின் நடுமையத்தில் வாவர் ஆலயம் அமையப்பெற்றுள்ளது. ஹரிஹர புத்திரரான ஸ்ரீ தர்மசாஸ்தா வேடனைப்போல் வில்லும் அம்பும் தரித்த நிலையில் நிற்கும் தோற்றத்தில் இங்கு பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளார். சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் இங்கு தாவளம் போடாமல் செல்ல மாட்டார்கள்.

ஒவ்வொரு ஐயப்ப பக்தர்களும் பாகுபாடின்றி வண்ணப்பொடிகள் பூசி வாவரை வணங்கி, பேட்டை துள்ளி பின் குளித்து ஐயனை வழிபட்டு இருமுடிக்கட்டு தலையில் ஏற்றியவாறு சுவாமியே சரணம் ஐயப்பா என்ற சரணகோஷத்துடன் இங்கிருந்து அடர்ந்த காட்டில் பெருவழிப் பயணம் ஆரம்பமாகின்றது.

பேரூர்த்தோடு

இது மிகவும் புராதனமான முக்கியத்துவம் வாய்ந்த வாய்க்காலாகும். கிழக்கு முகமாக நாம் துவங்கிய வனயாத்திரையில் இளைப்பாற சிறந்த இடம் இந்தப் பேரூர்த்தோடாகும். எருமேலியிலிருந்து இரண்டு மைல் தூரமுள்ள இந்தப் பேரூர்த்தோடு கானகத்தையும், கிராமத்தையும் பிரிக்கும் எல்லையாக அமைந்துள்ளது. வனயாத்திரையில் ஸ்ரீதர்ம சாஸ்தா இந்த பேரூர்த்தோடில் குளித்து இளைப்பாறியதாகக் கூறப்படுகின்றது. யாத்திரை மேற்கொண்டுள்ள ஐயப்பன்மார் இத்தோடில் குளித்து மலர், அரிசிப்பொரி இவற்றை வாய்க்காலில் உள்ள மீன்களுக்கு தூவி தமது பக்தியை வெளிப்படுத்துவர். இந்த இடத்திலிருந்து அரசாங்கத்தின் விலையுயர்ந்த தேக்கு தோட்டம் ஆரம்பமாகும். பேரூர்த்தோடை அடையும் இடம் வரை உள்ள ஸ்தலத்திற்கு கோட்டைப்படி என்று பெயர்.

கோட்டைப்படி

கோட்டைப்படியைக் கடந்தால் அங்கிருந்து தொடங்கும் இடம் ஸ்ரீ தர்ம சாஸ்தாவின் பூங்காவனம் என்றழைக்கப்படும். ஆகையால் அங்கு இரண்டு இலைகளைப் பறித்து வழிபாடு செய்த பிறகுதான் கடந்து செல்ல வேண்டும். கோட்டைப்படி என்பது கோஷ்டஸ்தானம் என்ற அர்த்தத்திலிருந்து இந்த கோட்டைப்படி என்ற சொல் தோன்றியுள்ளது.

காளைகெட்டி

கோட்டைப்படி கடந்தால் அடுத்த முக்கிய இடம் காளைகெட்டியாகும். எருமேலியிலிருந்து சுமார் 8 மைல் தொலைவிலுள்ளது இந்தக் காளைகெட்டி என்ற இடமாகும். காளைகெட்டி ஒரு அழகு மிகுந்த வனப்பிரதேசமாகும். இங்கு மஹிஷியை வதம் செய்த ஐயப்பன் அவளைத் தனது காலால் மர்த்தனம் செய்யும் காட்சியை காணவந்த கைலாயவாசன் தனது வாகனமான காளையை இந்த இடத்தில் கட்டியதால் இந்த இடத்திற்கு காளைகெட்டி என்ற பெயர் ஏற்பட்டதாய் கூறப்படுகின்றது.

அழுதாநதி

காளைகெட்டியில் இருந்து சுமார் ஒன்றரை மைல் கிழக்காக நடந்தால் அழுதாநதி என்ற இடத்தை அடையலாம். இந்த அழுதாநதி தொடர்ச்சியாகப்பாய்ந்து பம்பாநதியில் கலக்கின்றது. இந்த அழுதாநதியில் குளித்து மூழ்கும்போது நம் கையில் கிடைக்கும் சிறுகல்லை மடியில் கட்டிக் கொண்டு அதை மிகவும் கவனமாய் நாம் கல்லிடும் குன்று என்ற இடத்தில் போடவேண்டும்.

அழுதாமேடும் கல்லிடும் குன்றும்

அழுதையிலிருந்து நடக்க ஆரம்பிக்கும் ஐயப்பன்மார்களுக்கு இரண்டுமைல் செங்குத்தான மலையேற்றம் எதிர்படும். இதைத்தான் அழுதையேற்றம் என்று சொல்வார்கள். இதைவிட கடினமான ஏற்றம் வேறு ஏதுமில்லை என்று கூறவவேண்டும். பக்தர்களான வயோதிகர்களும், குழந்தைகளும் ஐயனின் கருணையினால் சிரமப்படாமல் ஏறுவது கண்கொள்ளாக் காட்சியாகும். ஒவ்வொருவருடைய இருதய சுத்தியையும், பாப சக்தியையும் அளக்கும் இடமாகும். ஐயப்ப பக்தர்கள் பயபக்தியுடன் கொண்டு வந்த கல்லை அழுதாமேட்டின் முடிவில் ஒரு பக்கமாக இருக்கும் கல்லிடும் குன்று என்ற இடத்தில் போட்டு வணங்க வேண்டும். அழுதா ஆற்றில் இருந்து தேவர்களால் எறியப்பட்ட கற்கள் மஹிஷியின் பூதவுடலை மறைத்த இடம் இது என்றும் அந்த குன்றை கல்லிடும் குன்று என்றழைத்து பயபக்தியுடன் வணங்குவார்கள்.

இஞ்சிப்பார கோட்டம்

அழுதை ஏற்றத்தின் கடினம் இந்த இடத்தை அடையும்போது எதிர்படும் சிறுவாய்க்காலுடன் முடிவடைகிறது. வாய்க்கால் என்றாலும் இங்கு தண்ணீர் கிடைப்பது மிகவும் கடினம். ஆயினும் இதை ஒரு இளைப்பாறும் கட்டமாக பக்தர்கள் கருதுகிறார்கள். இங்கு கோட்டைப்படி சாஸ்தாவை நினைத்து பூஜைகள் நிகழ்த்துவது வழக்கம்.

தாவளங்களையும் கோட்டைகளையும் பற்றிய விபரங்கள்

இஞ்சிப்பார கோட்டையில் இருந்து கிழக்காக நடந்தால் கரிமலை வரும் கரிமலை உச்சியும் ஒரு இளைப்பாறச் சிறந்த தாவளமாகும். ஆக மொத்தம் ஏழுகோட்டைகளும் அவற்றில் ஏழு தாவளங்களும், சபரிமலை யாத்திரீர்களின் இளைப்பாறும் கேந்திரங்களாகும். எருமேலி, கோட்டைப்படி, காளைகட்டி, இஞ்சிப்பார கோட்டைக் கோட்டை, உடும்பாரமலை, கரிமலைத் தோட்டம், கரிமலை உச்சி, பம்பையாற்றங்கரை, சன்னிதானம் போன்ற இடங்களில் மட்டும் தாவளங்களடித்து இளைப்பாற சிறந்த இடங்களாகத் தேர்ந்தெடுத்து உள்ளார்கள். மேற்கூறப்பட்டுள்ள கோட்டைகள் ஒவ்வொன்றுக்கும் ஒரு தேவதை உண்டு. ஆகையால்தான் ஒவ்வொரு கோட்டையைத் தாண்டும்போதும் கானகத்தில் நமக்கு துணை புரியும்.

கரிமலைத்தோடு தீரம்

கரிமலை ஏற்றம் ஏறுவதற்கு முன்பு ஆகாராதிகள் தயார் செய்யவும், சற்று இளைப்பாறவும் தகுதியுள்ள இடமாகும். இந்த கரிமலைத்தோடு தீரம். தங்குவதற்கு சற்று வசதிக்குறைவென்றாலும், தண்ணீர் தாராளமாகக் கிடைக்கின்றது என்பதால் பக்தர்கள் இங்கு கூடி சற்று இளைப்பாறுகின்றார்கள்.

கரிமலை ஏற்றம்

இளைப்பாறி முடிந்ததும் உடன் நடந்தால் செங்குத்தான கரிமலை ஏற்றம் தான். கரிமலை ஏற்றத்தைப் போன்ற கடினமான ஏற்றம் சபரிமலை யாத்திரையில் வேறு கிடையாது என்று பல பழமக்கார சுவாமிகள் கூறுவது வழக்கம். கரிமலை ஏற்றத்தைக் காட்டிலும் கரிமலை இறக்கம் மிகவும் கடினம். எவ்வளவு ஏற்றமோ அவ்வளவு இறக்கம் உண்டு. மரங்களின் வேர், பெரிய, சிறிய பாறைகள் இவற்றின் மீது அதிகவனமாக இறங்க வேண்டும். இந்த இறக்கம் இறங்கும்போது, பெரியானை வட்டம், சிறியானை வட்டம் என்ற இடங்கள் எதிர்ப்படும். இங்கு சிறு வாய்க்கால்களில் பளிங்கு போன்ற நீர் சலசலத்தோடும். யானைகள் கூட்டமாய் வந்து தாகம் தீர்த்துக் கொள்ளும் இடம் என்பதால் இருட்டு வேளைகளில் தனியாக இந்த இடத்தைக் கடக்க மாட்டார்கள். இந்த இடத்தை கடந்து சிறிய தூரம் சென்றால் பம்பாநதியைக் காணலாம்.

புண்ணிய பம்பாநதி

பம்பாஸ_கிஸ்தலம் புவனேகசுந்தரம் பந்தள ராஜனின் கமனீய மந்திரம், தஷிண கங்கையென்ற அடைமொழியுடன் கீர்த்தி பெற்றதும் ஐயப்பனின் ஜனனஸ்தானம் என்ற புகழும் இந்த பம்பா தீர்த்தத்திற்கு உண்டு.

அநேக வனமூலிகைகளின் சாறு கலந்து பாவங்களைக் கொல்லும் அபார சக்தியும் நிரம்பப்பெற்று ஸ்படிகத்திற்கு ஒப்பான நிறத்துடன் கரைபுரண்டோடும் பம்பையின் ஜலப்ரவாஹம் நமது இருதயத்தை ஆகர்ஷித்து நிர்மாலயத்தை ஏற்படுத்தும்.

பம்பாஸத்தியும் குருதட்சணையும்

கங்கை நதிக்கொப்பான புனித பம்பையில் நீராடி பாவங்களைந்து புனிதராய் ஐயப்பன்மார் தமது விரியில் குருசாமி எல்லோருடைய இருமுடிகளின் பின்முடிகளைப் பிரித்து அதிலிருந்து உணவுப்பொருட்களை எடுத்து உணவு தயாரிப்பார்கள். இதனை பம்பாஸத்தி என்று அழைப்பார்கள். இங்கு கன்னி ஐயப்பன்மார்களிடம் தட்டு கொடுத்து 108 அடுப்புகளில் இருந்து சாம்பல் எடுக்கப்பட்டு அதனை வஸ்திரகாயம் செய்து கொண்டு வரும்படி குருசாமி கூறுவார். இச்சாம்பலை பூஜையின்போது விபூதியாக உபயோகிப்பது வழக்கம். அதன்பின் இருமுடிகளை கட்டி ஒன்றாக வைத்து உணவுகளை இலையில் இருமுடிகளுக்கு முன்வைத்து நைவேத்தியம் செய்து பஜனை, பூஜைகள் செய்து முதலில் கன்னி ஐயப்பன்மார்களுக்கு அன்னதானம் செய்வார்கள். இந்த விருந்தில் சாஷாத் ஐயப்ப சுவாமியே கலந்து கொண்டு தங்களுடன் உணவருந்த வருவார் என்பது கருதப்படுகின்றது.

பம்பா விளக்கு

பம்பாஸத்தி முடிந்த மாலைநேரத்தில் பம்பா விளக்கினை சிறு மூங்கல், மெழுகுவர்த்திகள் கொண்டு அவரவர் கைவண்ணத்தில் தமது குழுவினராக தமது தோளில் சுமந்து சென்று பம்பா விளக்கே சரணமய்யப்பா என்று சரணகோஷத்துடன் பம்பையாற்றில் விடுவர்.



நீலிமலையும் அப்பாச்சிமேடும்
அப்பாச்சிக் குழியும்

பம்பையிலிருந்து புறப்பட வருவது நீலிமலையாகும். நீலிமலை சற்று கடினமாகவே இருக்கும் ஏனென்றால் அது மிகவும் செங்குத்தாக இருக்கும். மலை ஏற்றம் முடியும் இடத்திற்கு அப்பாச்சிமேடு என்று பெயர். அப்பாச்சிமேடு வந்தவுடன் இருபுறமும் உள்ள பள்ளத்தாக்கு பகுதிகளிற்கு வெல்லக்கட்டி இட்டு வணங்க வேண்டும் கடூரவனையும், துர்தேவதைகளையும் திருப்பதிப்படுத்த வேண்டி இச்சடங்குகள் நடத்தி வழிபாடு செய்வது வழக்கம்.

சபரிபீடம்

அப்பாச்சிமேட்டைக் கடந்து சற்று நடந்தால் இயற்கை அழகு நிறைந்த ஒரு சமநிலத்தைக் காணலாம். இந்த இடத்தில் இராமபிராணைக் காண பக்தை சபரி அமர்ந்து தவம் செய்தது. இச்சபரிபீடத்தில் விடல் தேங்காய் உடைத்து வழிபாடு செய்கிறார்கள் இந்த ஸ்ரீ சபரிபீடத்தை ஐந்தாவது கோட்டையாகக் கருதி வழிபடுகிறார்கள்.

சரங்குத்தி ஆல்

சபரிபீடத்திற்கடுத்தாக வருவது சரங்குத்தி ஆல். இங்கு கன்னி ஐயப்பன்மார் தங்களுடைய கன்னி யாத்திரையை உறுதி செய்து கொள்ளும் கட்டம் இதுதான். இந்த இடத்தில் தங்களுக்கு குருசாமியால் எருமேலிப்பேட்டையில் கொடுக்கப்பட்ட தங்களுடன் அதிஜாக்கிரதையாய் காட்டுவழித் துணையாய் கொண்டுவந்த சரத்தை அந்த சரங்குத்தி ஆல் என்ற இடத்தில் விடுக்க வேண்டும்.

சன்னிதானம்;

சபரிபீடத்தைத் தாண்டும்போதே சன்னிதானத்தின் மஹிமை பஞ்சேந்திரியங்களையும் தட்டி எழுப்பும். கோயிலின் நடையை நெருங்க உடல் களைப்பும் மறந்துபோகும். ஐயப்ப பக்தர்கள் தமது இருமுடியை கையினால் உறுதியாகப் பற்றிக்கொண்டு சரணகோஷத்துடன் பதினெட்டாம்படியில் உள்ள ஒவ்வொரு படிகளையும் வணங்கி ஏறி சன்னிதானத்தில் வந்து சேர்தல்.



நெய்யபிஷேகம்

சன்னிதானத்தில் ஐயன் தரிசனம் பெற்றபின் குருசாமி ஒவ்வொரு இருமுடிகளையும் பிரித்து அதிலிருந்து நெய்த்தேங்காயை எடுத்து உடைத்து அதிலிருந்து பெற்ற நெய்யினை பாத்திரத்தில் ஒன்றாக சேர்த்து ஐயனுக்கு நெய்யபிஷேகம் செய்தல்.

கற்பூர ஆழி



சன்னிதானத்தில் பலிக்கல்லின் அருகில் தரையில் கற்பூரம் எரிந்து கொண்டே இருக்கும் இதைத்தான் கற்பூர ஆழி என்று சொல்வார்கள். ஐயப்ப பக்தர்கள் தங்களுடன் கைவசம் தாராளமாய் வைத்திருக்கும் கற்ப+ரங்களை கற்பூர ஆழியில் இட்டு வணங்குவார்கள்.

மாளிகைப்புறமும் மலைநடை பகவதியும்

மாளிகைப்புறத்தம்மனின் சன்னதி சாஸ்தா ப்ரதிஷ்டைக்கு வடக்காக சற்று தூரத்தில் அமைந்துள்ளது. ஸ்ருஷ்டி, ஸ்துதி ஸம்ஹார காரிணியாக பராசக்தியாக விளங்கும் மாளிகைப்புறத்தமனைத் தரிசிப்பது என்பது சாதாரணமானதல்ல. ஆகையால் திரிசூலம், விளக்கு, போன்றவைகளில் ஆவஹித்து அம்மனை வழிபடுகின்றார்கள். இங்கு நடையில் பக்தர்கள் தேங்காய் உருட்டியும், மஞ்சள் பொடி தூவியும் அம்மனுக்கு ரவிக்கை துண்டு கொடுத்தும் வெடிவழிபாடு நடத்தியும் கும்பிடுவது வழக்கம்.
மற்றுமுள்ள சுவாமிகள்

சபரிமலை சன்னிதானத்தில் நாம் தரிசிக்க வேண்டிய கடுத்த சுவாமி, கருப்பண்ண சுவாமி, வாவர் சுவாமி என்ற மூன்று சுவாமி நடையுண்டு.

ஜோதி தரிசனம்

தைமாதம் ஒன்றாம் நாள் மாலை சபரிமலை சன்னதிக்கு எதிர்ப்புறம் உள்ள திசையில் உள்ள காந்தமலை உச்சியில் மாலை 6.30 மணிமுதல் 6.45 மணிவரைக்குள் ஹரிஹர சுதன் ஐயன் ஐயப்பா சுவாமி ஜோதி வடிவில் காட்சி அளிப்பார்.

Sunday, November 14, 2010

சபரிமலை யாத்திரையின் சிறப்புகள் என்ன?

சபரிமலை மிகச் சக்தி வாய்ந்த திருத்தலம். அங்கு திருமால், சிவன், சக்தி ஆகிய 3 பேரின் மொத்த அவதாரமான ஐயப்பன் குடிகொண்டுள்ளார். 18 சித்தர்களைக் அடிப்படையாக வைத்தே அங்கு 18 படிகள் அமைக்கப்பட்டுள்ளன. இருமுடி இல்லாமல் சுவாமியை தரிசனம் செய்ய தடைசட்டம் கொண்டு வரப்பட்டுள்ளதும் வரவேற்கத்தக்கது.

இருமுடியின் தத்துவமே தன் பாவத்தை தானே சுமப்பதற்காக ஏற்படுத்தப்பட்டதுதான். தலையில் தூக்கி இருமுடியை வைத்ததுமே அவரது பாவங்கள், தவறுகள் எல்லாம் மனதிற்குள் வர வேண்டும். அதற்காக இறைவனிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்ற எண்ணம் எழ வேண்டும்.

ஒரு மண்டலம் விரதம் இருந்து அதற்கு பின்னர் இறைவனை தரிசித்து மன்னித்தருள வேண்டினால் பலன் கிடைக்கும்.

ஐயப்பனுக்கு சாஸ்தா என்றொரு பெயரும் உண்டு. சாஸ்தா என்றால் காவல் தெய்வம், வன தெய்வம், எல்லை தெய்வம் என்று பொருள். சனி தசை அல்லது காலகட்டம் நடைபெறும் போது எந்தக் கோயிலுக்கு சென்றும் பலன் கிடைக்கவில்லை என்றால் சாஸ்தா வழிபாட்டை மேற்கொள்வது நிச்சயம் பலனளிக்கும்.

காடு, மலைகளுக்கு உரிய கிரகம் சனி. எனவே ஐயப்பனை வழிபடச் செல்லும் போது காடு, மலைகள் வழியாக பயணிப்பதாலும், கடுமையாக விரதம் இருந்து வழிபடுவதாலும் அது பெரும் பரிகாரமாக கருதப்படும்.

அக்குப்பஞ்சர் போன்ற மருத்துவ முறைகளில் தலையில் உள்ள சக்தி மையங்களை இயக்கி நோய்களுக்கு சிகிச்சை அளிப்பர். முற்காலங்களில் தலையில் சுமை வைத்துச் தூக்கிச் செல்லும் வழக்கம் இருந்தது. ஆனால் தற்போது அதுபோன்ற பணிகள் ஏதும் இல்லாத காரணத்தால், கபாலத்தில் உள்ள சக்தி மையங்கள் இயக்கப்படாமல் தவிர்க்கப்படுகின்றன. எனவே, இருமுடியை தலையில் சுமப்பதால் உடல்நிலையும் மேன்மையடையும்.

ஐயப்பன் கோயில் வழிமுறைகள், நெறிமுறைகள் அனைத்தும் ஆழமான உள்அர்த்தங்களை உடையவை. இருமுடிவை தலையில் வைத்துக் கொண்டு வீட்டை விட்டுக் சபரிமலைக்கு புறப்படும் போது “போய் வருகிறேன்” என்று கூறிச் செல்ல மாட்டார்கள். இதற்கு என்ன அர்த்தம் என்றால் எல்லாம் இறைவன் செயல், எதுவேண்டுமானாலும் நடக்கலாம், இறைவனை நம்பியே அனைத்தும் உள்ளது என்பதால் சொல்லாமலேயே கிளம்ப வேண்டும்.

மனிதனுக்குள் ஈசன் இருக்கிறார் என்பதை உணர்த்துவதற்காகவே சாமிகள் இருமுடி அணிவதற்கு முன்பாக ஒருவர் மற்றவர் காலில் விழுந்து வணங்குவர். அதாவது உனக்குள்ளும் கடவுள் இருக்கிறார்... எனக்குள்ளும் கடவுள் இருக்கிறார். என்னை நீ வணங்கு, உன்னை நான் வணங்குகிறேன் என்பதே அதன் உள் அர்த்தம். காலில் விழும் சமயத்தில் வயது, அந்தஸ்து, ஜாதி, பணக்காரன்-ஏழை பாகுபாடு இவை அனைத்தும் அடிபட்டுவிடும். இது அனைவரும் சமம் என்ற நிலையை மனதளவில் உணர்த்திவிடும்.

சனியின் நிறம் கருப்பு என்பதால், பெரும்பாலான ஐயப்ப பக்தர்கள் கருப்பு நிறத்தில் உடை உடுத்துகின்றனர். சிகை மழிக்காமல் இயற்கையான முறையில் வாழ்வதும் சனியின் வெளிப்பாடுதான்.

ஐயப்பனுக்காக விரதம் மேற்கொள்ளும் பக்தர்கள், அந்தக் காலத்தில் தங்கள் பலம் என்ன, பலவீனம் என்பதை உணர்ந்து விடுவர். ஏதோ சபரிமலைக்கு சென்றோம், காடு, மலைகளை சுற்றிப்பார்த்தோம், ஆற்றில் குளித்தோம், ஐயப்பனை தரிசித்தோம் என்று இல்லாமல், அவர்களைப் பற்றி அவர்கள் உணர்ந்து கொள்ளவே இந்த விரதம் மேற்கொள்ளப்பட வேண்டும் என ஐயப்பன் கோயிலுக்கு செல்வதற்கான நெறிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளது.

இதேபோல் விந்தணுக்களை வெளிப்படுத்தாமல் கட்டுப்படுத்த வேண்டும் என்று கூறுவதற்கு ஒரு காரணம் உண்டு. சபரிமலையில் ஐயப்பனை தரிசிக்க காடு, மலைகளை கடக்கத் தேவையான சக்தியை இந்த விரத காலத்தில் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதற்காகவே அந்த நடைமுறை உருவாக்கப்பட்டது.

ஐயப்ப சாமிகள் குளிர்ந்த நீரில்தான் குளிக்க வேண்டும் என்று கூறுவது, சபரிமலையில் நிலவும் தட்பவெப்பத்திற்கு ஏற்ப உடலை பக்குவப்படுத்திக் கொள்வதற்காகவே. காலை, மாலை 2 வேளையும் குளிர்ந்த நீரில் குளிப்பதால், குளிரை சமாளிக்கும் திறன் கிடைப்பதுடன், காமமும் கட்டுப்படுத்தப்படும். இதனால் ஒரே விஷயத்தில் இரு பலன்கள் கிடைக்கும்.

குளிர்ந்த நீரில் குளிப்பதால் ஏற்படும் பாதிப்புகளைத் தடுப்பதற்காக ஐயப்ப சாமிகளுக்கு சுக்கு கஷாயம் கொடுப்பார்கள். அது சளி பிடிப்பதை தடுக்க வேண்டும் என்ற நோக்கத்திற்காக வழங்கப்படுகிறது.

மாலை அணிவதால் கிடைக்கும் பலன்கள் என்ன?

துளசி மணி மாலைக்கு என்றே தனியாக சில மருத்துவ குணங்கள் உண்டு. அதனை அணிந்து கொண்டால் எளிதில் சளிப் பிடிக்காது. இதயத்திற்கு மசாஜ் செய்வதைப் போன்றதொரு பலனைக் கொடுக்கும். அதில் உள்ள மூலிகைகள் நமது உடலில் வியர்வையுடன் கலந்து உள்ளுக்குள் செல்வதால் தேகம் பொலிவு பெறும்.

இதேபோல் தாமரை மணி மாலை, ருத்ராட்ச மாலைகளும் ஒருவரது உடலை மேன்மையாக வைத்துக் கொள்ள உதவும். ருத்ராட்சத்திற்கு ரத்த ஓட்டத்தை துரிதப்படுத்தும் ஆற்றல் உள்ளதையும் இங்கே குறிப்பிட விரும்புகிறேன்.

அதனால்தான் ஐயப்ப சாமிகள் மாலை அணியும் போது அதில் உள்ள மருத்துவ குணங்களை உடல் ஏற்றுக் கொள்கிறது.

ஒரு சில சாமிகள் மாலை அணியாமலேயே 48 நாட்கள் விரதம் மேற்கொள்ளுவர். பின்னர் மலைக்கு செல்வதற்கு ஓரிரு நாட்களுக்கு முன்னதாக மாலைகளை கழுத்தில் அணிந்து கொண்டு ஐயப்பனை தரிசிக்கச் செல்வர். இதுபோன்று செய்வதால் மேற்கூரிய பலன்களை அவர்களால் பெறமுடியாது.

மேலும், கழுத்தில் ஆபரணம் இருப்பது நல்ல பலன்களைக் கொடுக்கும். அது தங்கமாகவும் இருக்கலாம், மாலைகளாகவும் இருக்கலாம். இதனை அக்குப்பஞ்சர் முறைப்படி பார்த்தால் கையில் மோதிரம், மணிக்கட்டில் கடிகாரம், கழுத்தில் மாலை/தங்கச் செயின் ஆகியவற்றை அணிவதால் அப்பகுதியில் உள்ள சக்தி மையங்கள் தூண்டப்படுகிறது. இது உடல்நலத்திற்கு பலன் அளிக்கும்.

அதேவேளையில், சாமிகள் தங்கள் கழுத்தில் மாலை அணிவதன் மூலம் அவற்றை அடிக்கடி பார்க்க முடியும். அதன் நெருடல் மனதில் எப்போதும் ஐயப்பனை நினைக்கச் செய்யும். இதனால் தவறான எண்ணங்கள் ஏற்படாமல் தடுத்துக் கொள்ள முடியும்.

விரத காலத்தில் சாமிகள் குடும்பத்தில் இருந்து விலகி இருக்க வேண்டும் என்று கூறுவது எதற்காக?

சிலர் கன்னிச் சாமிகளாக இருப்பார்கள். ஒரு சிலர் திருமணம் ஆனவர்களாக இருப்பார்கள். இதில் திருமணம் ஆனவர்களுக்கு மனைவி, குழந்தைகள் இருந்தாலும் அவர்களை நாடாமல் ஒரு மண்டலம் இருந்து பார். அதன் பிறகு உலக வாழ்க்கையைப் பற்றி அறிந்து கொள்வாய் என்று விளக்குவதற்காகவே அதுபோன்று இருக்க வேண்டும் எனக் கூறப்படுகிறது.

ஒரு மண்டலம் என்பது 2 பௌர்ணமி ஒரு அமாவாசை அல்லது 2 அமாவாசை ஒரு பௌர்ணமிக்கு இடையிலான 48 நாள் காலகட்டம். இக்காலத்தில் ஒருவரது கிரக நிலையில் குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்படும். எனவேதான் 48 நாட்கள் விரதம் கடைப்பிடிக்கப்படுகிறது.

உணவுக் கட்டுப்பாடு: சாமிகள் அதிகம் காரம் உள்ள உணவுகளை சேர்த்துக் கொள்ளக் கூடாது, வெளி உணவுகளை தவிர்க்க வேண்டும் என்று கூறுவது உணவுக் கட்டுப்பாட்டின் வெளிப்பாடு. உடலும், மனமும் இதனால் கட்டுப்படும்.

எனக்குத் தெரிந்த சில மருத்துவர்களை சந்தித்த போது ஐயப்பனுக்கு மாலை அணிந்ததால் நீண்ட நாட்களாக மதுப்பழக்கத்திற்கு அடிமையாக இருந்த பலர் திருந்தி இன்று சிறப்பாக வாழ்ந்து வருவதாகக் கூறுவார்கள். இதேபோல் கெட்ட பழக்கங்கள் சிலவற்றையும் கைவிட ஐயப்பனுக்கு மாலை அணியுங்கள் என்று வலியுறுத்துகிறோம். இறைவன் அருளால் சிலர் தீய பழக்கங்களில் இருந்து விடுபடுகின்றனர்.

செருப்பு அணியக் கூடாது: “கல்லும், முள்ளும் சாமிக்கு மெத்தை” என்ற ஐயப்பனை நினைத்துப் பாடிக் கொண்டே சபரிமலையில் ஏறுவது அனைவரும் சமம் என்பதை சுட்டிக்காட்டவே.

ஏ.சி. அறையில் கால் மேல் கால் போட்டுக் கொண்டு உயர்ந்த பதவியில் இருக்கும் அதிகாரியானாலும், அதே அலுவலகத்தில் பணியாற்றும் கடைநிலை ஊழியராக இருந்தாலும் சபரிமலைக்கு செல்லும் போது காலில் செருப்பு அணியக் கூடாது. மன்னாதி மன்னாக இருந்தாலும் இறைவன் முன் அனைவரும் சமம் என்ற கருத்தைத்தான் இந்த வழிமுறை வலியுறுத்துகிறது.

18 படி ஏறுவது எதனால்: பதினென் சித்தர்களை அடையாளம் காட்டக் கூடிய வகையில் சபரிமலை ஐயப்பன் கோயிலில் 18 படிகள் அமைக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி நமது மனதிலேயே 18 படிகள் (நிலைகள்) உள்ளது. அந்த 18 நிலைகளையும் நாம் கடப்பதற்கு உதவும் வகையிலேயே 18 படிகள் உருவாக்கப்பட்டுள்ளன.

இருமுடியுடன் சாமியை தரிசித்த பின்னர், அதனைப் பிரித்து அட்சதையை (பச்சரிசி) எடுத்துக் கொள்வதுடன், நெய்த் தேங்காயில் உள்ள நெய்யை எடுத்துக் கொண்டு தேங்காயை உடைத்து அக்னி குண்டத்தில் போட்டு எரித்து விடுகின்றனர்.

இதன் உள்அர்த்தம் என்னவென்றால் நமது பாவங்களையும், தவறுகளையும், அகங்காரம், கோபம் ஆகியவற்றையும் விட்டுவிட்டு, விரதத்தால் கிடைத்த பலனை, சக்தியை (நெய்) மட்டும் அங்கிருந்து எடுத்துக் கொண்டு வந்து மற்றவர்களுக்கு பிரசாதமாகக் கொடுக்கிறோம் என்பதுதான்.

மாளிகைபுரம் மஞ்சள் மாதா கோயில் ஐயப்பன் கோயிலில் இருந்து தொலைவில் அமைக்கப்பட்டுள்ளது ஏன்?

இதற்கு காரணம் உண்டு. நமக்கு எல்லோரும் இருந்தாலும் நாம் அவர்களிடம் இருந்து விலகியே இருக்க வேண்டும் என்பதை உணர்த்துவதற்காகவே மாளிகைபுரம் மஞ்சள் மாதா கோயில் சற்றே தொலைவில் கட்டப்பட்டுள்ளது.

மனைவியாக இருந்தாலும், மகன்/மகளாக இருந்தாலும் அவர்களிடம் அதிகாரம் செலுத்தாமல், அவர்களுக்கு உரிய மரியாதையைக் கொடுத்து, அவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப நடத்த வேண்டும். அதற்கு அவர்களை விட்டு சற்று விலகினால் நம்முடையை எண்ணங்களை அவர்களிடம் திணிக்காமல் இருக்கலாம்.

குடும்பத் தலைவனாக இருந்தால் தலைவனாக மட்டும் இருந்து கொள். குடும்ப உறுப்பினர்களிடம் உனது எண்ணங்களை திணிக்காதே என்பதே ஐயப்பன் உணர்த்தும் உவமை.
உனக்கென்று ஒரு எல்லை உள்ளது. அதனைத் தாண்டாதே என்பதால்தான் அவர் ஒவ்வொருவரையும் ஒரு எல்லைக்கு அப்பால் வைத்துள்ளார்.

Saturday, November 13, 2010

உணவே மருந்து - அவரை

கொடிக்காய்களில் சிறந்தது.

மலிவான விலையில் நிறைய ஊட்டச்சத்தினை தருகிறது. புரதம், சுண்ணாம்புச்சத்து, இரும்பு,வைட்டமின் சத்துக்கள் இதில் ஒருங்கே உள்ளன. மிக எளிதில் செரிமானம் ஆகக் கூடியது.பலவீனமான குடல் உள்ளவர்களும், இரவுநேரத்திலும்,பத்திய உணவாகவும் உட்க்கொள்ளலாம்.

முத்திய அவரையை விட, பிஞ்சு அவரை நல்லது.

வெண்ணிற அவரை - வாயு, பித்தம், இவற்றை கண்டிக்கும்.உள்ளுறுப்புகளின் அழற்சியை
போக்கும்.எரிச்சலை அடக்கும்.

நீரிழிவு நோய், பேதித்தொல்லை, அடிக்கடி தலை நோய் வருதல், ஜீரணக் கோளாறு, இவற்றிற்கு அவரையை உணவில் அடிக்கடி சேர்ப்பது நல்லது.

அஸ்ஸாமில் காத்து வலிக்கும், தொண்டை வலிக்கும் அவரைக்காயின் சாரை பயன்படுத்துகிறார்கள்.

ரத்தக் கொதிப்பை தடுக்கும் ஆற்றல் இதற்கு உண்டு என்பது அண்மைய கண்டுபிடிப்பு.
அவரையைப் பற்றிய பழைய வைத்திய நூல் குறிப்பு

மளிகை சாமான்களின் ஆங்கிலப் பெயர்கள்

சில நபர்களுக்கு மளிகை சாமான்களின் தமிழ்பெயர் தெரிந்திருக்கும் ஆங்கிலபெயர் தெரியாது. சில நபர்களுக்கு மளிகை சாமான்களின்ஆங்கில பெயர்கள் தெரிந்திருக்கும் தமிழ் பெயர் தெரியாது. அவர்களுக்கு உதவியாக இருக்கும் என நினைக்கிறேன்.

அவரை – Beans – பீன்ஸ்

இஞ்சி – Ginger – ஜின்ஜர்

உப்பு – Salt – ஸால்ட்

உளுந்து – Black Gram – பிளாக் கிராம்

பூண்டு – Garlic – கார்லிக்

எண்ணெய் – Oil – ஆயில்

ஏலக்காய் – Cardamom – கார்டாமாம்

கசகசா – Poppy – பாப்பி

கடலை – Bengal Gram – பெங்கால் கிராம்

கடுகு – Mustard – முஸ்டார்ட்

கம்பு – Millet – மில்லட்

கஸ்தூரி – Musk – மஸ்க்

குங்குமப்பூ – Saffron – சஃப்ரான்

கேழ்வரகு – Ragi – ராகி

கொள்ளு – Horse Gram – ஹார்ஸ் கிராம்

கோதுமை – Wheat – வீட்

சீரகம் – Cumin – குமின்

தனியா – Coriander – கோரியண்டர்

தயிர் – Curd – க்கார்ட்

துவரை – Red Gram – ரெட்கிராம்

கடலை எண்ணெய் – Gram Oil – கிராம் ஆயில்

தேங்காய் எண்ணெய் – Cocoanut Oil – கோக்கநட் ஆயில்

நல்லெண்ணெய் – Gingili Oil – ஜின்ஜிலி ஆயில்

நெய் – Ghee – கீ

நெல் – Paddy – பாடி

அரிசி – Rice – ரய்ஸ்

பச்சைப்பயறு – Green Gram – கீரின் கிராம்

பாசிப்பருப்பு – Moong Dal – மூனிங் தால்

கடலைப்பருப்பு – Gram Dal – கிராம் தால்

பன்னீர் – Rose Water – ரோஸ் வாட்டர்

பால் – Milk – மில்க்

பால்கட்டி – Cheese – ச்சீஸ்

புளி – Tamarind – டாமரிண்ட்

பெருங்காயம் – Asafoetida – அசஃபோய்டைடா

மக்காச்சோளம் – Maize – மெய்ஸ்

மஞ்சள் – Turmeric – டர்மரிக்

மிளகாய் – Chillies – சில்லிஸ்

மிளகு – Pepper – பெப்பர்

மோர் – Butter Milk – பட்டர் மில்க்

லவங்கம் – Cloves – க்லெளவ்ஸ்

வெங்காயம் – Onion – ஆனியன்

வெண்ணெய் – Butter – பட்டர்

வெல்லம் – Jaggery – ஜாக்கரீ

ஜாதிக்காய் – Nutmeg – நட்மெக்

ஜாதிபத்திரி – Mace – மெக்

வாற்கோதுமை – Barley – பார்லி

சர்க்கரை – Sugar – ஸுகர்

Wednesday, November 10, 2010

பூண்டு (Garlic) - பூண்டை விட சிறந்தது வேறில்லை


உணவில் பூண்டு சேர்க்கும் பழக்கம் உண்டா உங்களுக்கு? இல்லையெனில், இனியாவது சேருங்கள்; பூண்டில் இல்லாத சத்துக்களே இல்லை. உங்கள் குடும்ப டாக்டர் பில் குறையணும்; இருமல், காய்ச்சல் வராமல் இருக்க வேண்டுமானால், பூண்டை விட சிறந்தது வேறில்லை.

கடுகு, மிளகு, தனியா போன்ற அன்றாட உணவு தானியங்களில் ஆரம்பித்து, நாம் பல ஆண்டாக பின்பற்றும் தானியங்களில் இல்லாத சத்துக்களே இல்லை. அமெரிக்கா உட்பட பல நாடுகளிலும் சரி, ஐந்து நட்சத்திர ஓட்டல்களிலும் சரி, இந்த தானியங்கள் தான் சுவை சேர்க்கின்றன.

எளிய முறையில் பயன்படுத்தக்கூடிய இந்த உணவு தானியங்களில் உள்ள மகிமை, இப்போதுள்ள தலைமுறையினருக்கு தெரிவதில்லை என்பது வேதனை தான். இந்த வகையில் இயற்கையாக கிடைக்கும் பூண்டு, நமக்கு தரும் மருத்துவ பயன்கள் பட்டியலிட முடியாதவை. சீனாவில் யுன்னான் மாகாணத்தில் தான் முதன் முதலில் பிறந்தது இந்த வெங்காய குடும்ப வகையை சேர்ந்த பூண்டு.

சீனாவை அடுத்து அதிகமாக உற்பத்தி செய்வது இந்தியா தான். மருத்துவ, உணவுகளில் பயன்படுத்தப்படுகிறது என்றாலும், இப்போது தான் பூண்டு மகிமை பலருக்கு தெரிகிறது.

* தினமும் மூன்று பூண்டு விழுதுகளை கடித்து சாப்பிட்டாலே போதும்; ஜலதோஷம் முதல் தொற்றுக்கிருமிகள், வயிற்று பிரச்னைகள் எதுவும் வராது.

* பூண்டு சாப்பிட்டால், மூச்சு விட்டாலும், அதன் மணம் தான் வீசும். மூக்கை பிடிக்க வைக்கும் வாசனை தான் பலரையும் சாப்பிட விடாமல் பயமுறுத்துகிறது.

* பாக்டீரியா, வைரஸ் மூலம் பரவும் காய்ச்சல், இருமல், தொற்றுநோய்கள், காயங்கள் எதுவும் பூண்டு சாப்பிட்டு வந்தால் வரவே வராது. வந்தாலும் உடனே பறந்து விடும்.
* உணவில் சேர்த்தால் நல்லது தான்;ஆனால், அதில் சத்துக்கள் குறைந்து விடுகின்றன; அதனால், அப்படியே கடித்து விழுங்குவது நல்லதே.

* தொண்டை கரகரப்பா? கவலையே வேண்டாம்; டாக்டரிடம் போக வேண்டாம்; நான்கு பூண்டு விழுதுகளை கடித்து விழுங்கி விடுங்கள்.

* சர்க்கரை நோயுள்ளவர்கள் பூண்டு உட்கொண் டால், சர்க்கரை அளவை சீராக்குகிறது; இன்சுலின் சுரப்பதை அதிகரிக்கிறது.

* ஐந்து மாதம் தொடர்ந்து பூண்டு சாப்பிட்டு வந்தால், ரத்த அழுத்தம் குறைந்து விடும்.

* பூண்டில் , அலிசின் என்ற ஆன்டிஆக்சிடண்ட் உள்ளது. இந்த சத்து, உடலில் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

* கழலை, மரு போன்றவை நீங்குவதற்கும் பூண்டு கைகொடுக்கிறது. இரவு தூங்கும் முன், சிறிது அரைத்து அதன் மீது பூசினால் போதும், நாளடைவில் மரு காணாமல் போய்விடும்.

* அலர்ஜியை விரட்ட அருமையான மருந்து பூண்டு; மூன்று வாரம் தொடர்ந்து ஒரு நாளைக்கு மூன்று பூண்டு விழுது சாப்பிட்டு வந்தால் போதும், அலர்ஜி போய் விடும்.

* பல்வலியா, அதற்கும் பூண்டு போதும். ஒரு விழுதை கடித்து அதன் ரசம் பட்டால் போதும், பல்வலி போய்விடும்.