Thursday, September 29, 2011

சில சுவாரசியமான தகவல்கள்


பெல்ட்


இரண்டாம் உலகப்போர் தீவிரமாக நடந்து கொண்டிருந்தது. முசோலினி ஹிட்லருக்கு தந்தி அனுப்பினார்,''நிலைமை மிக மோசம். உணவு அவசரத்தேவை. தயவுசெய்து உடனே அனுப்பி வைக்கவும்,''ஹிட்லரிடமிருந்து பதில் தந்தி சென்றது,''உணவுப் பொருட்கள் தங்களுக்கு அனுப்ப வசதி இல்லை. வருந்துகிறேன் ஒவ்வொரு தானிய மணியும் உள்நாட்டிற்கும்,ரஷ்யப் போர்முனைக்கும் தேவைப்படுகிறது ஆகவே வயிறுகளைப் பெல்ட்டினால் இறுகக் கட்டிக் கொள்ளவும்,''முசோலினி மீண்டும் தந்தி அனுப்பினார்,''தயவு செய்து பெல்ட்டுகளையாவது அனுப்பி வையுங்கள்.''

இரவல்

பிரபல நகைச்சுவை எழுத்தாளர் மார்க் ட்வைன் ஒருவரிடம் புத்தகம் ஒன்றை இரவல் கேட்டார். அதற்கு அந்த நண்பர்,''என் அறையில் படிப்பதாக இருந்தால் தருகிறேன்,''என்றார். மார்க் ட்வைன் பேசாமல் திரும்பி விட்டார். சில நாட்கள் கழித்து அதே நண்பர் மார்க் ட்வைனிடம்,''உங்கள் தோட்டத்துக் கடப்பாறையை ஒரு நாள் இரவல் கொடுங்கள்,''என்று கேட்டார். மார்க் ட்வைன் அமைதியாகச் சொன்னார்,''என் தோட்டத்தில் தோண்டுவதாக இருந்தால் கொடுக்கிறேன்.''

ஒருவர் பெர்னாட்ஷாவைக் கேட்டார்,''ஏன் இப்படி பஞ்சத்தில் அடிபட்ட ஆள் மாதிரி இருக்கிறீர்கள்?''ஷா சொன்னார்,''என்னைப் பார்த்தால் அப்படி இருப்பது உண்மை. ஆனால் பஞ்சம் எப்படி வந்தது என்பது உங்கள் உருவத்தைப் பார்த்தாலே தெரியும்!''

ஒருவர் நேதாஜியிடம் சொன்னார்,''ஆங்கிலேயர்களுடையது சூரியனே அஸ்தமிக்காத சாம்ராஜ்யம்,''நேதாஜி சொன்னார்,''உண்மை.அவர்களை இருட்டில் நடமாடவிட இறைவனுக்கே பயம். அவ்வளவு பெரிய திருடர்கள்.''


இயல்புதானே?

பண்டித மணி கதிரேசன் செட்டியார் ஒருநாள் திருவாவடுதுறை ஆதீனத் தலைவரைப் பார்க்க சென்றிருந்தார். அவர் ஆதீனத்தை உடல் தாழ்ந்து வணங்கும் போது கால் தடுமாறிக் கீழே விழப்போனார். ஆதீனத்தலைவர் அவரை சட்டென்று எழுந்து தாங்கிப் பிடித்துக் கொண்டார். செட்டியார் மறுபடியும் ஆதீனத்தை வணங்கி,''எல்லாமே இயல்பாகத்தானே நடந்திருக்கிறது,சுவாமி,''என்றார். ஆதீனத் தலைவர் அவர் சொல்வது விளங்காமல்,''இயல்பாக என்ன இப்போது நடந்தது?''என்று கேட்டார். கதிரேசன் செட்டியார் விளக்கம் சொன்னார்,''எங்களைப் போன்ற அடியவர்கள் தவறுவதும், தங்களைப்போன்ற ஆன்மீகப் பெரியவர்கள் தாங்கி வழி நடத்துவதும் இயல்புதானே? அதுதானே இப்போது நடந்திருக்கிறது?''ஆதீனத் தலைவர் செட்டியாரின் நகைச்சுவை உணர்வு கண்டு மகிழ்ந்தார்.


திருநாள்

ஹிட்லர் ஒரு ஜோதிடரிடம்,''நான் எப்போது மரணம் அடைவேன் என்று சொல்ல முடியுமா?''என்று கேட்டார். அதற்கு ஜோதிடர்,''யூதர்களின் திருநாள் அன்றுதான் தாங்கள் மரணம் அடைவீர்கள்.''என்றார். ஹிட்லர் உடனே,''யூதர்களின் திருநாள் எப்போது வரும்?''என்று வினவினார். ஜோதிடன் சொன்னான்,''தாங்கள் இறக்கும் நாள்தான் யூதர்களின் திருநாள்.''ஜோதிடன் உயிருடன் திரும்பியிருப்பானா?


பிடித்த மதம்

மதுரையில் கல்லூரி விழா ஒன்றில் சிறப்பு சொற்பொழிவாற்ற கவிஞர் கண்ணதாசன் அழைக்கப்பட்டிருந்தார். விழா அரங்கு முழுவதும் மாணவர்கள். குறித்த நேரத்தில் கவியரசர் வரவில்லை. மாணவர்கள் விசிலடித்து சப்தம் போட ஆரம்பித்தனர். ஒரு வழியாய் ஒரு மணி நேர தாமதத்தில் வந்து சேர்ந்தார் கவிஞர். கல்லூரி முதல்வர் வரவேற்புரை நிகழ்த்தியபோது கூட மாணவர்களிடையே சலசலப்பு குறையவில்லை. பின் கண்ணதாசன் பேச ஆரம்பித்தார்,''ஒரு சிலருக்கு இந்து மதம் பிடிக்கும். சிலருக்கு இஸ்லாமும்,சிலருக்கு கிறிஸ்துவ மதமும் பிடிக்கும். எனக்குப் பிடித்த மதம்.....''என்று சொல்லி நிறுத்தினார். மாணவர்களிடையே அமைதி. அவர் என்ன சொல்லப் போகிறார் என்று அனைவருக்கும் ஆவல். அவர் தொடர்ந்தார்,''எனக்குப் பிடித்த மதம் தாமதம்,''என்று சொன்னவுடனேயே பலத்த கரவொலி எழுந்தது. அதன் பின் அவர் தாமதத்துக்கு மன்னிப்புக் கேட்டுவிட்டு தன் இனிய பேச்சைத் தொடர்ந்தார்.


வரவேற்பு

காந்தி அடிகள் ஒரு முறை கவிஞர் ரவீந்திரநாத் தாகூரின் சாந்திநிகேதனுக்கு சென்று இருந்தார். தாகூர் தேசப் பிதாவை வரவேற்கும்போது,''என்றும் இளமை பொருந்திய எங்கள் இதய அரசியான சாந்தி நிகேதன் தங்களை வரவேற்பதில் பெருமை கொள்கிறாள்,'' என்றார். மகாத்மா சிரித்துக் கொண்டே,''அப்படியானால் இந்தக் கிழவனுக்கு அதிர்ஷ்டம் அடிக்கிறது என்று சொல்லுங்கள். இல்லாவிட்டால்,என்றும் இளமையுடன் விளங்கும் உங்கள் அரசி இந்தப் பல் இல்லாத கிழவனை வரவேற்பாளா?''என்று பேசினார். காந்திஜியின் நகைச்சுவை உணர்வை அனைவரும் ரசித்தனர்.


மும்மணிகள்

ஒரு விழாவில் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை,ரசிகமணி டி.கே.சி.,கல்கி ஆகிய மூவரும் கலந்து கொண்டனர்.வரவேற்புரை நிகழ்த்திய ஒருவர் ,''இவ்விழாவில் மும்மணிகள் கலந்துகொண்டு சிறப்பு செய்துள்ளனர்,''என்று பேசினார். அடுத்து கல்கி பேச ஆரம்பித்தார்.அவர்,''வரவேற்புரையில் மும்மணிகள் வந்திருப்பதாகக் கூறினார்கள். அதில் ஒருவர் கவிமணி..இன்னொருவர் ரசிகமணி. இதில் மூன்றாவது மணியாக இருப்பதற்கு நான் ஒரு பெண்மணியாகக் கூட இல்லையே என்று வருத்தமாக இருக்கிறது,''என்று பேச கூட்டத்தில் சிரிப்பு அடங்க வெகு நேரமாயிற்று.


பேசும் எந்திரம்

பிரபலமான விஞ்ஞானியான தாமஸ் ஆல்வா எடிசன் ஒரு முறை விருந்தொன்றில் கலந்து கொண்டபோது ஒரு நண்பர் அங்கு வந்து பேச ஆரம்பித்தார். எடிசனிடம் அவர் தொடர்ந்து இடை வெளியில்லாது நிறுத்தாமல் பேசிக் கொண்டிருந்தார். எடிசனுக்கோ தாங்க முடியவில்லை. இருந்தாலும் அங்கிருந்து நகலவும் வழியில்லை. நண்பர் அருகிலிருந்த இன்னொருவரிடம் எடிசனை அறிமுகப் படுத்தினார்,''பேசும் எந்திரமான கிராம போன் ரிக்கார்டைக் கண்டு பிடித்தது என் நண்பர் எடிசன்தான்,''என்றார். எடிசன் அவரிடம் சொன்னார்,''நான் பேசும் எந்திரத்தைக் கண்டு பிடித்தது உண்மைதான். ஆனால் நினைத்த நேரத்தில் அதை நிறுத்தி விட முடியும்.''


சீனிவாசன்

பண்டிதமணி கதிரேசன் செட்டியாருக்கு ஒருவர் விருந்தளித்தார். உணவு சாப்பிட்டு முடிந்ததும் அவருக்கு ஒரு தம்ளரில் பால் கொடுத்தனர். அதை வாங்கிய பண்டிதமணி தம்ளரை உற்றுப் பார்த்துவிட்டு,''திருப்பாற்கடலில் சீனிவாசன் பள்ளி கொண்டிருக்கிறாரே!''என்றார். விருந்தளித்தவருக்கு ஒன்றும் புரியாமல் திகைப்பு ஏற்பட்டது. உடனே பால் தம்ளரை வாங்கிப் பார்த்தார்,''அடடே,எறும்பு இருக்கிறது,''என்றார். செட்டியார் சொன்னார்,''எறும்பு சீனியில் வாசம் செய்யக் கூடியது அல்லவா? அதனால் தான் அதை சீனிவாசன் என்று சொன்னேன்''என்றார்.


உபயோகம்

1961 ல் சீனா இந்தியாவின் சில பகுதிகளை ஆக்கிரமித்தது. அப்போது நேரு பிரதமராக இருந்தார்,பாராளுமன்றத்தில் ஆக்கிரமிப்பு பற்றி ஏகப்பட்ட சலசலப்பு. அப்போது நேரு ,''சீனா சில பகுதிகளைப் பிடித்திருப்பது உண்மைதான். ஆனால் அவை ஒன்றுக்கும் பயன்படாத பகுதிகள். அங்கு புல் பூண்டு கூட முளைக்காது.''என்றார். உடனே சிறந்த பாராளுமன்றவாதியான மகாவீர் தியாகி எழுந்து ,''இதோ,என் தலையைப் பாருங்கள்,''என்று கூறி தனது வழுக்கைத் தலையைக் காட்டினார். பின் அவர் கேட்டார் ,''என் தலையில் கூட ஒன்றும் முளைக்கவில்லை. அதனால் அது பயனில்லாத பகுதி என்று சொல்வீர்களா?''நேரு உட்பட அனைவரும் சிரித்து விட்டார்கள்.


சொல்லின் செல்வர்

ஒரு ஊரில் கிருபானந்த வாரியார் சொற்பொழிவு ஆற்றிக் கொண்டிருந்தார். அவர் மிகுந்த சுவாரசியமாகப் பேசிக் கொண்டிருந்தபோது பாதியில் ஒவ்வொருவராக எழுந்து போய்க் கொண்டிருந்தனர். அவர்களைப் பார்த்து வாரியார் சொன்னார்,''ராமாயணத்தில் அனுமனை சொல்லின் செல்வர் என்று குறிப்பிடுவார்கள். இந்த ஊரிலும் சொல்லின் செல்வர்கள் பலர் இருப்பதைப் பார்க்கிறேன்.''என்றார். போய்க்கொண்டிருந்தவர்கள் யாரை சொல்லப் போகிறார் என்று தெரிந்து கொள்ள ஆவலுடன் நின்றனர். வாரியார் தொடர்ந்தார்,''நான் நல்ல பல விஷயங்களைச் சொல்லின் அதைக் கேட்காமல் செல்பவரைத் தான் சொல்கிறேன் .''


அறிஞர்

கவிஞர் வாலி ஒரு அறிஞரைப் பார்க்கப் போயிருந்தார். அவர் கேட்டார்,''வாலி என்று ஏன் பெயர் வைத்திருக்கிறாய்?''வாலி சொன்னார்,''ராமாயணத்திலே,வாலி யாரோடுசேர்கிறானோ,அவருடைய பலத்தில் பாதி,அவனுக்கு வந்து விடுமாம். அதுபோல அறிஞர்களுடன் பழகும்போது,அவர்களது அறிவில் பாதிஎனக்கு வந்து விடுமல்லவா?அதனால் தான் நான் அந்தப் பெயரை தேர்ந்தெடுத்தேன்.''அறிஞர் உடனே கிண்டலாக சொன்னார்,''அப்படியும் உனக்கு அறிவு வந்ததாகத் தெரியவில்லையே?'' வாலி சிரித்துக் கொண்டே,''நான் இன்னும் எந்த அறிவாளியையும் சந்திக்கவில்லையே!''என்றார்.


தெரியுமா?

பிரபலமான நாவலாசிரியர்,ஜார்ஜ் மூர் ஒரு சிறந்த மேதை. அவருக்கு இளமையில் கர்வம் மிகுதியாக இருந்தது. டப்ளின் நகர ஆர்ச் பிஷப் டாக்டர் வால்ஷ் என்பவருக்கு ஒரு நாள் ஜார்ஜ் மூர் கீழ்க்கண்டவாறு கடிதம் ஒன்றை எழுதினார்.
அன்பார்ந்த ஆர்ச் பிஷப் அவர்களே,
உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா? நான் கிறிஸ்துவ மதத்தை விட்டு விட்டேன்.
இப்படிக்கு.
ஜார்ஜ் மூர்.
அதற்கு பிஷப் பதில் எழுதினார்:
அன்பார்ந்த மூர்,
ஒரு பசுவின் வால் நுனியில் ஈ உட்கார்ந்த கதை உங்களுக்குத் தெரியுமா? 'பசுவே நான் போய் வருகிறேன்' என ஈ கூறியதாம்.அப்போது பசு தன் வால் பக்கம் திரும்பி,''நீ இவ்வளவு நேரம் இங்கே இருந்ததே எனக்குத் தெரியாதே!''என்று பதில் சொல்லியதாம்.
இப்படிக்கு
ஆர்ச் பிஷப்


உடைமை

அமெரிக்காவில் எர்க் மார்வெல் என்ற பொதுவுடைமைவாதி ஒருவர் இருந்தார். அவருக்கு நண்பர் ஒருவர் இருந்தார். அவருக்கு பொது உடைமைக் கருத்துகள் பிடிக்காது. எனவே அவர் மார்வெல்லை அடிக்கடி கிண்டல் செய்வதுண்டு. ஒரு நாள் அவர்,''நண்பரே,உலகில் எல்லாப் பொருட்களும் பொது உடைமை ஆக்கப்பட வேண்டும் என்று கூறுகிறீரே,உமதுமனைவியையும் பொதுஉடைமை ஆக்கச் சம்மதிப்பீரா?'' என்று கேலியாகக் கேட்டார். உயிருள்ள தன் மனைவியை ஒரு பொருளுடன் ஒப்பிட்டதை மார்வெல் விரும்பவில்லை. எனினும் தன் நண்பரின் வாயடைக்க விரும்பினார். அவர் நண்பரிடம் கேட்டார் ,''தனிஉடமை தான் சிறந்தது என்று சொல்லும் நீர், உமக்கு உரிமையுடைய உன் பெண் குழந்தைகளை நீரே மணந்து கொள்வீரா?''நண்பர் வாயைத் திறக்கவில்லை.


எந்த கட்சி?

அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த ரூஸ்வெல்ட் தமது குடியரசுக் கட்சிக்காக தேர்தல் பிரச்சாரம் செய்து கொண்டிருந்தார். கூட்டத்தில் ஒருவன் எழுந்து,''நான் ஜனநாயகக் கட்சியை சேர்ந்தவன்,''என்று கூச்சலிட்டான். ''நீ ஏன் அந்த கட்சியில் இருக்கிறாய்?''என்று அவனிடம் கேட்டார் ரூஸ்வெல்ட். அவன் சொன்னான்,''என் தாத்தா ஜனநாயகக் கட்சியில் இருந்தார். எனவே நானும் அதே கட்சியில் இருக்கிறேன்.''ரூஸ்வெல்ட் உடனே கோபத்துடன் கேட்டார்,''உன் தாத்தா கழுதையாக இருந்திருந்தால் நீ எந்தக் கட்சியில்இருப்பாய்? அவன் கொஞ்சம் கூட அலட்டிக் கொள்ளாமல் சொன்னான்,''கட்டாயம் உங்கள் குடியரசுக் கட்சியில் இருந்திருப்பேன்.''


கெளரவம்

இங்கிலாந்து அரசராக இருந்தவர் எட்டாவது எட்வர்ட். சிறுவனாக இருக்கும்போது ,ஒரு நாள் அவரது ஆசிரியர் பாடம் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருக்கும்போது,''சொர்க்கத்தில் எல்லா மனிதர்களும் ஒன்றாகக் கருதப்படுவார்கள்.''என்றார்.உடனே எட்வர்ட்,''என்ன,எல்லோரும் ஒன்றாகக் கருதப்படுவார்களா?என் பாட்டி விக்டோரியா மகாராணியாரைக் கூடவா எல்லோருடனும் ஒன்றாகக் கருதுவார்கள்?''என்று சந்தேகம் கேட்டார்.''ஆமாம்.''என்று ஆசிரியர் கூறினார்.''அப்படியானால் என் பாட்டிக்கு அது கொஞ்சம் கூடப் பிடிக்காது. அவர் அங்கே உறுதியாகப் போக மாட்டார்.''என்று அப்பாவியாகப் பதில் கூறினார் எட்வர்ட்.


சோம்பேறி

மார்க் ட்வைன் இளைஞராக இருந்தபோது ஒரு நிறுவனத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். ஆறு மாதம் கழிந்தபின் மேனேஜர் அவரை அழைத்து வேலையிலிருந்து, அவரை நிறுத்துவதாகக் கூறினார். காரணம் என்னவென்று வினவியபோது,மேனேஜர் சொன்னார்,''நீ ஒரு சரியான சோம்பேறி. நீ இந்த நிறுவனத்துக்கு லாயக்கில்லை.''மார்க் ட்வைன் உடனே சொன்னார்,''நீங்கள் தான் சரியான சோம்பேறி.''மேனேஜருக்கு கோபம் வந்தது. தன்னை ஏன் அவ்வாறு கூறினார் என்று கேட்க ட்வைன் சொன்னார்.';நான் ஒரு சோம்பேறி என்பதைக் கண்டுபிடிக்க உங்களுக்கு ஆறு மாதம் ஆகியிருக்கிறதே? நீங்கள் ஒரு சோம்பேறி என்பதை நான் வேலையில் சேர்ந்த அன்றே தெரிந்து கொண்டேன்.''


மரியாதைக்குறைவு

மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் யாரையுமே மரியாதைக் குறைவாய்ப் பேசி அறியாதவர். பாடல்களை கூட சற்று மரியாதைக் குறைவான வார்த்தைகள் வந்துவிட்டால் அதை மாற்ற வழி இருக்கிறதா என்று பார்ப்பார். கவியரசர் கண்ணதாசன் ஒரு படத்துக்கு,''யாரை நம்பி நான் பிறந்தேன் போங்கடா போங்க.''என்று ஒரு பாடலில் எழுதியிருந்தார். மெல்லிசை மன்னர் ,''என்ன கவிஞரே,இது மரியாதைக் குறைவாய் இருக்கிறதே,கொஞ்சம் மாற்றக்கூடாதா? யாரை நம்பி நான் பிறந்தேன்,போங்கய்யா போங்க,என்று எழுதக்கூடாதா?''என்று கேட்டார். அதற்கு கவிஞர் கிண்டலாகச் சொன்னார்,''டேய்,நீ ரொம்ப அடக்கமானவன். இது எனக்கு மட்டுமல்ல.ஊருக்கே தெரியும். விஜயவாடா என்கிற ஊரைக்கூட விஜயவாங்க என்று சொல்கிற ஆள் நீ. பேசாம நான் சொல்கிற பல்லவியை அப்படியே போடு .''

மலரும் நினைவுகள் - சிறுவர் பாடல்கள்

பள்ளி செல்ல விரும்பு!
பள்ளி செல்ல விரும்பு
பாடம் வெல்லக் கரும்பு;
படித்து விட்டுத் திரும்பு
பண்ண வேண்டாம் குறும்பு;
அரும்பு போல சிரிப்பாய்.



தோசையம்மா தோசை!
தோசையம்மா தோசை;
அம்மா சுட்ட தோசை;
அரிசி மாவும் உளுந்த மாவும்
கலந்து சுட்ட தோசை;
அப்பாவுக்கு நாலு;
அம்மாவுக்கு மூணு;
அண்ணனுக்கு ரெண்டு;
பாப்பாவுக்கு ஒண்ணு;
தின்னத் தின்ன ஆசை
திருப்பிக் கேட்டா பூசை.



கைவீசம்மா கைவீசு!
கைவீசம்மா கைவீசு
கடைக்குப் போகலாம் கைவீசு;
மிட்டாய் வாங்கலாம் கைவீசு
மெதுவாய்த் திங்கலாம் கைவீசு;
கோயிலுக்குப் போகலாம் கைவீசு
கும்பிட்டு வரலாம் கைவீசு!



குவாகுவா வாத்து!
குவாகுவா வாத்து
குள்ளமணி வாத்து;
மெல்ல உடலைச் சாய்த்து
மேலும் கீழும் பார்த்து;
செல்லமாக நடக்கும்
சின்னமணி வாத்து!



சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு!
சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு
சாயக்கிளியே சாய்ந்தாடு;
குத்து விளக்கே சாய்ந்தாடு
கோவில் புறாவே சாய்ந்தாடு!



அணிலே அணிலே ஓடி வா!
அணிலே அணிலே ஓடி வா
அழகிய அணிலே ஓடி வா;
கொய்யா மரம் ஏறி வா
குண்டுப்பழம் கொண்டு வா;
பாதிப்பழம் உன்னிடம்
மீதிப் பழம் என்னிடம்;
கூடிக்கூடி இருவரும்
கொறித்துக் கொறித்துத் தின்னலாம்.



பச்சைக்கிளி!
பச்சைக்கிளி பாடும்
பறந்து பறந்து ஓடும்;
உச்சிக் கிளையில் ஆடும்
உலுக்கி உலுக்கி ஆடும்;
குண்டு மாம்பழம் தேடும்
கூண்டில் அடைத்தால் வாடும்!


நிலா நிலா ஓடி வா!
நிலா நிலா ஓடி வா
நில்லாமல் ஓடி வா;
மலை மீது ஏறி வா
மல்லிகைப்பூ கொண்டு வா;
வட்ட வட்ட நிலாவே
வண்ண முகில் பூவே;
பட்டம் போலே பறந்து வா
பம்பரம் போல் சுற்றி வா.