Friday, December 16, 2011

மின்சாரம் தயாரிக்கும் முறை


காந்தத்திலிருந்து மின்சாரம் தயாரிப்பதைக் காணப் போகிறோம். சாதாரணமாக இது தான் நடக்கிறது.

நான்கு வலிமை வாய்ந்த காந்தங்களின் நடுவே ஒரு ஆணியைச் செலுத்துங்கள். படத்தில் காட்டியுள்ள படி மிக நுண்ணிய செம்பு வயர்களை இந்த ஆணி, காந்தப் பெட்டியைச் சுற்றி மேலும் மேலும் கட்டுங்கள். பின்னர் இரு நுனிகளையும் ஒரு பல்பில் படுமாறு வைத்து விட்டு காந்தத்தை ஆணி மூலம் சுழற்றினால், ஹுரே! பல்பு ஒளிரும். (கவனம்: இங்கு வருவது AC மின்சாரம் ஆகும். (நேர் மின்சாரம் அல்ல) அதற்கேற்ற பல்பு, அதுவும் வோல்டேஜ் குறைந்தது தான் இவ்வாறு இயங்கும்!

மின்சாரத்தை தயாரிக்கும் சோலார் கொடிகளை உருவாக்கி ஆய்வாளர்கள் சாதனை

உலகம் முழுவதும் பற்றாக்குறையாக இருப்பது மின்சாரம். தேவை அதிகரித்து வருவதால் மின் உற்பத்தியில் அதிக கவனம் செலுத்த வேண்டி உள்ளது.
மின்சாரத்துக்கு மாற்றாக சோலார் பவர் பயன்படுத்தப்படுகிறது. சூரிய ஒளியில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் முறையும் பரவி வருகிறது. சோலார் பவர் மூலம் இயங்கும் வாட்டர் ஹீட்டர்கள், மின் விளக்குகள் உள்ளிட்ட ஏராளமான சாதனங்கள் சந்தைப்படுத்தப்பட்டுள்ளன. இதன் தொடர்ச்சியாக தற்போது "சோலார் ஐவி" என்ற மின்சாரம் தயாரிக்கும் கொடி அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

நியூயோர்க் சஸ்டெயினப்ளி மைன்டட் இன்டராக்டிவ் டெக்னாலஜி(எஸ்.எம்.ஐ.டி) நிறுவனம் மற்றும் உத்தா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் இணைந்து டாம் மெல்பர்ன் தலைமையில் ஆய்வு ஒன்றை மேற்கொண்டனர்.

நீண்ட ஆராய்ச்சிக்கு பிறகு சூரிய ஒளியை கொண்டு மின்சாரம் தயாரிக்கும் சோலார் இலைகளை கொண்ட கொடிகளை தயாரித்துள்ளனர். ஏராளமான செயற்கை இலைகளை கொண்டு கொடிகளாக தயாரிக்கப்பட்டுள்ள இதற்கு சோலார் ஐவி என்று பெயரிடப்பட்டுள்ளது.

இந்த கொடிகளை வீட்டு வெளிப்புற சுவர்களில் படரவிட்டால் போதும். சூரிய ஒளியை கொண்டு உடனடியாக மின்சாரம் உற்பத்தி செய்யத் துவங்கும். அதன்மூலம் வீட்டுக்கு தேவையான மின்சாரத்தை நாமே தயாரித்துக் கொள்ளலாம்.

அதிக பொருட்செலவில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வில் சோதனை அடிப்படையில் வெற்றி கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஆராய்ச்சியாளர்கள் கூறியது: சோலார் ஐவி மின்சாரத்துக்கு மாற்றாக உருவாக்கப்பட்டுள்ளது. இவற்றை வீட்டின் வெளிப்புற சுவர்களில் பொருத்தினால் போதும். இயற்கையான கொடிகளை போன்று கண்ணை கவரும் விதமாக அழகாக படர்ந்திருக்கும்.

வீட்டுக்கு தேவையான மின்சாரத் தேவையையும் இதன் மூலம் பூர்த்தி செய்து கொள்ளலாம். இதில் நுண்ணிய போட்டோவோல்டெய்க் பேனல்கள் என்ற தகடுகள் பொருத்தப்பட்டிருக்கும். இவை சூரிய ஒளியில் இருந்து மின்சாரத்தை உற்பத்தி செய்யும்.

தேவைப்படும் மின்சாரத்துக்கு ஏற்ப கொடிகளை படரவிடலாம். பல வண்ணங்களிலும் வடிவங்களிலும் கொடிகள் கிடைக்கும். இதனால் எந்த பாதிப்புகளும் இருக்காது. இறுதிகட்ட ஒப்புதலையடுத்து விரைவில் பயன்பாட்டுக்கு வர உள்ளது.

செயற்கை இலை மின்சாரம்


அமெரிக்காவின் மசாகூசட்ஸ் தொழில்நுட்ப கல்வியகத்தின் பேராசியரான முனைவர் தானியேல் நோசேரா தலைமையிலான குழு, உலகின் முதல் செயற்கை இலையினை உருவாக்கியுள்ளனர். இந்த ஆக்கமானது அறிவியல் உலகில் குறிப்பிடத்தக்கதொரு சாதனை ஆகும். இதன் உருவம் ஆனது உண்மையான இலை போன்று இருக்காது, ஆனால் ஒரு இலையின் செயற்பாடுகளை துள்ளியமாக இது செய்யவல்லது. இந்த செயற்கை இலை தண்ணீரின் மீது மிதக்க விடப்படும் எனவும், இயற்கையில் கிடைக்கக் கூடிய சூரிய ஒளியினை உள்வாங்கி தண்ணீரின் ஹைட்ரஜன், ஆக்சிஜனை இது பிரித்து அதனூடாக மின்சாரத்தை உற்பத்தி செய்யும் எனவும் தெரிகிறது.

இயற்கை அன்னையின் செயல்பாடுகள் எப்போதுமே மனிதனுக்கு பல ஆக்கங்களுக்கு ஊக்கம் தந்துள்ளது. அந்த வகையில் மெய் இலையின் செயல்பாடுகளை அடிப்படையாக வைத்து இந்த இலையினை உருவாக்கியுள்ளனர். இதன்படி இந்த இலைகளை நீர்நிலைகளில் மிதக்க விடப்படும். அந்த இலைகளானது நீரில் இருக்கும் ஹைட்ரஜனையும், ஆக்சிஜனையும் சூரிய ஒளியினைக் கொண்டுப் பிரித்து அவற்றை வீடுகளுக்கு அருகே இருக்கும் fuel battery-களில் சேமித்து வைத்துக் கொள்ளும். அந்த பேட்ரிகளில் இருந்து மின்சாரத்தை பெற்றுக் கொள்ள முடியும். இந்த முறையிலான மின்சார ஆற்றலை பெறுவதன் ஊடாக சுற்றுப்புறச்சூழல் சீர்கேடு மிகவும் குறைவான முறையிலும், இந்தியா, ஆப்பிரிக்க நாடுகளில் கிராமப்புறங்களிலும் கூட மின்சாரத்தை எளிதாகப் பெறக்கூடியதாக இருக்கும்.

ஏற்கனவே பத்தாண்டுகளுக்கு முன் ஞசான் டேர்னர் என்பவரால் செயற்கை இலையினை உருவாக்கிவிட்ட போதிலும், அவரது ஆக்கம் வெகுவாக பயன்படுத்தக் கூடியதாக இல்லாமல் இருந்தது. அவரது கருவியானது அரிதான உலோகங்களால் கட்டப்பட்டு இருந்ததாலும், அவர் கண்டுப்பித்த பேட்ரியானது நிலையற்ற தன்மை வாய்ந்ததாக இருந்ததாலும் ( ஒரு நாள் மட்டுமே தாக்குப்பிடிக்கும் ) அவற்றை பொதுமக்களும் பயன்படுத்தக் முடியாமல் போனது.

ஆனால் தற்சமயம் உருவாக்கப்பட்டுள்ள இந்த இலையானது இயல்பான பொருட்களால் உருவாக்கப்பட்டுள்ளது, அனைத்து வித சுற்றுச்சூழலிலும் பயன்படுத்தக் கூடியதாகவும், நிலையான பேட்ரி என்பதாலும் இதனை கிராமங்களில் மிகவும் எளிதாகப் பயன்படுத்தக் கூடியதாக இருக்கும் என ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. இயற்கையான இலையை விடவும் பத்து மடங்கு அதிக ஆற்றல் பெற்றதாகவும் உள்ளது.

தற்சமயம் உருவாக்கப்பட்டுள்ள இந்த செயற்கை இலை ஒன்று தொடர்ந்து 45 மணிநேரம் இயங்கி மின்சார ஆற்றலை உற்பத்தி செய்யக் கூடியதாக இருப்பதாகவும், இதன் ஆயுளை அதிகப்படுத்தும் ஆய்வில் ஈடுப்பட்டுள்ளதாகவும், விரைவில் இன்னும் ஆற்றல் மிக்க இலைகளை உருவாக்க முடியும் என நம்பிக்கைத் தெரிவித்துள்ளார் தானியேல் நோசேரா.