Tuesday, May 31, 2011

பயனுள்ள பல‌ தகவல்கள்

1) தமிழகத்தில் எங்கேனும் குழந்தைகள் பிச்சை எடுத்து வாழ்க்கை நடத்துகிறார்கள் என்ற அவல நிலையைக் கண்டால் உடனே "RED Society" யின் 9940217816 என்ற எண்ணில் அழையுங்கள். அவர்கள் அக்குழந்தைகளின் கல்விக்கு வழி வகுப்பார்கள்.


2) குறிப்பிட்ட இரத்த வகையைத் தேடி அலைந்து கஷ்டப்படுபவர்கள்
http://www.bharatbloodbank.com/ இந்த இணையத்தில் தேடினால் ஆயிரமாயிரம் இரத்த தானம் அளிப்பவர்களின் முகவரிகள் நமக்குக் கிட்டும்.

3) பொறியியல் கல்வி படித்த மாணவர்கள் தங்களின் கல்வி விபரம் குறித்து http://www.campuscouncil.com/ என்ற தளத்தில் பதிந்து வைப்போமானால் குறிப்பிட்ட நாற்பது நிறுவனங்கள் நடத்தும் நேர்முகத் தேர்வில் எளிதாக கலந்து கொள்ள முடியும்.

4) மாற்றுத் திறனாளிகளுக்கான இலவசக் கல்வி, இலவச விடுதி குறித்து தகவலைப் பெற‌ 9842062501 & 9894067506 என்ற எண்களில் தொடர்பு கொண்டு அறிந்துக் கொள்ளலாம்.

5) தீ விபத்துக்களினாலோ அல்லது பிறக்கும்போதே வாய், காது , மூக்கு போன்ற உறுப்புக்களின் வளர்ச்சி குறைந்த நிலையில் இருந்தாலோ இலவசமாக ப்ளாஸ்டிக் சர்ஜரி செய்துக்கொள்ள முடியும். இந்த (மார்ச்)மாதம் 23 ம் தேதி முதல் ஏப்ரல் மாதம் 4 ம் தேதி வரை ஜெர்மானிய மருத்துவர்கள் PASAM Hospital , Kodaikanalமருத்துவமனைக்கு வரவிருக்கின்றார்கள். மேலும் தகவல்களைப் பெற 045420 240668,245732 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

6) வாகனம் ஓட்டும் உரிமை அட்டை, குடும்ப அட்டை, பாஸ்போர்ட், வங்கிக் கணக்குப் புத்தகம்... போன்ற முக்கிய ஆவணங்கள் ஏதேனும் கீழே கண்டெடுத்தால் அருகில் உள்ள அஞ்சல் பெட்டியில் ஸ்டாம்ப் இல்லாமலே இட்டுவிடுங்கள். அது தானாக உரியவரிடம் சேர்ந்துவிடும். அதற்குரிய அஞ்சற்செலவுத் தொகையை சம்பந்தப்பட்ட நபரிடமிருந்து அஞ்சலகங்கள் பெற்றுக்கொள்ளும்.

7) அடுத்த 10 மாதங்களில் நம் பூமியின் வெப்பநிலை கூடுதலாக 10 டிகிரி உயர்ந்து இப்போதிருக்கும் வெப்பத்தைவிட அதிகமான வெப்பம் இருக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் கருத்து தெரிவிக்கின்றார்கள். நமது இமய மலையில் உள்ள பனிப்பாளங்கள் கொஞ்சம் கொஞ்சமாக உருக ஆரம்பித்து விட்டனவாம். ஆகையினால் நாம் புவி வெப்ப மயமாதலை எதிர்த்துப் போராட வேண்டிய தருணத்தில் இருக்கின்றோம் என்பது நாமறிந்த செய்தியே!

அதனால் நம்மால் முடிந்தவரை,
*மரங்களை நட்டு அதனைப் பேணிக் காக்கலாம்.
*நீரினையும், இன்ன பிற சக்திகளையும் (மின்சாரம் உள்பட) தேவையில்லாமல் செலவழிப்பதை நிறுத்திக் கொள்ளலாம்.
* ப்ளாஸ்டிக் பயன்பாட்டினை முடிந்தவரை குறைக்கவும் அவற்றின் கழிவுகளை எரித்து நாசம் செய்யாமலும் இருக்கவும் முயற்சிக்கலாம்.

8) இப்போதிருக்கும் மனித இனம் ஆறு மாத காலங்களுக்கு சுவாசிக்கத் தேவையானபிராணவாயு தயாரிக்க 38 ட்ரில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும் என்று ஒரு ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தனை சிரமம் இல்லாமல் நமக்காக பிராண வாயு அளிக்கும் மரங்களை நட்டு, மனித வளத்திற்கு பாடுபடுவோம்!

9) கண் வங்கி, கண் தானம் குறித்து தகவல்களை அறிந்துக்கொள்ள சங்கர நேந்த்ராலயா கண் வங்கியின் சிறப்புத் தொடர்பு எண்களையும் குறித்து வைத்துக் கொள்ளுங்கள். தேவைப்படும் சமயம் நிச்சயமாக உதவும். 044 28281919 மற்றும் 044 282271616 மேலதிக விபரங்களுக்கும் எப்படி கண் தானம் செய்வது குறித்த தகவல்களுக்கும்: http://ruraleye.org/

10) பத்து வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு இருதய அறுவைச் சிகிச்சைதேவைப்பட்டால் அதனை இலவசமாகப் பெற ஸ்ரீ வள்ளி பாபா இன்ஸ்டியூட் பெங்களூர் நிறுவனம் உதவி செய்கின்றது. மேலும் விபரங்கள் பெற 9916737471

11) இரத்தப் புற்றுநோய்:
"Imitinef Merciliet" என்ற மருந்தின் மூலமாக இரத்தப் புற்றுநோயை குணப்படுத்தலாம். இது அடையார் புற்றுநோய் ஆராய்ச்சி மருத்துவமனையில் இலவசமாகக் கிடைக்கின்றது.

மேலும் விபரங்களுக்கு:
முகவரி:-

East Canal Bank Road, Gandhi Nagar,
Adyar Chennai - 600020
Land mark: மிக்கேல் பள்ளிக்கு அருகில்
தொலைபேசி இலக்கம் : 044 - 24910754, 044-24911526, 044-22350241

12) விசேஷ வைபவங்களில் மீதமாகும் உணவை கீழே கொட்டவேண்டாம். தயவுசெய்து தயங்காமல் 1098 இலக்கத்தில் அழைக்கவும் (இந்தியா மட்டும்). இந்த எண் சிரமத்தில் சிக்கித் தவிக்கும் குழந்தைகளுக்கு ஆதரவு தரும் எண் என்று அனைவரும் அறிந்ததே. பசியால் வாடும் குழந்தைகளுக்கு அவர்கள் பகிர்ந்தளிப்பார்கள்.

Saturday, May 14, 2011

ஒரு சாமானிய விவசாயி கோடிசுவரரான வெற்றிக் கதை!

உங்களை ஒரு மா மரக் கன்றை நட்டு வளர்க்கச் சொன்னால் என்ன செய்வீர்கள்? நீங்கள் எப்படியோ தெரியாது; பெரும்பாலானவர்களின் சிந்தனை, “இந்த கன்னு எப்போது வளர்ந்து, எப்போது மரமாகி, எப்போது காய்த்து, எப்போது பழம் சாப்பிடுவது? அதற்குள் நம் காலமே முடிந்துவிடும்” என்றுதான் போகும். ஆனால், தனக்கு மாம்பழம் கிடைக்குமா என எதிர்பார்க்காமல், தொடர்ந்து மா மரங்களை நடுபவர்களால்தான் இந்த உலகம் உயிர் வாழ்ந்துக் கொண்டிருக்கிறது என்பது காலம் உணர்த்தும் உண்மை. அப்படிப்பட்ட நல்ல உள்ளம் படைத்த மனிதர்களுள் ஒருவர், மரம் தங்கசாமி!

தனது பெயருடன் மரத்தைச் சேர்த்துக் கொண்டிருக்கும் த ங்கசாமி, காடு வளர்ப்பில் உலகு க்கே இன்று ஒரு முன்னுதாரணமாக இருக்கிறார். உல கின் பல பகுதி களில் இருந்தும் வேளாண் ஆராய் ச்சியாளர்கள் தங் கசாமியின் தோட் டத்துக்கு வந்து பார்வையிடுகிறார்க ள். தனி மனிதனாக அவர் செய்திருக்கும் சாதனைகள் பற்றி புத்தகம் எழுதுகிறார்கள். பத்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்திருக்கும் தங்கசாமியின் அனுபவங்கள், வேளாண் கல்லூரி மாணவர்களுக்கு பாடமாக இருக்கின்றன. புதுக்கோட்டை மாவட்டத்தில் கொத்த மங்கலத்துக்கு அருகே சேந்தன்குடி என்னும் கிராமத்தில், இருபத்தைந்து ஏக்கர் பரப்பளவில் அடர்ந்த காடு போல் இருக்கும் அவரது தோட்டத்துக்கு மாணவர்கள் பயிற்சிக்காக வருகிறார்கள். மரம் வளர்க்கும் தங்கசாமியின் பணி மற்றும் மக்களிடையே மரம் வளர்ப்பு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் அவரது சேவை ஆகியவற்றைப் பாராட்டி ஜனாதிபதி விருது தங்கசாமிக்கு வழங்கப்பட்டுள்ளது.

இன்று பலராலும் மலைப்பாக பார்க்கப்படும், கோடிகளுக்கு அதிபதியாக இருக்கும் மரம் தங்கசாமி, ஒரு காலத்தில் கடன்காரராகி, கடனை அடைக்க சொத்தை விற்றுவிட்டு எதாவது ஹோட்டலில் சர்வர் வேலைக்குப் போகலாமா என யோசித்துக் கொண்டிருந்தவர் என்பதுதான் உண்மை. அவர் வெற்றி பெற்றது எப்படி? அவரது கதையை அவரே சொல்கிறார்…

“எந்தக் கெட்டப்பழக்கமும் இல்லாத, உழைப்பில் நம்பிக்கை உள்ள விவசாயி நான். எனக்கு இரண்டு மனைவிகள், இரண்டு குழந்தைகள். எங்கள் குடும்பத்தார் அனைவரும் தினமும் பத்து முதல் பதினைந்து மணி நேரம் உழைத்தோம். ஆனாலும் நான் கடன்காரனானேன். 1975இல் வந்த கடுமையான வறட்சியின் போது, உற்பத்தி செய்த எந்த விவசாயப் பொருளுக்கும் கட்டுப்படியாகிற விலை இல்லை. இதனால் சாகுபடி செலவைக்கூட திரும்பி எடுக்கமுடியாத நிலை. விஞ்ஞான முறைப்படி விவசாயம் செய்ததால், ரசாயண உரங்களுக்குச் செய்த செலவே என்னைப் பெரிய கடன்காரனாக ஆக்கிவிட்டது. என்ன செய்வது என்று சிந்திக்கத் தொடங்கினேன். சொத்தை எல்லாம் விற்று கடன்களை அடைத்துவிட்டு, எதாவது ஹோட்டலில் சர்வர் வேலைக்குச் சேர்ந்து குடும்பத்தையாவது காப்பாற்றுவோம் என்று தோன்றியது. வேறு வழி இல்லை.

அப்போது பேராசிரியர் சீனிவாசன், ‘மரப்பயிரும் பணப்பயிரே’ என்னும் தலைப்பில் அகில இந்திய வானொலியில் பேசியதைக் கேட்டேன். அதுதான் என் வாழ்வின் திருப்புமுனை. அன்றே நான் செய்துவந்த விவசாய முறைகள் அனைத்தையும் மூட்டைக் கட்டி வைத்துவிட்டு, மரம் வளர்ப்பது என்று முடிவு செய்தேன். அப்போது எனக்கு நாற்பத்தைந்து வயது. நூறு தேக்கு மரங்களை நட்டேன். இருபது வருடங்களுக்குப் பிறகு, ஒவ்வொன்றாக அவற்றை வெட்டி விற்று வயதான காலத்தை ஓட்டுவதுதான் அப்போதைய என் திட்டம். ஆனால், ஒரு வருடத்திலேயே இருபது அடி உயரம் அவைகள் வளர்ந்தன. அது தந்த உற்சாகத்தில் நூறு மாங்கன்றுகளை நட்டேன். அப்புறம் அது அப்படியே நூறு முந்திரி, நூறு புளி என்று வளர்ந்துக் கொண்டே போனது.

மர வகைகளைத் தேடி பயணம் செய்த போது நம்மாழ்வார் பற்றி கேள்விப்பட்டு அவரைச் சந்தித்தேன். அவரைச் சந்தித்தது என் வாழ்வின் இரண்டாவது திருப்புமுனை. அன்றே அவரை என் குருவாக ஏற்றுக்கொண்டேன். தேசிய நிகழ்ச்சிகள், தேர்தல், தலைவர்களின் பிறந்த தினம் உட்பட எல்லா விஷேச நாட்களிலும் மரங்கள் நடுவேன். வீரப்பன் சுடப்பட்ட அன்று ஒரு சந்தன மரத்தை எங்கள் தோட்டத்தில் நட்டேன். எனக்கு மரம் நட ஒரு காரணம் தேவைப்படுகிறது. அதற்கு நான் சம்பவங்களையும் பண்டிகைகளையும் பயன்படுத்திக் கொள்கிறேன். அவ்வளவுதான். இப்போது என் தோட்டத்தில் நூற்றி தொன்னூறு சாதிகளைச் சேர்ந்த ஐயாயிரம் மரங்கள் இருக்கின்றன.

ஏன் ஒரே வகை மரங்களை வைக்காமல் பல்வேறு மரங்களை கலந்து நடுகிறேன் என்ற கேள்வி உங்களுக்கு எழலாம். ஒரு மரம் பூமியிலிருந்து ஒரு சத்தை எடுத்து, இன்னொரு சத்தை பூமிக்கு கொடுக்கும். இந்த மரம் கொடுக்கும் சத்தை உண்டு செழிக்கும் இன்னொரு மரம் வேறொரு சத்தை பூமிக்கு கொடுக்கும். இப்படியே இந்த சங்கிலி பலவேறு ஜாதி மரங்களுக்கும் தொடரும். காடு செழித்திருப்பதன் தத்துவம் இதுதான். எல்லா மர வகைகளும் ஒரே இடத்தில் இருக்கும் போது எல்லா மரங்களுக்கும் சரிசதமாக சத்து பகிர்ந்து கொடுக்கப்படுகிறது. இதனால், நானும் ஒரே வகையாக இல்லாமல், காடு போல் பல்வேறு வகை மரங்களை கலந்து வைத்திருக்கிறேன். வேம்பு, சந்தனம், ரோஸ்வுட், செஞ்சந்தனம், மகோகனி, நெல்லி, புளி என்று பல்வேறு மர வகைகளுடன் இப்போது என் பண்ணை ஒரு மாதிரி பண்ணையாக இருக்கிறது. கலப்பு பண்ணையின் மூலமே தன்னிறவு அடைய முடியும் என்பதுதான் என் அனுபவம். கடன் இல்லாத விவசாயம், நோய் இல்லாத வாழ்க்கை, நஞ்சில்லா உணவு இதன் மூலம்தான் சாத்தியம்.

திருமண வைபவங்களுக்கு செல்லும் போது மணமக்களுக்கு மரக் கன்றுகளைப் பரிசாகத் தருவேன். தலைவர்களை அழைத்து என் தோட்டத்திலும் எங்கள் கிராமத்திலும் மரம் நடும் விழாக்களை நடத்துகிறேன். என் வீட்டுக்கு வரும் ஒவ்வொரு விருந்தினர்களுக்கும் மரக்கன்றுகளை பரிசாக கொடுத்து அனுப்புவேன். பள்ளிக்கூடங்களுக்குச் சென்று குழந்தைகள் மத்தியில் மரம் நடுவதன் தேவையை வலியுறுத்திப் பேசுவேன். பள்ளிக்கூட வளாகத்திலேயே மரங்கள் நடுவேன். இன்று புதுக்கோட்டை மாவட்டத்தில் நான் மரம் நடாத பள்ளிக்கூடமே இல்லை எனலாம். மேலும் தமிழ்நாடு முழுக்கப் பயணம் செய்து பத்தாயிரம் வேப்பம் விதைகளை விதைத்திருக்கிறேன். அதில் ஆயிரமாவது மரமாகியிருக்கும். மரங்கள் என்னுடன் பேசுகின்றன, நான் அவைகளுடன் பேசுகிறேன். மரம் நடக்கும் என்பதையும் என் அனுபவத்தில் நான் கண்டிருக்கிறேன்.

இதையெல்லாம் சொன்ன போதும், ஆரம்பத்தில் நான் ஊர் ஊராகச் சென்று மரம் நடுவதைப் பார்த்து விட்டும் எங்கள் கிராமத்தவர்களும் சுற்று வட்டாரத்தைச் சேர்ந்தவர் களும் என்னைக் கிண்டலும் கேலியும் செய்தார்கள். “தங்க சாமிக்கு கிறுக்குப் பிடித்து விட்டது”, “கிறுக்குப் போகிறது பார்” என்று என் காது படவே பேசினார்கள். அப்போது, “யார் கிறுக்கன் என்பதை காலம் தீர்மானிக்கும்” என்று மட்டும் அவர்களுக்குப் பதில் சொன்னேன். இப்போது அவர்களே ஒப்புக்கொள்கிறார்கள், “உங்களைக் கிறுக்கன் என்று சொல்லி, கடைசியில் நாங்கள்தான் கிறுக்கன் ஆகிவிட்டோம்” என்று சொல்லுவதுடன், என்னைப் பின்பற்றவும் செய்கிறார்கள்.

இப்போது நான் தினமும் ஆறு மணி நேரம் உழைக்கிறேன். ஒரு மனைவி வீட்டுச் சமையலைப் பார்த்துக் கொள்கிறாள். இன்னொரு மனைவி கால்நடைகளைப் பராமறிக்கிறாள். அவள் ஏ. எம். டி. பயிற்சி முடித்திருக்கிறாள். நாங்கள் இருவரும் கலந்து பேசி பயிர் முறையை அமைக்கிறோம்.

எங்கள் தோட்டத்தில் இரண்டு கிணறுகள் உள்ளன. முதலில் கவலையைப் போட்டு இறைத்தோம். அப்புறம் தண்ணீர் மட்டம் கிழே போய்விட்டது. அப்போது ஸ்லோஸ்பீட் மோட்டார் இஞ்சினை உபயோகித்து நூற்றைம்பது அடி ஆழத்தில் இருந்து தண்ணீர் எடுத்தோம். அதன்பிறகு தண்ணீர் மட்டம் அதற்கும் கிழே போய்விட்டது. இப்போது, எழுபது ஆயிரம் ரூபாய் செலவு செய்து முன்னூறு அடி ஆழ்குழாய் கிணறு போட்டு, நீர் மூழ்கி பம்புசெட்டை உபயோகித்துத் தண்ணீர் எடுக்கிறேன்.

நான் ரசாயண உரங்களை உபயோகிப்பதில்லை. விவசாயிகளுக்குத் தங்கம் குப்பைதான். “எருக்குழி இல்லாம ஏர் கட்டாதே. குப்பை உயர்ந்தால் குடி உயரம்” என்று அந்த காலத்திலேயே சொல்லியிருக்கிறார்கள். என் தோட்டத்தில் நூறுக்கும் மேற்பட்ட கம்போஸ்ட் குழிகளைப் பராமரித்து வருகிறேன். பண்ணைக் கழிவுகளை அதில் நிரப்பி விடுவேன். என் தோட்டத்தில் நிறைய ஆடு, மாடுகள் இருக்கின்றன. சூபா புல், என்.பி.21 கொழுக்கட்டைப் புல், கிளேரி செரியா போன்றவற்றைப் பண்ணையில் பயிரிட்டிருக்கிறேன். எனவே ஆடு, மாடுகளுக்குத் தீவன பிரச்னை இல்லை. ஆடு, மாடுகள் போடும் சாணத்தை கம்போஸ்ட் குழிகளில் போட்டு நிரப்புவேன். மரங்களுக்கு இடையே வரிசை வரிசையாக குழிகளை வெட்டி, பண்ணைக் கழிவுகளை அதில் போடுகிறேன். மரங்களுக்கும் பயிர்களுக்கும் அடியுரமாக வேப்பம் புண்ணாக்கைப் போடுகிறேன். மண் வளம் பிரசினையே இல்லை.

எங்கள் தோட்டத்தில் களை எடுப்பதில்லை, உழுவதில்லை. கழிவுகளை அப்படியே விட்டுவிடுவோம். அவைகள் மக்கி உரமாகிவிடுகின்றன. மேலும் இந்தக் கழிவுகள் ஈரப்பதத்தைத் தக்கவைக்கவும் உதவுகின்றன. இப்படி கழிவுகளை அப்படியே விடும்போது, அதில் பல நுண்ணியிர்கள் உருவாகும். இந்த நுண்ணியிர்கள் மண்வளத்தைப் பாதுகாப்பதுடன், மண்ணைக் கிளறி உழ வேண்டிய தேவை இல்லாமல் செய்கின்றன. இப்போது என் தோட்டத்துக்கு மயில்கள் உட்பட பல்வேறு வகை பறவைகள் வருகின்றன. அவற்றில் பல நமது ஊர்களுக்கு முற்றிலும் புதியவை என்பது குறிப்பிடத்தக்கது.

பூச்சிகளுக்கு வேப்பம் புண்ணாக்கு, வேப்பம் எண்ணெய், பீஞ்சுருவி இலை எல்லாம் போட்டு இடிச்சி ஊறவைச்சு தெளிக்கிறேன். பூச்சி கட்டுப்படுகிறது.

விதைகளைப் பொறுத்தவரைக்கும் உயர் விளைச்சல் தரும் சில விதைகளைத் தவிர வேறந்த வெளியிடு பொருள்களையும் நான் வாங்குவதில்லை. என்னைக் கேட்டால் விவசாயிகள், விஞ்ஞானிகளிடமும் ஆராய்ச்சியாளர்களிடமும் முனைவர்களிடமும் கொஞ்சம் எச்சரிக் கையாக இருக்க வேண்டும் என்றுதான் சொல்வேன். அவங்க ஆராய்ச்சியில் நல்லதும் வரலாம், கெட்டதும் வரலாம். சில வருடங்களுக்கு முன்னால் “ராஜ ராஜ”ன்னு ஒரு நெல் ரகத்தை ஆராய்ச்சியாளர்கள் அறிமுகம் செய்தார்கள். அதனைப் பயிரிட்ட எங்கள் கிராமம் மொத்தமும் நஷ்டமடைந்தது.

மரங்களுக்கு இடையே காய்கறிச் செடிகளைப் பயிரிட்டிருக்கிறேன். இதிலிருந்து வீட்டுக்குத் தேவையான காய்கறிகள் கிடைக்கின்றன. அன் றாட பால் தேவைக்கு வீட்டிலுள்ள மாடு கறக்கிறது. திடீரென்று பணம் தேவைப்பட்டால், நாலைந்து ஆட் டை பிடித்து விற்றுவிடுவேன். என் னிடமுள்ள ஆடுகளையெல்லாம் நடமாடும் வங்கி என்றுதான் நான் சொல்வது.

நான் பத்தாம் வகுப்பு வரை மட்டும்தான் படித்திருக்கிறேன். ஆனால், இப்போது என்னால் ஆங்கிலத்தில் வாசிக்க முடியும். அறிவியல் மற்றும் விவசாயம் சம்பந்தப்பட்ட புத்தகங்கள் படிப்பது எனக்குப் பிடிக்கும். இப்பொழும் தொடர்ந்து வாசிக்கிறேன்.

உலகில் பெருகிவரும் மக்கள் தொகை காரணமாக தேவைகளும் பெருகிவிட்டன. இதற்காக எந்த வரைமுறையும் இல்லாமல் இயற்கை ஆதாரங்கள் அழிக்கப்படுகின்றன. இப்படியேத் தொடர்ந்தால் வரும் நமது சந்ததிகளுக்கு நாம் எதை விட்டுவிட்டுப் போகப் போகிறோம் என்னும் கேள்வி எழுகிறது. நமது சந்ததியினர், “ஏன் சுவாசிக்கும் காற்று நஞ்சாக இருக்கிறது, ஏன் குடிக்கத் தண்ணீர் இல்லை, ஏன் மழை இல்லை” என்று நிச்சயம் கேட்பார்கள். இதற்குப் பதில் சொல்ல வேண்டிய பொறுப்பு நமக்கு இருக்கிறது. இப்போதே நாம் சுவாசிக்கும் காற்று, உண்ணும் உணவு, குடிக்கும் தண்ணீர் உட்பட அனைத்தும் மாசுபட்டுள்ளன. மாசுபட்டுவரும் சுற்றுச்சூழலைப் பாதுகாக்க மரங்கள் வளர்ப்பதுதான் இன்றைக்கு நம் முன்னுள்ள ஒரே வழி.

செஞ்சந்தன மரத்துக்கு அணு உலை கதிர் வீச்சைத் தடுக்கும் சக்தி இருக்கிறது. எனவே, ஜப்பானில் செஞ்சந்தனத்துக்கு தனி மவுசு. ஒரு டன் மூன்று லட்சம் ரூபாய் மதிப்புக்குப் போகிறது. எந்த வறட்சியையும் தாங்கி வளரக்கூடியது செஞ்சந்தனம். எனவே எல்லோரும் செஞ்சந்தனம் வளர்க்கலாம். முக்கியமாக கதிர் வீச்சு பாதிப்பு உள்ள பகுதிகளில் செஞ்சந்தனம் வளர்ப்பது மிக நல்லது.”

விடைபெறும் போது தங்கசாமி சொன்னார். “நான் எதுவும் புதியதாக செய்யவில்லை. நமது முன்னோர்களின் வழிமுறைக்கு, நமது பாரியம்பரியத்தை நோக்கித் திரும்பியிருக்கிறேன், அவ்வளவுதான். நாடெங்கும் மரம் வளர்ப்போம். சுற்றுச் சூழலை அழகுபடுத்துவோம். அதை விடாது பாதுகாப்போம்.”

Wednesday, May 4, 2011

சோற்றுக் கற்றாழை




இது ஒரு அதிசயத் தாவரம் கிராமங்களின் மருந்தகம். இது மனிதரை என்றும் இளமையாக வைப்பதால் குமரி எனப்படுகிறது .சிறந்த அழகு தரும் மூலிகை .


சோற்றுக் கற்றாழையில் உடலுக்குத் தேவையான வைட்டமின்கள், தாதுக்கள், அமினோ அமிலங்கள் அனைத்தும் உள்ளன. இதை ஒரு சர்வரோக நிவாரணி என்றுகூட அழைக்கலாம். உடலுக்குத் தேவையான நோய் எதிர்க்கும் ஆற்றலை கற்றாழை வழங்குகிறது


வேறு பெயர்கள்- சோற்றுக் கற்றாழை, கன்னி, தாழை. குமரி


தாவரப்பெயர்- AloebarbadensisLinn,Liliaceae,Aloevera,Aloeferox,Aloeafricana,Aloe, spicata, Aloe perji.



சதைப்பற்றுடன் கூடிய தடிப்பான அடுக்கு மடல் கொண்ட செடி வகை. கற்றாழை மடல்கள் இருபுறமும் முள்போல் சொரசொரப்பான ஓரங்களைக் கொண்டிருக்கும், பக்கக் கன்றால் உற்பத்தியைப் பெருக்கும்.


இலை மற்றும் வேர், இலையில் உள்ள சதைப்பற்றான ஜெல். ஒடித்தால் வரும் மஞ்சள் நிற திரவம் வரும்.


தோல் நீக்கிய சோற்றை ஏழு முறை கழுவி கசப்பு நீக்கி குழம்பாகச் சமைத்துண்டால் தாதுவெப்பு அகன்று தாகந்தணியும், ஏழு முறை கழுவுவது. அதை சுத்தி செய்யும் முறையாக சித்தர்களால் கூறப்படுகிறது .


சிறந்த மலச்சிக்கல் போக்கி.


ஒரு வகை இனிப்புக் கூழ் மூலநோயிக்கு மருந்தாகும்.


கடும் வயிற்றுப்புண்ணுக்கு இலையின்சாறு பயன் படுகிறது.


இதன் ஜெல் தோலின் மேல் தடவினால் வெப்பத்தின் தன்மையை போக்கும்.
முக அழகு சாதனமாகப்பயன் படுகிறது.


அழகு சாதன பொருள்களின் அத்தியாவசிய மூலப் பொருளாக விளங்குகிறது.
சித்த மருந்துவர்களால் ‘குமரி’ என்றழைக்கப்படும் இத்தாவரத்தின் தாயகம் தென்னாப்பிரிக்கா மற்றும் அரேபிய நாடுகளாகும்.


எப்பொழுதும் வாடாத வகையைச் சார்ந்த இத்தாவரம் வெப்பமான பகுதிகளில் வயல் வரப்புகளிலும் உயரமான பகுதிகளில் வேலிகளிலும் வளரக்வடியது. பல பருவங்கள் வாழக்கூடியது. சதைப்பற்றுள்ள நீச்சத்து மிக்க குறுச்செடி. இலைகள் அடுக்கடுக்காக ரோஜா இதழ்கள் போன்று அமைந்திருக்கும்.


கற்றாழையில் சோற்றுக் கற்றாழை சிறு கற்றாழை பெரும் கற்றாழை பேய்க் கற்றாழை கருங் கற்றாழை செங்கற்றாழை இரயில் கற்றாழை எனப் பல வகை உண்டு. இதில் சோற்றுக் கற்றாழை மருத்துவ குணங்களுக்கென்று பயன்படுத்தப்பட்டு வருகிறது. இலைச்சாறுகளில் ஆந்த்ரோகுயினோன்கள்இ ரெசின்கள் பாலிசக்கரைடு மற்றும் ‘ஆலோக்டின்பி’ எனும் பல வேதிப்பொருட்கள் உள்ளன. கற்றாழையிலிருந்து வடிக்கப்படும் மஞ்சள் நிற திரவம் ‘மூசாம்பரம்’ எனப்படுகிறது.


தளிர்பச்சை இளம்பச்சை கரும்பச்சை எனப் பலவிதமாக உள்ள சோற்றுக்கற்றாழை முதிர்நதவற்றில்தான் மருத்துவத்தன்மை மிகுந்து காணப்படுகின்றன.


இன்றைய அனைத்து அழகுசாதனப் பொருட்களின் தயாரிப்பிலும் தவறாது இடம் பெறுவது கற்றாழைதான். இதன் சாறு சருமத்தின் ஈரப்பதத்தை சமன் செய்வதுடன்இ சர்ம நோய்களையும் குணப்படுத்துகிறது.


முகத்திலுள்ள கரும்புள்ளிகள் தழும்புகள் வெயில் பாதிப்புகள் உலர்ந்த சருமம் என சரும நோய் எதுவாக இருந்தாலும் சிறிது கற்றாழைச் சாறை தினமும் தடவி வர நல்ல குணம் கிடைக்கும்.


ஆண்கள் சவரம் செய்யும் பொழுது ஏற்படும் கீறல்கள் காயங்களுக்கும் உடனடி நிவாரணம் பெற கற்றாழைச் சாறை பயன்படுத்தலாம். தீக்காயங்களுக்கும் ‘உடனடி டாக்டர்’ கற்றாழைச் சாறுதான்.


இதன் சாறை இரவு வேளையில் முகத்தில் தேய்த்து காலையில் வெந்நீரால் கழுவ முகத்தில் உள்ள கருமை நீங்கி முகம் பொலிவு பெறும்.


கேசப் பராமரிப்பில் தலைக்கு கறுப்பிடவும் கேசத்தின் வளர்ச்சியைத் தூண்டவும் பயன்படுகிறது. தலையில் ஏற்படும் கேசப் பிரச்னைகள் மற்றும் பொடுகை நீக்குகிறது. தோல் இறுக்கத்திற்கு சுகமளிக்கும் மருந்தாகிறது. கற்றாழை சோறை தேங்காய் எண்ணெயுடன் காய்ச்சி தலைக்குத் தேய்த்து வர கேசம் நன்கு செழித்து வளரும். எண்ணெய் குளியல் செய்ய கண் குளிர்ச்சி மற்றும் சுக நித்திரை உண்டாகும்.


நமது தோலில் நீரை விட நான்கு மடங்கு வேகமாக கற்றாழைச் சாறு ஊடுருவக் கூடியது. வைட்டமின் சி மற்றும் பி சத்துகளும் தாதுக்களும் நிறைந்தது இச்சாறு. சருமத்திலுள்ள கொலாஜன் எனப்படும் கொழுப்பு சத்தை குறைக்கக்கூடிய புரோட்டீன் கற்றாழையில் அதிகம் காணப்படுவதால் முகத்திலுள்ள சுருக்கம் வயோதிக தோற்றத்தை குணப்படுத்துகிறது. மேலும் இந்த எண்ணெய் பெண்களின் மாதாந்திர ருதுவை ஒழுங்குபடுத்தும். கர்ப்பவதிகளுக்கு கருச்சிதைவை உண்டாக்கும்.


உள் மருந்தாக வயிற்றுப் புண் மற்றும் வயிறு சம்பந்தமான நோய்களைக் குணப்படுத்தும்.
சோற்றுக் கற்றாழை சோறை எடுத்து எண்ணெயிலிட்டுக் காய்ச்சித் தலைமுழுகி வர மயிர் வளர்வதுடன் நல்ல தூக்கமும் உண்டாகும்.


வைட்டமின் சத்துகள் குறைவதால் மூட்டுகளுக்கு இடையே உள்ள கூழ் போன்ற திரவம் குறைகிறது.இதனால் மூட்டுவலி ஏற்படுகிறது. இவற்றை சரியான நேரத்தில் சரி செய்யாவிட்டால் மூட்டு வலி என்பது குணப்படுத்த முடியாத ஒரு நோயாக மாறி விடக்கூடும்.


மூட்டு வலியிலிருந்து நிவாரணம் பெற "அலோசன் ஹெல்த் டிரிங்க்' உதவும். இதில் உள்ள ஊட்டச் சத்துகள் நிறைந்த தண்ணீர் உடலில் குறைவாக உள்ள நீர்ச் சத்தை அதிகப்படுத்தி மூட்டுகள் சரியாக இயங்குவதற்குத் தேவையான கூழ் போன்ற திரவத்தை உற்பத்தி செய்ய உதவுகிறது.


மனித உடலில் மடிந்து போன செல்களை மீண்டும் உயிர்ப்பித்து எல்லா வகையான மூட்டு வலிகளுக்கும் இந்த பானம் நிவாரணம் அளிக்கிறது.

சுகம் தரும் சோற்றுக் கற்றாழை வீட்டிலேயே இருக்கவேண்டிய ஒரு அழகிய மூலிகை .அழகுதரும் மூலிகை .

நவீன முறையில் நாட்டுக்கோழி வளர்ப்பு

உலாவு தளத்துடன் கூடிய கூண்டுமுறை:
இந்த நவீன நாட்டுக்கோழி வளர்ப்பு முறை, குஞ்சு பொரித்த காலத்திலிருந்து அவைகளின் தினசரி வளர்ச்சி, அப்போது அவைகளின் உயிர் பாதுகாப்பு என்பனவற்றிற்கும், தட்பவெப்ப கால மாறுபாட்டால் உண்டாகும் வைரஸ் நோய்களினின்றும், வருமுன் காப்பு என்ற கவசத்தின்கீழ் கொண்டுவரப்பட்டு எல்லாவித நோய் களிலிருந்தும் செல், பேன் மற்றும் வயிற்றுப்பூச்சி முதலிய ஒட்டுண்ணிகளிலிருந்தும் காப்பாற்றி தொழிலில் தோல்வியில்லாத நிலையைக் கொண்டு வந்துள்ளது.

உலாவு தளத்தின் உட்புறத்தளம், காரைகள், மண் போன்றவைகளால் நிரப்பப்பட்டு கெட்டிக்கப்பட்டு பசுஞ்சாணியால் மெழுகிவிடப்படும். மழை காலங்களில் தரை, நனையாத முறையில் பாலிதீன் அல்லது உரச்சாக்கு மேல் கூரையாக தற்காலிகமாக மறைக்கப்படும். உலாவு தளத்தின் நாட்புறமும் அதனுடன் இணைக்கப்பட்டிருக்கும் கோழிக் கூண்டுகள் அருகில் வேப்ப மரங்கள் வளர்க்கப்பட்டால் நோய்கள், காற்று, வெயில் என்பனவற்றினின் றும் கோழிகளுக்கு நல்ல பாதுகாப்பு கிடைக் கும். பாம்புகள் வராமல் தடுக்க, நாகதாளிச் செடியையும் வசம்புச் செடியையும் ஓரமாகப் பாத்தியமைத்து வளர்த்தால் மேலும் நல்ல பயனைத் தரும்.

கோழிகள் சில வேளைகளில் கீரைகள், பசும்புல் என்பனவற்றையும் உணவாக உட்கொள்ளும். அத்தேவையைப் பூர்த்தி செய்ய மண் சட்டிகளில் உரத்தோடு கலந்த மண்ணை நிரப்பிக் கீரைகளை வளர்த்து, வளர்ந்த பின் சட்டியுடன் உலாவு தளத்தின் உட்புறம் நான்கு பக்கமும் வைக்க, அவை ஒரு இயற்கை சூழலை உருவாக்கி, கோழிகளின் இனவிருத் தித்திறனை அதிகப்படுத்தும். கோழிகளும் சில வேகைளில் மாமிச பட்சணியே. மேற்படி தேவையைப் பூர்த்திசெய்ய சிறு பெட்டிகளில் ஓடு தளத்தில் தினசரி கூட்டி சுத்தம் செய்யும் கோழிக்கழிவுகள், இறைக்கப் பட்ட தீவன தானியங்களின் கழிவுகள் ஆகியவற்றை நல்ல மண்ணுடன் கலந்து நிழலில் ஈரப் பதத்துடன் இருக்கும்படி செய்து நான்கைந்து மண்புழுக்களை விடலாம். அவை அக்கழிவுகளை நல்ல உரமாக்குவதுடன் பல்கிப்பெருகி கோழிகளுக்கு ஏற்ற மாமிசத் தீவனமாகவும் மாறும். மேலும் பெட்டிகளிலிருந்து சேகரிக்கப்படும் மண்புழு உரம் அரை கிலோ 10 முதல் 15 ரூபாய் வீதம் விற்கப்பட்டு மேல் வருமானத்தைப் பெருக்கும்.

உலாவு தளத்தின் உட்புற, வெளிப்புற வலைகளில் அமைக்கப்படும் இன்னும் ஒரு முக்கிய பெட்டி உள்ளது. அது முட்டையிடும் பெட்டி அல்லது கூண்டு என்பது நான்கு பக்கமும், கோழிச்சல்லடையால் சுற்றி வளைத்து அடிக்கப்படுகிறது. இது தரையிலிருந்து இரண் டரை, மூன்றரை அடி உயரத்தில் கீழிருந்து கீரிப் பிள்ளை, நரி, நாய் மட்டுமின்றி பாம்பு போன்ற விஷ ஜந்துக்களாலும் தாக்கப்படா வண்ணம் காத்துக் கொள்கிறது. சவுக்குச் சட்டங் கள் பொருத்தப்பட்டு இரவில் பனி, மழை, காற்று இவைகளால் பாதிக்கப்படாமல் நல்ல உறுதியான மேல் கூரை அமைக்கப்பட்டு அமைதியுடன் கோழிகள் ஓய்வுபெற வசதியளிக்கிறது.

மேற்கண்ட முறையில் ரன் எனப்படும் உலாவுதளம் ஒரு கோழிக்கு 3 க.அடி என்ற முறைப்படி இடம் ஒதுக்கப்பட்டு நல்ல உறுதியான சவுக்கு கம்புகள் நடப்பட்டு, பூமியிலிருந்து சுமார் ஒன்றரை அடி உயர 4 பக்கம் அகலமான சுற்றுச்சுவர் எழுப்பப்பட்டு, அதன் மேல் சட்டங்கள் பொருத் தப்பட்டு, நான்கு பக்கமும் கோழிச்சல்லடையால் தரையிலிருந்து சுமார் ஆறரை முதல் ஏழு அடி உயரமும், அளவுக்கு அரை அங்குல கோழிச்சல்லடையால் சுவர் போன்ற அமைப்பும், அவைகளுக்கு மேல் கோழிகள் பறந்துவிடாமல் தடுக்க மேற்பகுதியும் சல்லடையால் வேயப்படுகிறது. கோழி வளர்ப்போர் உள்ளே சென்றுவரக் கதவும் அமைக்கப்படுகிறது.

தூசிக்குளியல்: மேற்படி அமைப்பினுள் கோழிகளின் தீவனப் பாத்திரம், குடிநீர் பாத்திரம் என்பன வெயில் தாக்காத வண்ணம் சிறுசிறு ஓலைக் கூரைகளுடன் அமைக்கப்படுகின்றன. கோழிகளுக்கு டஸ்ட் பாத் செய்யக்கூடிய குறுமணல், சாம்பல், பூச்சிக்கொல்லி பவுடர் கொண்ட கலவையுடன் அகன்ற வாய் கொண்ட குழியமைப்பும் அமைக்கப்படுகிறது. இது கோழியின் மேல் உள்ள ஒட்டுண்ணிகளை அகற்ற பெரிதும் உதவுகிறது.

தீவன பாத்திரம்: தீவன பாத்திரம் எப்போதும் கோழிகள் விரும்பி உண்ணும் தானியங்களான கம்பு, கேழ்வரகு, சாணம், சோளம், வெ.சோளம், தவிடு, பிண்ணாக்கு போன்ற உணவுகளால் நிரப்பப்பட வேண்டும்.

குடிநீர் பாத்திரம்: குடிநீர் பாத்திரம் கோழிகள் குடிக்கும் தண்ணீர் அசுத்தமடையா முறையிலும் அதே நேரத்தில் குடிநீர் குறைவில்லாமல் கிடைக்கவும் வகை செய்யும் முறையில் அமைக்கப்பட வேண்டும். மேற்படி பாத்திர அமைப்பு முறை குடிக்க குடிக்க குறையா வண்ணம் தண்ணீர் வர வசதியுடையதாக இருக்க வேண்டும்.

முட்டையிடும் பெட்டி: 10 கோழிகள் கொண்ட பண்ணைக்கு ஒரு அடி அகலமும், ஒண்ணேகால் அடி நீளம், ஒன்றரை அடி ஆழம் கொண்ட அரை அங்குலப் பலகைகளான 6 முதல் 7 பெட்டிகள் நடுவில் பிரிக்கும் வசதியுடன் அமைக்கப்பட வேண்டும். பூட்டு போட்டு பூட் டக் கூடியவையும், பாதுகாப்பான முறையிலும் வெளியிலிருந்து திறந்து முட்டைகளை சேகரிக்கக்கூடிய முறையில் அமைய வேண் டும். உலாவு தளத்தின் சுவரின் மேல் உறுதியாக நிற்கவும் வளைச்சுவர் மற்றும் சட்டங்களுடன் இடைவெளி விடாமலும் அமைக்கப்பட வேண்டும். நாள்தோறும் இடப்படும் முட்டைகள் சேகரிக்கப்பட்டு பாதுகாக்கப்படவும் வேண்டும்.

முட்டைகள் பாதுகாப்பு: ஒரு புது மண்பானையில் பாதிக்குமேல் வரை குறுமணலால் நிரப்பப் பட்டு அதன்மேல் முட்டைகள் வைக் கப்பட வேண்டும். பானை அகல வாய் கொண் டதாகவும் அதன் வாயை அரை வளை மூடி போடப்பட வேண்டும். காற்றோட்டமும், ஈரப் பதமும் உள்ள இருண்ட இடத்தில் மேற்படி முட்டைகள் அடை வைக்கப்பட்டு நல்லவிதமாக குஞ்சுகள் பொறிக்கப்பட வேண்டும்.

கோழிகள் தேர்வு: நல்ல ஆரோக்கியமானகோழிகள் மற்றும் சேவல்கள் மிடுக் காகவும் தன்னைச் சுற்றி நடக்கும் காரியங்களில் கவனமுள்ளவையாகவும் இருக்கும். வேகமான நடை, வேகமான ஓட் டம், தேவைக் கேற்ப சில மீட்டர்கள் தூரம் பறத்தல், சில நேரங்களில் கொக்கரித்தல், கூவுதலுமாக இருக்க வேண்டும். பொதுவாக சேவல்கள் இனச்சேர்க்கையில் பிரியமுள்ளவைகளாக இருக்கும். நல்ல அகலமான நெஞ்சும், நீண்ட உடலமைப்பும் நல்ல சேவலுக்கு உதாரணமாகும். கோழியின் சுகத்தை கொண்டையில் பார் என்பார்கள். நல்ல சிவந்த பளிச்சென்ற கொண்டை நல்ல சுக தேகத்தைக் குறிக்கும். கால்கள் மஞ்சள் கலந்த பழுப்பு நிறத்துடனும் இருக்க வேண்டும். நம் நாட்டு சூழலுக்கேற்ப வளரக்கூடிய ப்ரம்மா ரகக் கோழிகளைத் தேர்ந்தெடுப்பது நல்லது.

இயற்கை முறை அடைவைப்பு: இயற்கை முறை அடை வைப்புக்கு லேசான பாரமுள்ள, அகன்ற நெஞ்சும், இறகுகள் அடர்ந்தும், அடையில் படுத்தபடி இருக்கும் நாட்டு பெட்டை கோழிகள் ஏற்றவை. சிறகுகள் அடர்ந்தும் அகலமாகவும் இருப்பது முட்டைகளை சுழற்றவும், நல்ல அரவணைப்புக்கும் உகந்தவை.

செம்மறி ஆடு வளர்ப்பு

ராமநாதபுரம் வெள்ளை, கீழக்கரிசல், நீலகிரி, திருச்சி கருங்குரும்பை, மேச்சேரி, மெரினோ.

உள்ளூர் இனங்கள் - இது வெவ்வேறு இடத்தைப் பொறுத்து மாறும்

· மெரினோ - கம்பளிக்கு உகந்தது
· ராம்பெளலட் - கம்பளி மற்றும் கறிக்கு ஏற்றது.
· சோவியோட் - கறிக்கு ஏற்றது
· செளத் டான் - கறிக்கு ஏற்றதுநல்ல தரமான இன வகைகள், ஆட்டுத் தொழுவம் அமைப்பது, வளமான செம்மறி ஆடுகள் உற்பத்தி போன்றவற்றைப் பற்றி ஏதேனும் விபரம் தேவைப்பட்டால் அருகில் உள்ள கால்நடை பராமரிப்பு மையத்தையோ அல்லது வேளாண் அலுவலகத்தையோ அணுகவும்.

நிலம் அதிகமாக இருக்குமெனில், செம்மறி ஆடுகளை மேயவிட்டும், வீட்டில் தொழுவத்தில் பராமரித்தும் வளர்க்கலாம். வறட்சியான மற்றும் மானாவாரி நிலம் சார்ந்த பண்ணையத்தில், செம்மறி ஆடு வளர்ப்பு ஒரு முக்கிய அங்கமாக உள்ளது. சிறு மற்றும் குறுநில விவசாயிகள், நிலமற்ற வேளாண் தொழிலாளிகள், குறைந்த முதலீடு செய்து நிறைய லாபம் பெறலாம்.

நன்மைகள்:
· அனைத்து சூழலுக்கும் ஏற்றதாகும். அதிகப்படியான பராமரிப்பு அவசியம் இல்லை.
· கறியின் விலை நாளுக்கு நாள் அதிகரிக்கிறது
· உரோமம் கம்பளி தயாரிக்கவும் மற்றும் கறி இறைச்சிக்காகவும் பயன்படுகிறது.
· சராசரியாக ஒவ்வொரு முறையும் 1-2 குட்டிகள் ஈனுகிறது.
·ஒரு ஆட்டிலிருந்து சராசரியாக 22-30 கிலோ கறி கிடைக்கிறது.
· எருவை சேர்த்து நிலத்தை வளமாக்குகிறது.

வெள்ளாடு வளர்ப்பு

உள்ளூர் இனங்களையே வாங்கவேண்டும். காலம்காலமாக அந்த பகுதியில் வளர்ந்து, சூழ்நிலைக்கு ஏற்ப வாழப்பழகி இருக்கும் உள்ளூர் ரகங்களை வாங்கி வளர்ப்பதே சிறந்தது.

பலமுறை குட்டிபோட்டவயதான ஆடுகளை வாங்கவேண்டாம். மாடுகளைப் போல ஆடுகளையும் பல்பார்த்து வாங்க வேண்டும். அதாவது கீழ்தாடை முன்பற்கள் விழுந்து முளைப்பதாகும். ஓராண்டு வரை 8 பால்பற்கள் இருக்கும். பின் இரண்டாண்டு பற்களாக விழுந்துமுளைக்கும். ஓராண்டு முடிந்தபின் இரு பற்கள் விழுந்து முளைக்கும். தோராயமாக எளிதாக நினைவில் வைத்துக்கொள்ள கீழ்க்கண்டபடி பல் பார்த்து வயது கணக்கிட்டு வாங்க வேண்டும். ஆடுகளுக்கு 2 பல் இருந்தால் 1 வயது. 4 பல் இருப்பின் 2 வயது. 6 பல் என்றால் 3 வயது. 8 பல் என்றால் 4 வயது என்று கொள்ளலாம். எனவே இளம் ஆடுகளையே வாங்க வேண்டும்.

ஓரிரு ஆடுகளை வாங்குபவர்கள் 3, 4 குட்டி போடும் ஆடுகளை அறிந்து வாங்க வேண்டும். முதுகு பிடித்து பார்த்து ஆட்டின் முதுகெலும்பின் தசை செழிப்பாக வளர்ச்சியடைந்திருக்கிறதா என்று பார்த்து வாங்க வேண்டும். பாலுக்கென்று ஆடு வாங்குவதானால் கால் சற்று குட்டையாகவும், மடி திரட்சியாகவும் இருக்க வேண்டும். நோயற்ற ஆடுகளைப் பார்த்து வாங்க வேண்டும். பட்டிகளில், பண்ணைகளிலிருந்து வாங்குவது சிறந்தது.

மாடு வளர்ப்பு

கறவை மாடுகள் மற்றும் கன்றுகளை தேர்வு செய்வதென்பது ஒரு கலையாகும். கறவை மாடுகளை தேர்வு செய்ய கீழ்க்கண்ட குறிப்புகள் பயனுள்ளதாக இருக்கும்.

மாட்டு சந்தைகளில் மாடுகளை தேர்வு செய்யும் பொழுது அவற்றின் இன குணாதிசயங்களையும், பால் உற்பத்தி திறனையும் கவனிக்க வேண்டும்.

மாடுகளின் வரலாற்றை பிரதிபளிக்கக் கூடிய பராம்பரிய பதிவேட்டை காணவும்.

கறவை மாடுகள், அவை ஈனக்கூடிய முதல் 5 பருவத்திலேயே அதிகப்பால் கொடுக்கிறது. எனவே கறவை மாடுகளை முதல் அல்லது இரண்டாவது முறை ஈனும் பொழுது, ஈன்ற 1 மாதம் கழித்து தேர்வு செய்யவும்.

தொடர்சியாக கறந்து, அவற்றின் சராசரியை கொண்டு மாட்டின் பால் உற்பத்தியை கணக்கிடலாம்.

யார் வேண்டுமானலும் கறப்பதற்கு ஏற்றாக இருக்க வேண்டும்.

அக்டோபர் - நவம்பர் மாதத்தில் மாடுகளை வாங்குவது நல்லது.

ஈன்ற 90 நாட்களில் அதிகபட்ச பால் உற்பத்தி கிடைக்கிறது.

சொட்டு நீர் பாசன முறை

நீர் வளம் குறைந்து போனதால், பாரம் பரிய விவசாயத்தில் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. கிடைக்கும் குறைவான நீரை, சிக்கனமாக பயன் படுத்த வேண்டும் என்பதற்காக சொட்டு நீர் பாசனம் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் மூலம், அதுவரை வாய்க்கால்கள் மூலம் பயிர்களுக்கு நீர் பாய்ச்சும் முறை மாற்றப்பட்டு, குழாய்கள் மூலம் நீர் சொட்டு, சொட்டாக பயிர்களுக்கு தேவையான நீரை, அதன் வேர்ப்பகுதிக்கே பாய்ச்சப்படுகிறது ஒரு ஏக்கரில் வாய்க்கால் அமைத்து நீர் பாய்ச்சல் முறையில் 60 சதவீத பரப்பில் மட்டும் பயிர் செய்ய முடியும். சொட்டுநீர் பாசன முறையில் 100 சதவீத பரப்பளவில் பயிர் செய்யலாம், அதிக லாபம் பெறும் வாய்ப்பை சொட்டு நீர் பாசனம் ஏற்படுத்தி கொடுக்கிறது.

நன்மைகள்:
களைச் செடிகள் நீரின்றி வளர இயலாது.
மகசூலை அதிகப்படுத்தும்
சாதாரண பாசனத்தை ஒப்பிடுகையில், 70% நீரை இப்பாசனத்தின் மூலம் சேமிக்கலாம். அவ்வாறு சேமித்த நீரைக் கொண்டு இன்னும் அதிகமான நிலங்களுக்கு பாசனம் அளிக்கலாம்.
பயிர் திடமாகவும் ஆரோக்கியமாகவும் வளர்வதோடு, வேகமாக முதிர்ச்சி அடையும்
விரைவாக முதிர்ச்சி அடைவதால் குறைந்த காலத்தில் முதலீட்டுக்கான வரவு கிடைத்து விடும்
உரம் பயன்பாட்டு திறனில் 30% அதிகம்
உரம், ஊடுபணி மற்றும் ஆட்களுக்காக ஆகும் செலவும் குறைக்கப்படும்
நீரில் கரையும் உரத்தை குழாய்கள் மூலமே கொடுக்கலாம்.
ஏற்ற இறக்கம் உடைய நிலங்கள், உப்பு நிலம், நீர்தேங்கும் நிலம் மணற்பாங்கான மற்றும் மலை பகுதிகள் அனைத்தையும் இப் பாசனத்தின் கீழ் கொண்டுவந்து சாகுபடி செய்யலாம்


குறைபாடுகள்:
இதனை அமைக்க ஆகும் செலவு அதிகம்
சொட்டு நீர் குழாய் அடைப்பு.
சாகுபடி நிலம் அதிகமாக வெப்பம் அடைகிறது

தெளிப்பு நீர் பாசன முறை

வாய்க்கால் நீர் பாசன முறையில் செய்யப்படும் விவசாயத்தில் செலவாகும் நீரில் மூன்றில் ஒரு பங்கு இருந்தாலே இந்த முறைக்கு போதுமானது. இதனால் குறைவான தண்ணீரில் அதிக பரப்பில் பயிர் செய்யலாம். கிணற்றில் இருந்து குழாய் மூலம் கொண்டு வரப்படும் தண்ணீரை இந்த முறையில் "ரெயின் கன்' மூலம் 120 அடி விட்டத்திற்கு மழைத்துளி போன்று பயிர்களின் மேல் நீர் தெளிக்கலாம். வால்வுகளை கட்டுப்படுத்துவதன் மூலம் தேவையான பகுதிக்கு மட்டும் நீர் தெளிக்கலாம். இதன் மூலம் உரம், பூச்சி மருந்து ஆகியவற்றையும் பயிர்களுக்கு எளிதாக தெளிக்கலாம். தெளிப்பு முறை கருவி குறைந்தது 5,000 ரூபாயிலிருந்து 15,000 ரூபாய் வரை விலையில் உள்ளது. இதனால் ஆள் பிரச்னையும் குறையும், தண்ணீரும் மீதமாகும். தண்ணீர் தட்டுப்பாட்டை சமாளிக்கலாம்.

நன்மைகள்:
தெளிப்பு நீர் பாசனத்தால் தண்ணீர் தட்டுப்பாட்டை சமாளிக்கலாம்.
நீர் சேமிப்பால் அதிக அளவு பயிர் செய்யலாம்.
வரப்பு பாத்தி அமைக்க வேண்டாம் ஆள் பிரச்னையும் குறையும்.
நீரில் கரையும் உரத்தை குழாய்கள் மூலமே கொடுக்கலாம்.
மலைப்பகுதி மற்றும் மேடுபள்ளங்கள் நிறைந்த பகுதிகளுக்கம் ஏற்றது
பூக்கள் எளிதில் கொட்டாத பயிர்களுக்கும் ஏற்றது.
சாதாரண பாசன முறையை விட 30-40 சதவீதம் நீர் குறைவு.

குறைபாடுகள்:
இதனை அமைக்க ஆகும் செலவு அதிகம்
விவசாயிகளிடம் நிலப்பரப்பு குறைவு.
காற்றின் வேகம் அதிகமாக இருக்கும் போது பயன்படுத்த முடியாது.