Tuesday, September 8, 2009

கிழக்கு வட்டார விவசாயிகள் கவனத்துக்கு: தோட்டக்கலை பயிர் சாகுபடி செய்ய விவசாயிக்கு மானியத்தில் திட்டங்கள்

மதுரை கிழக்கு வட்டாரத்தில் தோட்டக் கலை தோட்டக் கலைப் பயிர்கள் சாகுபடி செய்ய பல்வேறு மானியத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும், இத்திட்டத்தில் சேர்ந்து விவசாயிகள் பயனடையவேண்டும் எனவும் தோட்டக் கலை (மதுரை கிழக்கு) உதவி இயக்குநர் த. காமராஜ் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதுகுறித்து அவர் விடுத்துள்ள செய்திக் குறிப்பு:
தேசிய தோட்டக் கலை இயக்கத் திட்டத்தின் மூலம் மா, நெல்லி, வாழை ஆகிய பயிர்களில் புதிய தோப்புகள் அமைக்க மானியத் திட்டம் பெறப்பட்டுள்ளது. திட்டத்தில் உயர்ரக ஒட்டுக் கன்றுகளும், திசுவாழைக் கன்றுகளும் வழங்கப்பட உள்ளன.

மா, நெல்லி சாகுபடிக்கு 75 சதம் மானியமாக 1 ஹெக்டருக்கு ரூ. 11,250 மதிப்புள்ள ஒட்டுச் செடிகள், உரங்கள், மருந்துகள் அனைத்தும் மானியமாக வழங்கப்படும்.

வாழை சாகுபடி செய்துள்ள விவசாயிகள் 50 சதம் மானியத்தில் ஹெக்டேருக்கு ரூ. 7,500 மதிப்புள்ள இடுபொருள்களை மானியமாகப் பெற்றுக்கொள்ளலாம்.
மல்லிகை சாகுபடிக்கு சிறு, குறு விவசாயிக்கு 50 சதம் மானியத்தில் ஹெக்டேருக்கு ரூ. 12,000 மதிப்புள்ள மல்லிகை நாற்று மற்றும் இடுபொருள்களும் இதர விவசாயிகளுக்கு 33 சதம் மானியத்தில் ஹெக்டேருக்கு ரூ. 7,920 மதிப்புள்ள நாற்று மற்றும் இடுபொருள்களும் மானியத்தில் வழங்கப்பட உள்ளன.

மானியத் திட்டங்களில் பயன்பெற விவசாயிகள் தங்களது நில உடமை ஆவணங்களுடன் 2 புகைப்படங்களை மதுரை கிழக்கு வட்டாரத் தோட்டக்கலை அலுவலகத்தைத் தொடர்பு கொண்டு பதிவு செய்ய வேண்டும்.

பழமர சாகுபடி செய்யும் விவசாயிகள் தொடர்ந்து 2 ஆண்டு பராமரிப்புக்கு இடுபொருள்கள் மானியமாக பெறும் வாய்ப்புள்ளது.

மேலும் திட்டங்கள் குறித்து அறிய உதவி இயக்குநர் செல்போன் 98652-80167 எண்ணில் தொடர்புகொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளார்.

0 comments: