விவசாய வேலைகளற்ற காலங்களில் ஊரக மக்கள் இடம் பெயர்தலை தடுத்து அவர்களுக்கு வருடத்திற்கு 100 நாட்களுக்கு, அதிக நுணுக்கமில்லாத திறமை தேவைப்படாத வேலைவாய்ப்பு அளிக்க இத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் குறைந்த பட்ச கூலியில் நீர் சேமிப்பு, நில மேம்பாடு, வறட்சியை எதிர்கொள்வற்கான முயற்சிகள் போன்ற திட்டங்களில் வேலை வாய்ப்பு அளிக்கப்படும்.
இத்திட்டத்தை பிரதமர் டாக்டர். மன்மோகன்சிங் பிப்ரவரி 2, 2006 ஆம் ஆண்டு துவங்கி வைத்தார்.
தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்திரவாதத் திட்டத்தின் முக்கிய அம்சங்கள்
· வறுமைகோட்டிற்கு கீழ் வாழ்வோருக்கு மட்டுமல்லாமல் கிராமங்களில் வசிக்கும் அனைவருக்கும் நுணுக்கமில்லா வேலைவாய்ப்பு அளிப்பதற்கு, அனைவரையும் பதிவு செய்தல் வேண்டும்.
· விண்ணப்பித்த 15 நாட்களுக்குள் அவர்களுக்கு புகைப்படத்துடன் கூடிய வேலைவாய்ப்பு அட்டை வழங்கப்பட வேண்டும்.
· வேலை அட்டை வைத்திருப்போருக்கு வேலை தேவைப்படும் எனில் அவர்களது தேவையை ஏற்று வேலைவாய்ப்பை 15 நாட்களுக்குள் அளிக்க வேண்டும்.
· நீர் மற்றும் நில வளம் காத்தல், காடுவளர்ப்பு, நீர் சேமிப்பு, நில மேம்பாடு போன்ற வேலைகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.
· இதில் 50% வேலைவாய்ப்பை கிராம ஊராட்சிகளே அமல்படுத்த வேண்டும்.
· கிராமத் திட்டங்களை கிராமசபா பரிந்துரை செய்தபின் ஜில்லா பஞ்சாயத்து அதனை அங்கீகரிக்க வேண்டும்.
· தரகர்களையோ அல்லது இயந்திரங்களையோ பயன்படுத்தக்கூடாது.
· வேலையாட்கள் அதிகம் தேவைப்படுகின்ற பணிகளை தேர்ந்தெடுத்து, 60% கூலியில் வேலையை மேற்கொள்ள வேண்டும்.
· 15 நாட்களுக்குள் பணம் பட்டுவாடா செய்ய வேண்டும். மாநில அரசு வேளாண் பணிகளுக்கு பரிந்துரை செய்துள்ள குறைந்த பட்ச கூலியை கடைபிடிக்க வேண்டும்.
· தமிழ்நாடு, ஆந்திரபிரதேசம், கேரளா போன்ற மாநிலங்கள் பணப்பட்டுவாடா செய்வதற்கு வங்கிகளையும், தபால் நிலையங்களையும் பயன்படுத்துகின்றன.
மேலும் விபரங்களுக்கு http://www.nrega.nic.in/ என்ற இணையதளத்தை அணுகவும்।
கிராமப்புறங்களில் வசிக்கும் வயது வந்த குடும்பத்தினர் அனைவரும் விண்ணப்பிக்கலாம். இச்சட்டத்தின் கீழ், ஏற்கனவே வேலையில் இருந்தாலும், அல்லது தற்பொழுது வேலை செய்துகொண்டிருந்தாலும், திறன் தேவைப்படாத வேலை கேட்க உரிமை உண்டு.
பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். மேலும் இச்சட்டத்தின் கீழ் 33 சதவீத வேலையை பெண்களுக்கு கொடுக்க வேண்டும்.
தனியொருவரின் விண்ணப்பம் வேலைக்கு ஏற்றுக்கொள்ளப்படுமா?
ஆம். வேலை வேண்டுவோர் குடும்பவாரியாக பதிவு செய்யப்படுவர். இருப்பினும், ஒரு குடும்பத்தின் அனைத்து உறுப்பினர்களும் 100 நாட்கள் வேலை வாய்ப்பிற்கு தங்களை பதிவு செய்யலாம்.
எவ்வாறு ஒருவர் விண்ணப்பிக்கமுடியும்?
வேலைக்கு தங்களை ஏற்கனவே பதிவு செய்து வேலை அட்டை வைத்திருப்போர், வேலை வாய்ப்பு பெற, வேலை வேண்டி ஒரு தனி கடிதம் வரைந்து கிராம பஞ்சாயத்திற்கோ அல்லது அவ்வொன்றியத்தின் திட்ட அலுவலருக்கோ அனுப்ப வேண்டும். மேலும் விண்ணப்பம் ஏற்றுக் கொள்ளப்பட்ட தேதியையும் கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டும்.
ஒரு வருடத்தில் எத்தனை நாட்களுக்கு ஒருவர் வேலைவாய்ப்பு பெறமுடியும்?
ஒவ்வொரு குடும்பத்தினரும் ஒரு வருடத்தில் 100 நாட்களுக்கு வேலை பெறலாம். இந்த 100 நாட்கள் வேலையை ஒவ்வொரு குடும்பத்தில் உள்ள உறுப்பினர்களும் பகிர்ந்து கொள்ள வேண்டும். வேலைக்காலம் தொடர்ச்சியாக 14 நாட்களாவது இருக்கவேண்டும். ஆனால் ஒரு வாரத்திற்கு 6 நாட்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
எப்பொழுது ஒருவருக்கு வேலை கிடைக்கும்?
விண்ணப்பம் கொடுத்த 15 நாட்களுக்குள்ளோ அல்லது வேலை கேட்ட முதல் நாளில் இருந்தோ வேலை கொடுக்கப்படும்.
வேலையை யார் வழங்குவார்கள்?
கிராம பஞ்சாயத்து அல்லது திட்ட அலுவலர் இருவரில் எவரிடம் வேலை வேண்டப்பட்டதோ அவர் வாயிலாக வேலை வழங்கப்படும்.
ஒருவருக்கு வேலை அளிக்கப்படும் என்பதை எவ்வாறு அவர்கள் அறியமுடியும்?
கிராமப் பஞ்சாயத்தோ அல்லது திட்ட அலுவலரோ, விண்ணப்பித்தவர்களுக்கு, எப்பொழுது, எங்கு வேலை அளிக்கப்படும் என்ற செய்தியை கடிதம் மூலம் அனுப்பவேண்டும். கிராம பஞ்சாயத்து மற்றும் திட்ட அலுவலர் அலுவலகங்களில் உள்ள செய்தி பலகையில் வேலை நடைபெறவிருக்கும் இடம், தேதி மற்றும் வேலைவாய்ப்பு பெறவிருப்போரின் பெயர்கள் போன்ற தகவல்கள் ஒட்டப்படும்.
வேலைக்கான கடிதம் கிடைத்தவுடன் விண்ணப்பித்தோர் என்ன செய்யவேண்டும்?
வேலை அட்டையுடன், வேலை நியமனம் செய்யப்பட்ட இடத்திற்கு, வேலை நடக்கவிருக்கும் நாளன்று செல்ல வேண்டும்.
ஒருவர் வேலை அளிக்கப்பட்ட தேதியில் வேலைக்குச் செல்லாவிட்டால் என்ன நடக்கும்?
கிராம பஞ்சாயத்து மற்று திட்ட அலுவலர் குறிப்பிட்ட 15 நாட்களுக்குள் அவர்கள் வேலைக்கு செல்லாவிட்டால், வேலையில்லாதோருக்கு அளிக்கப்படும் சலுகைகளில் இருந்து விலக்கப்படுவர்.
அவர்கள் மறுமுறை வேலைக்கு விண்ணப்பிக்க முடியுமா?
ஆம். விண்ணப்பிக்கலாம்
ஒருவருக்கு என்ன கூலி கிடைக்கும்?
மாநில அரசு வேளாண் தொழிலாளர்களுக்கு நியமனம் செய்துள்ள குறைந்த பட்ச கூலி அளிக்கப்படும்.
எவ்வாறு கூலி வழங்கப்படும்? தினக்கூலியா அல்லது வேலைப்பளுவை பொருத்தா?
இருவழிகளிலும் அளிக்கப்படும். வேலையின் அளவை மதிப்பிட்டு கூலி கொடுக்கப்பட்டால், 7 மணி நேரம் வேலை செய்வோருக்கு குறைந்த பட்ச கூலி கொடுக்க வேண்டும்.
எப்பொழுது கூலி வழங்கப்படும்?
வாரத்திற்கு ஒருமுறையோ அல்லது வேலை செய்த 14 நாட்களுக்குள்ளோ வழங்கப்பட வேண்டும். கூலிப்பணத்தில் ஒரு பகுதியை நாள் கூலியாகவும் வழங்கலாம்.
என்னென்ன வசதிகளை வேலையாட்களுக்கு அளிக்க வேண்டும்?
பாதுகாப்பான குடிநீர், குழந்தைகளுக்கு நிழல், ஓய்வெடுப்பதற்கு இடம், முதலுதவி பெட்டி போன்ற வசதிகள் செய்துதரப்படவேண்டும். வேலை செய்யும்போது ஏற்படும் சிறு காயங்களுக்கான மருந்துகளையும், ஏனைய சுகாதாரத்திற்கான அவசர சிகிச்சைக்கான மருந்துகளையும் முதலுதவிப்பெட்டியில் வைத்திருக்க வேண்டும்.
வேலை எங்கு அளிக்கப்படும்?
வீட்டிலிருந்து 5 கிலோ மீட்டருக்குள் வேலை நடைபெறும். 5 கிலோ மீட்டருக்கு மேல் தூரம் இருந்தால் அவர்களுக்கு, போக்குவரத்திற்காக 10 சதவீதம் அதிகமாக பணம் வழங்கப்படும். மேலும், வயதானவர்களுக்கும், பெண்களுக்கும் கிராமத்திற்கு அருகிலேயே வேலை செய்வதற்கு முன்னுரிமை அளித்து வேலைகொடுக்கப்படும்.
வேலையாட்களுக்கு அளிக்கப்படும் சலுகைகள் என்ன?
விபத்து ஏற்பட்டால்
வேலை செய்யும் போது ஏதாவது விபத்து நேர்ந்தால், அவர்களுக்கு மாநில அரசின் இலவச சிகிச்சை கிடைக்கும்.
காயம் அடைந்தவர் மருத்துவமனையில் இருந்தால்
காயம் அடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்தால், அவர்களுக்கு மருந்துகள், சிகிச்சை, தங்கும் வசதி போன்றவை இலவசமாக கொடுக்கப்படும். மேலும் 50 சதவீதம் கூலிக்கு குறையால் பணம் கொடுக்கப்படும். வேலை செய்யும் இடத்தில் விபத்தின் காரணமாக இறப்போ அல்லது நிரந்தர ஊனமோ ஏற்பட்டால் இறந்தவரின் வாரிசுக்கோ அல்லது ஊனம் ஏற்பட்டவருக்கோ, மத்திய அரசு குறிப்பிட்டபடி ரூ. 25,000 தொகை வழங்கப்படும்.
தகுதி பெற்றவர்களுக்கு வேலை அளிக்கப்படாவிட்டால் என்ன நடக்கும்?
வேலை வேண்டி விண்ணப்பித்த, வேலைக்கு தகுதியான ஒருவருக்கு 15 நாட்களுக்குள் வேலை கிடைக்காவிட்டால், அவருக்கு வேலைவாய்ப்பு இல்லாதோருக்கான சலுகைகள் வழங்கப்படவேண்டும்.
சலுகைகளின் வீதம்
ஒரு குடும்பத்தாருக்கு கொடுக்கப்பட்ட வேலைநாட்களில் முதல் 30 நாட்களுக்கு 25 சதவீதம் கூலியும், அதற்கு மேல் 50 சதவீதம் கூலியும் கொடுக்க வேண்டும்.
எந்த வகையான வேலைகளை கொடுக்க வேண்டும்?
நீண்டநாள் தாங்கும் நீடித்த சொத்துக்கள் ஏற்படுத்துதல்
இத்திட்டத்தின் முக்கிய நோக்கம், ஊரக ஏழை மக்களுக்காக நீடித்த நிலையான சொத்துக்களை உருவாக்கி அவர்களின் வாழ்க்கையை வளமாக்குவதாகும்.
தரகர்கள் மூலம் மேற்கொள்ளப்படும் வேலைகளுக்கு அனுமதி இல்லை
இத்திட்டத்தின் கீழ் செய்ய வேண்டிய வேலைகள் ஒன்றன்பின் ஒன்றாக
நீர்வள பாதுகாப்பு மற்று நீர் சேமிப்பு
வறட்சி எதிர்ப்பு திறன் ஏற்படுத்துதல், காடு வளர்ப்பு, மரம் நடுதல்
நீர்பாசன வாய்க்கால், நுண்பாசனம், சிறுபாசனம் போன்ற வேலைகள்
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வகுப்பினைச் சேர்ந்த மக்களுக்கும், இந்திய அரசின் இந்திரா-அவாஸ் யோஜனா திட்டத்தின் சலுகை பெறுவோருக்கும், நீர்ப்பாசன வசதி அளித்தல்
ஏரிகளை தூர்எடுத்தல் போன்ற ஏனைய பழங்கால நீர் நிலைகளை புதுப்பிக்கும் வேலைகள்
நில மேம்பாடு
நீர் தேங்கும் பகுதிகளில் வடிகால் வசதி அமைத்து வெள்ளத்தில் இருந்து பாதுகாத்தல்
அனைத்து தட்பவெப்ப நிலைகளிலும் கிராமங்களை இணைத்தல். சாலைகள் அமைத்து, தேவைப்படும் இடங்களில் சிறுபாலங்கள் அமைத்தல் மற்றும், கிராமங்களின் உள்பகுதிகளிலும் தேவையான இடங்களில் சிறுபாலங்கள் அமைத்தல்
மத்திய அரசு மாநில அரசுடன் கலந்து ஆலோசித்த மற்ற பணிகளும் இதனுள் அடங்கும்.
திட்டத்தில் பணியாற்றுவோரின் சேவைகள் எவ்வாறு கண்காணிக்கப்படும்?
உள் மற்றும் வெளி மதிப்பீட்டாளர்களைக் கொண்டு இத்திட்டத்தின் பொறுப்பாளர்கள் மேற்கொள்ளும் பணிகள், தொடர்ச்சியாகவும், இடையிலும் மதிப்பீடு செய்யப்படும். கிராம சபாக்கள் மூலம் பணிகள் அனைத்தும் கணக்கீடு செய்யப்படும். கிராம அளவில் காவல் கண்காணிப்பாளர்கள் அமைக்கப்படுவர். இத்திட்டத்தில் ஏதேனும் முறைகேடுகள் கண்டுபிடிக்கப்பட்டால் இதில் சம்பந்தப்பட்டோருக்கு 1000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும். மேலும் ஒவ்வொரு மாவட்டத்திலும் ‘குறை தீர்க்கும் மையங்கள்’ உருவாக்கப்படும்