Monday, October 5, 2009

நேரடி நெல் விதைப்பு - களை நிர்வாகம்

நேரடி நெல் சாகுபடியில் அதிக மகசூலுக்கு பெரும் சவாலாக இருப்பது களைகளின் எண்ணிக்கை, களைகளின் வகைகள் மற்றும் காலத்தைப் பொறுத்து களை விதையும் நெல் விதையும் சேர்ந்து ஒரே சமயத்தில் வளர்தல் போன்றவற்றால் நெற்பயிரின் விளைச்சல் 10 சதவீதம் முதல் 70 சதவீதம் வரை விளைச்சல் பாதிப்பு இருக்கும் என ஆய்வறிக்கைகள் கூறுகின்றன.
நடவு வயலைப் போல் நேரடி நெல் விதைப்பில் நடவு நிலத்தை பண்படுத்தாமல் விதைகளை அப்படியே விதைப்பதாலும் களைகளின் தாக்கம் மிக அதிகமாகவே காணப்படும். எனவே நேரடி நெல் விதைப்பில் அதிக மகசூலுக்கு விதைத்த 15 நாட்கள் முதல் 45 நாட்களுக்குள் களைகள் இன்றி பயிரைப் பராமரிப்பது மிகவும் இன்றியமையாததாகும்.

களைகளை கட்டுப்படுத்தும் முறைகள்
உழவியல் முறைகள்: வயலில் உள்ள களை விதைகள் முளைக்கும் வகையில் தண்ணீரைத் தேக்கி வைத்து பின் கிராமாக்சோன் அல்லது கிளைபோசேட் 0.5 சதவீத மருந்தை (5 மிலி/ கி மருந்தை 1 லிட்டர் தண்ணீரில் கரைத்தல்) தெளிப்பதன் மூலம் வயலில் உள்ள பெரும் பாலான களை விதைகளை கட்டுப்படுத்தி விடலாம். பின் இரண்டு வாரம் கழித்து நெல் விதைகளை விதைப்பது சாலச்சிறந்தது.

ஊதா உரங்கள்: நேரடி நெல் விதைப்பில் ஏக்கருக்கு 10 கிலோ தக்கைப்பூண்டு அல்லது சணப்பை விதையை ஊடுபயிராக பயிரிட்டு செடி வளர்ந்த 30வது நாளில் ஏக்கருக்கு 500 கிராம் வீதம் 2, 4-டி சோடியம் உப்பை 200 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளித்து மக்கச் செய்யும் பொழுது சுமார் 40 சதவீத அகன்ற இலையுடைய களைகளை கட்டுப்படுத்துவதோடு மட்டுமின்றி வயலில் அங்ககப் பொருட்களின் அளவு மற்றும் தழைச்சத்தின் அளவை அதிகரிக்கின்றன.
ரசாயன முறை: விதைத்த 3 முதல் 8 நாட்களுக்குள் ஏக்கருக்கு பிரிட்டிலாகுளோர் அல்லது பென்டிமெத்தலின் 400 மில்லி வீதம் 25 கிலோவை மணலுடன் கலந்து வயலில் போதுமான ஈரப்பதம் இருக்கும்பொழுது தெளித்தால் கோரை வகைகளை எளிதாக கட்டுப்படுத்தலாம். மேலும் நெல்விதையின் முளைப்பகுதியில் களைக்கொல்லி படும்பொழுது சிறிது பாதிப்பை ஏற்படுத்தும். எனவே களைக்கொல்லியுட்ன பாதுகாப்பான் மருந்தை கலந்து பயன்படுத்துவது சிறந்த பயனை அளிக்கும். செடி வளர்ந்த 25வது நாளில் பினாக்சோ புரோப் பி ஈத்தைல் களைக்கொல்லியை ஏக்கருக்கு 20 கிராம் வீதம் தெளித்தும் புல் வகைகளை கட்டுப்படுத்தலாம்.
செய்யக்கூடாதவை: செடி வளர்ந்த பிறகு தெளிக்கும் களைக்கொல்லியை எக்காரணத்தைக் கொண்டும் மணலுடனோ, யூரியாவுடனோ அல்லது வயல் மண்ணுடனோ கலந்து தெளிக்கக்கூடாது. எக்காரணத்தைக் கொண்டும் 2, 4-டி சோடியம் உப்பு மற்றும் ஆல்மிக்ஸ்சுடன் பினாக்சோ புரோப் பி ஈத்தைல் மற்றும் சைக்ளோ பாப் பி பியூடைல் மருந்தை கலக்கக்கூடாது. மேற்கூறிய மருந்துகளுக்கு சேரும் தன்மை கிடையாது.
செய்யக்கூடியவை: வயலில் போதுமான ஈரம் இருக்கும்பொழுது மட்டுமே களைகள் முளைக்கும் முன்னும் பின்னும் அடிக்க வேண்டிய களைக்கொல்லியை பயன்படுத்துவது அவசியம்.

* களைச்செடி வளர்ந்த சரியான தருணத்தில் களைக்கொல்லியை அடித்தல் அவசியம்
* கோரை வகைகளுக்கு 2 முதல் 3 இலைகள் இருக்கும் தருணத்தில் களைக் கொல்லியை தெளிப்பது சிறந்த பயனளிக்கும்.
* தட்டை விசிறி வகை நாசில்களையே பயன்படுத்துதல் வேண்டும்.
பெ. கதிர்வேலன் மற்றும் சு.மீனாட்சிசுந்தரம்
வேளாண் அறிவியல் நிலையம்
தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம், குன்றக்குடி.

0 comments: