Thursday, October 15, 2009

புதிய பயிர் ரகங்கள்

புதிய பயிர் ரகங்கள்: நெல்லில் புதிய ரகம்: தற்போது வேளாண் ஆராய்ச்சிகள் வாயிலாக PMK (R) 4 என்ற புதிய ரகம் விவசாயிகளுக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளது. குறிப்பாக குறைந்தளவு நீர் பாசனம் உள்ள பகுதிகளுக்கு ஏற்ற இப்புதிய ரகம் சிவகங்கை மற்றும் ராமநாத புரம் விவசாய நிலங்களுக்கு ஏற்றது. குறுகிய கால வகையை சார்ந்த இப்புதிய ரகம் 100 முதல் 105 நாட்களில் அறுவடை செய்யலாம். முந்தைய PMK (R) 3 ரகத்தைக் காட்டிலும் வேளாண் ஆராய்ச்சிகளில் 14.7 சதவீதம் வரை அதிகளவு மகசூல் பெற்றுத் தந்துள்ளது. சராசரியாக ஒரு எக்டருக்கு 3700 கிலோ என்ற அளவில் நல்ல மகசூலை விவசாயிகள் குறைந்த மழை, நீர் வளம் உள்ள பகுதிகளில் பெறமுடியும்.

குதிரைவாலியில் புதிய ரகம் CO (KV) 2: சிறுதானிய பயிராகவும், தோட்டக்கால் மற்றும் மானாவாரி நிலங்களில் அதிகளவு பயிரிடப்படும் குதிரைவாலியில் CO (KV) 2 என்ற புதிய ரகம் உருவாக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் ஆடி (June July) மற்றும் புரட்டாசிப்பட்டம் (Sep. Oct.) மாதங்களில் பயிர் செய்ய ஏற்றது. சுமார் 95 நாட்களில் விளைச்சல் தரும். இந்தப் புதிய ரகம் முந்தைய நாட்டு ரகங்களைவிட 15-25 சதவீதம் வரை அதிக மகசூல் தருவதாக தொடர் வேளாண் ஆராய்ச்சிகள் வாயிலாக கண்டறியப்பட்டுள்ளது. குறிப்பாக அதிகளவு நல்ல கால்நடை தீவனமாகவும் பயன்படுத்தப்படும் இப்புதிய ரகம் நல்ல சுவை உள்ளதாகவும் 5871 கிலோ/ எக்டர் நிலத்தில் தீவனம் உருவாக்கும் தன்மைகொண்டது. சராசரியாக தானிய உற்பத்தியாக ஒரு எக்டர் நிலத்திற்கு 2114 கிலோ தரவல்லது.

புதிய ரக பருத்தி எஸ்.வி.பி. ஆர். (SVPR4): தற்போது உள்ள பருத்தி ரகங்களைவிட சிறப்பாக மானாவாரி நிலங்களில் நன்றாக வளரும் இப் புதிய ரக பருத்தி 150 நாட்கள் கால அளவை கொண்டது. திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர், மதுரை, தேனி, திண்டுக்கல், திருச்சி, கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் கோடை காலங்களில் பயிரிட ஏற்றது. எக்டருக்கு சராசரியாக 1583 கிலோ வரை மகசூல் தரவல்லது. வீரிய ரக ஒட்டு ரகமாக இப்புதிய ரகம் MCU 5 மற்றும் S4727 ஆகிய ரகங்களின் இணைப்பு வாயிலாக உருவாக்கப்பட்டுள்ளது.

புதிய கரும்பு ரகம்: COC (SC) 24: தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் பயிரிட ஏற்ற ரகமான இப்புதிய ரகம் நன்றாக வறட்சி தாங்கி வளரக்கூடியது. 10 மாதங்களுக்குள் 133 டன்கள் ஒரு எக்டருக்கு மகசூல் தரவல்லது. சக்கரை அளவாக 17.05 டன் / எக்டருக்கு எடுக்கலாம் என்று கண்டறியப்பட்டுள்ளது. இப்புதிய ரகம் CO 8371 மற்றும் MS 6847 போன்ற கரும்பு ரகங்களின் கலப்பு வாயிலாக உருவாக்கப்பட்டுள்ளது.

புதிய ரக எள்: தற்போது TMV (SV) 7 என்ற புதிய ரக எள் வேளாண்மை ஆராய்ச்சிகள் வாயிலாக உருவாக்கப்பட்டுள்ளது. எல்லா காலத்திற்கும் பருவத்திற்கும் ஏற்ற இப்புதிய ரக எள் வேர்வாடல் நோயை தாங்கி வளரும் தன்மை கொண்டது. அதிகளவு புரதச்சத்து கொண்டதாக கண்டறியப்பட்டுள்ளது.

புதிய கினியா ரக புல் CO (GG) 3: நீண்ட நாள் வளர்ந்து நன்றாக மகசூல் தரும் இப்புதிய ரக கினியா புல் CO (GG) 3 ஆப்ரிக்க நாட்டின் "மும்பாசா' என்ற ரகத்தில் இருந்து உருவாக்கப்பட்டுள்ளது. தென்னை மற்றும் பிற தோட்டப் பயிர்களில் நல்ல ஊடுபயிராக சாகுபடி செய்யலாம். ஒரு எக்டர் நிலத்தில் வருடத்திற்கு 423 மெட்ரிக் டன்கள் வரை மகசூல் தரவல்லது.

தி.ராஜ்பிரவீன், விரிவுரையாளர், வேளாண்மை விரிவாக்கத்துறை, அண்ணாமலை பல்கலைக்கழகம்-608 002.

0 comments: