Saturday, October 10, 2009

எள் பயிர் அறுவடை தொழில்நுட்பம்

எள் எண்ணெய் உபயோகம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் நல்ல தரமான எள் விதை உற்பத்தி செய்வது அவசியம். எள் விதைகளில் 51 முதல் 52 சதம் எண்ணெய்சத்து கிடைக்கிறது. தரமாக எள் உற்பத்தி செய்வதால், கூடுதல் விலை அதிக எண்ணெய் சத்து மற்றும் கசப்பு தன்மை அற்ற எண்ணெய் கிடைக்க வாய்ப்பு உள்ளது. தற்போது கருப்பு எள் ரூ.38 முதல் ரூ.42 வரையிலும், வெள்ளை எள் ரூ.58 முதல் ரூ.65 வரையில் சந்தையில் விலை போகிறது.

அறுவடைக்குப் பின் தொழில்நுட்பங்களை விவசாயிகள் கடைபிடித்தால், எள்ளில் கூடுதல் வருவாய் பெறலாம். எள் பயிர் அறுவடையின்போது செடியின் கீழ்பகுதியில் உள்ள இலைகளில் 25 சதம் இலைகள் உதிர்ந்தும் மேலே உள்ள இலைகள் மற்றும் தண்டு பகுதிகள் மஞ்சள் நிறமாக மாறி இருக்க வேண்டும். எள் காய்கள் பாதி அளவு மஞ்சள் நிறம் அடைந்துவிட்டால் பயிர் அறுவடை செய்ய ஏற்ற பருவமாகும்.

எள் பயிரின் கீழ் பகுதியில் இருந்து பத்தாவது காயை உடைத்துப் பார்த்தால் உள்ளே இருக்கும் விதைகள் கருப்பு நிறமாக மாறி இருந்தால், அறுவடை செய்துவிடலாம். இது கருப்பு எள் விதைக்கு மட்டும் பொருந்தும். வெள்ளை எள் பயிருக்கு எள் விதை வெள்ளை நிறம் அடைய வேண்டும்.

இந்த நிலை தாண்டி அறுவடை செய்தால் எள் காய்கள் வெடித்து, விதைகள் சிதறி சேதம் அடையும். எள் பயிரை தரைமட்டத்தில் அறுத்து எடுக்க வேண்டும். செடியின் மேல் பகுதியை உள்புறமும் அடிபாகமும், வெளிப்புறமும் இருக்கும்படி வைத்து வட்ட வடிவமாக திறந்த வெளியில் அடுக்கி வைக்க வேண்டும். அடுக்கிய எள் செடியில் உள்ள காய்கள் ஒட்டுமொத்தமாக முதிர்ச்சி அடைய மேல்பகுதியில் வைக்கோல் போட்டு மூடி வைக்க வேண்டும்.

மூன்று நாட்கள் கழிந்த எள் செடியை எடுத்து களத்தில் காயப்போட வேண்டும். மூன்று முதல் ஐந்து நாட்கள் காயவைத்து பின் விதையை தனியே பிரித்து எடுக்க வேண்டும். பிரித்து எடுக்கப்பட்ட எள் விதையில் கலந்துள்ள கல், மண், இலைச்சருகுகள், அழுகிய முதிராத விதைகள், பழுதுபட்ட விதைகளை தனியே பிரித்து எடுக்க வேண்டும்.

ஒரு லிட்டர் எள் விதையின் எடை 630 கிராம் இருக்க வேண்டும். அப்போதுதான் அவை முதல் தரமான எள்ளாக இருக்கும். காய்ந்த எள் விதையின் ஈரப்பதம் ஐந்துமுதல் ஒன்பது சதத்துக்குள் இருந்தால், தரமான எள் விதையாகும். எள் விதைகள் விற்பனை கூடங்களில் வணிகமுறை தரம் பிரிப்பு மூலம் மூன்று தரமாக பிரிக்கப்படுகிறது.

0 comments: