Monday, October 19, 2009

நிலக்கடலை சாகுபடி.. கூடுதல் மகசூல்

நிலக்கடலை - கூடுதல் மகசூல்….

நிலக்கடலை சாகுபடியில் கூடுதல் மகசூல் பெற நுண்சத்துக் கரைசலை தெளிக்குமாறு வேளாண் துறை யோசனை தெரிவித்துள்ளது.

தற்போது சாகுபடி செய்யப்பட்டுள்ள நிலக்கடலைப் பயிர் 25 நாள் வளர்ச்சிப் பருவத்தில் உள்ளது. இந்தத் தருணத்தில் ஊட்டச் சத்து உரக் கரைசல் தெளிப்பது மிகவும் அவசியம்.

இதற்கு டிஏபி 1 கிலோ, அம்மோனியம் சல்பேட் 400 கிராம், பொட்டாஷ் 1 கிலோ, போராக்ஸ் 200 கிராம், தண்ணீர் 200 லிட்டர் தேவை.

முதல் நாள் மாலை 1 கிலோ டிஏபி உரத்தை நன்கு தூள் செய்து, அதை 10 லிட்டர் நீரில் ஊறவைத்து, மறுநாள் வடிகட்ட வேண்டும்.

வடிகட்டிய கரைசலுடன் அம்மோனியம் சல்பேட் 400 கிராம், போராக்ஸ் 200 கிராம், பொட்டாஷ் 1 கிலோ ஆகியவற்றை கலந்து 1 டேங்குக்கு அரை லிட்டர் வீதம் 20 கலவை தயாரித்து 1 ஏக்கர் பரப்பில் கைத்தெளிப்பான் மூலம் தெளிக்க வேண்டும்.

இதேபோல, விதைத்த 25 மற்றும் 40-வது நாள் என 2 முறை தெளிக்க வேண்டும்.

பின்னர், பயிர் வளர்ச்சி ஊக்கி மருந்தான பிளானோபிக்ஸ் 175 மில்லி மருந்தை 200 லிட்டர் நீரில் கலந்து 1 ஏக்கர் பரப்பில் கைத்தெளிப்பான் மூலம் மாலை நேரத்தில் தெளிக்க வேண்டும்.

இந்த முறைகளைக் கையாண்டால் பூக்கள் உதிர்வது தடுக்கப்பட்டு, விழுதுகள் அதிகம் உருவாகி, திரட்சியான மணிகள் கிடைக்கும். இதனால் 25 விழுக்காடு கூடுதல் மகசூல் கிடைக்கும் என்று பட்டுக்கோட்டை வேளாண் உதவி இயக்குநர் வை. கலியபெருமாள் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார் .

0 comments: