Sunday, October 4, 2009

கூஸ் (சீமை) வாத்து வளர்ப்பு

கூஸ் வாத்துகள் கறிக்காகவும், அழகுக்காகவும் புல் தரைகளை சமமாகப் பராமரிக்கவும், தோட்டங்களில் களைகளை அழிக்கவும் மற்றும் காவலுக் காகவும் வளர்க்கப்படுகின்றன. இதன் இரைப்பை பசுந் தீவனத்தை நன்கு ஜீரணித்து உட்கிரகிக்கும் திறன் படைத்தது. கூஸ் வாத்துக்கள் வளர்ப்பிற்கு போதுமான அளவு நீர் நிலைகளுடன் கூடிய மேய்ச்சல் நிலம் இருப்பது அவசியம். ஒரு ஏக்கர் நிலத்தில் பொதுவாக 15-50 கூஸ் வாத்துக்களை வளர்க்கலாம். அதிக குளிர், அதிக வெப்பம் மற்றும் அதிக காற்று ஆகியவற்றிலிருந்து பாதுகாக்க அதிக செலவில்லாமல் கொட்டகை அமைக்க வேண்டும்.

இனப்பெருக்கம்: கூஸ் வாத்துக்களில் 6 இனங்கள் உள்ளன. அவை: டொலூஸ், எம்டன், சைனீஸ், கனேடியன், ஆப்ரிக்கன் மற்றும் எகிப்தியன் ஆகிய இனங்கள் உள்ளன. ஆண் கூஸ் வாத்துக்கள் சராசரியாக 7 கிலோ உடல் எடையும், பெண் கூஸ் வாத்துக்கள் 6 கிலோ உடல் எடையுடனும் இருக்கும். வாத்துக்களுடன் ஒப்பிடும்போது கூஸ் வாத்து முட்டைகளை நன்கு அடைகாத்து குஞ்சு பொரிக்கும் திறனுடையவை. ஆண் கூஸ் வாத்துக்களின் உடல் அமைப்பு பெண் கூஸ் வாத்துக்களைவிட பெரியதாக இருக்கும். பெண் கூஸ் வாத்து கத்தும்போது கரகரப்பான ஒலி உண்டாகும். ஆண் கூஸ் வாத்து கத்தும்போது மெல்லிய ஒலி உண்டாகும்.

தீவனப் பராமரிப்பு: கூஸ் வாத்துக்களின் முக்கிய உணவு புரதச்சத்து நிறைந்த பசுந் தீவனமாகும். ஒரு கூஸ் வாத்திற்கு நாள் ஒன்றுக்கு தேவைப்படும் தீவனம் - புல்வகை பசுந்தீவனம் 300 கிராம், அடர்தீவனம் 100 கிராம், கிளிஞ்சல் 5 கிராம், தீவனத்துடன் வைட்டமின்கள் மற்றும் தாது உப்புக்கலவை சேர்த்து அளிக்க வேண்டும். சாதாரணமாக கூஸ் வாத்துக் களுக்கு மேய்ச்சலுடன் வாத்து ஒன்றுக்கு, நாள் ஒன்றுக்கு 100 கிராம் அடர் தீவனம் அளித்தாலே போதுமானது. அடர்தீவனத்தை எப்போதும் தண்ணீரில் பிசைந்து கொடுக்க வேண்டும். பெண் கூஸ் வாத்துகள் அடைகாக்கும்பொழுது மேய்ச்சலுக்கு செல்லாததால் தினமும் கூஸ் வாத்துகளை அடையிலிருந்து கீழே இறக்கி பசுந்தீவனம் மற்றும் அடர்தீவனம் அளிக்க வேண்டும்.

நோய் பராமரிப்பு: முக்கிய நோய் ராணிக் கெட். பாதிக்கப்பட்ட வாத்துக்களில் பச்சை மற்றும் வெள்ளை நிறக் கழிச்சல் காணப்பட்ட பின் இறந்துவிடும். பெண் வாத்துக்களின் முட்டை உற்பத்தி குறையும். இந்நோயினைத் தடுக்க 7, 21ம் நாட்களில் லசோர்ட்டா தடுப்பூசி போடவேண்டும். கூஸ் வாத்துக்களின் குஞ்சுகளில் முக்கியமாக வைட்டமின் மற்றும் தாது உப்புக்களின் பற்றாக்குறை நோய்கள் அதிகமாக காணப்படும். எனவே வாத்துக் குஞ்சுகளுக்கு தாது உப்புக்கலவை மற்றும் வைட்டமின்களால் செறிவூட்டப்பட்ட தீவனத்தினை அளிக்க வேண்டும்.

(தகவல்: மா.கீதா, க.செல்வராஜு, ச.சரவணன் மற்றும் அ.மாணிக்கவாசக தினகரன், கால்நடை நோய் நிகழ்வியல் நோய்தடுப்பு மருந்தியல் துறை, கால்நடை மருத்துவக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், நாமக்கல்-637 002).

0 comments: