Thursday, October 8, 2009

பொன்னாய் நெல் குவிக்க பொடி நெல் (நேரடி விதைப்பு) சாகுபடி

பெரியார், வைகை பாசன நிலங்களில் நிலைமை நாற்று விட்டு, நடவு செய்யும் சாகுபடிக்கு ஏற்றதாக இல்லை. ஆனால் அவ்வப்போது மழை பெய்துகொண்டிருக்கிறது. இந்த சூழ்நிலை தற்போது பொடியில் நேரிடை விதைப்பு செய்து செய்யும் சாகுபடிக்கு ஏற்றதாக உள்ளது. இதை செய்துவிட்டு உடனே வாய்க்காலில் நீர் வந்தால் பாசனம் செய்து முளைத்த நாற்றினை தேவையான அளவு பறித்து விதை முளைக்காத சொட்டை இடங்களில் நட்டு, நடவுப்பயிர் போல் சாகுபடி செய்ய முடியும். அது சரிப்படவில்லை எனில் நேரிடை விதைப்பு முறையை கையாளலாம். இம்முறை சாகுபடிக்கு ஏற்ற ரகங்கள் பெருவெட்டு நெல் அம்பாசமுத்திரம் 16, ஜோதி, டி.கே.எம்.9, குச்சி நெல் ஜே-13, ஆடுதுறை 45, ஐ.ஆர்.20, ஆடுதுறை 36 போன்றவைகள் ஆகும்.

எந்த ரகத்தின் விதை கிடைக்கின்றதோ அதை வாங்கி சாகுபடியை துவக்கலாம். விவசாயிகள் டிராக்டர் மற்றும் டில்லர் கருவி கொண்டு நிலத்தை புழுதியாக்க வேண்டும். புழுதியை ராமநாதபுரம், விருதுநகர் மாவட்ட விவசாயிகள் பொடியென்று சொல்வார்கள். புழுதி வறட்சியாக இருக்கும் சமயத்தில் ஊட்டச் சத்துக்களை அதிகம் கொள்கின்றது. இதுசமயம் நன்கு மக்கிய இயற்கை உரத்தோடு பத்து பொட்டலங்கள் நுண்ணுயிர் உரத்தை நன்கு கலந்து நிலத்திற்கு இடலாம். இதுசமயம் ரசாயன உரங்களை இடாமல் நிலத்தில் ஊறப்போடாத நெல் விதையை நேரிடை விதைப்பு செய்து முளைக்க வைக்க நிலத்தில் பரம்படிக்க வேண்டும். இதுசமயம் நிச்சயம் ஆங்காங்கே மழை இருக்கும். விதை விதைத்த15ம் நாள் மேலுரமாக 25 கிலோ டி.ஏ.பி., 15 கிலோ யூரியா, 15 கிலோ பொட்டாஷ் இடவேண்டும். விதைத்த 20ம் நாள் ஒரு கைக்களை எடுக்கவேண்டும்.

விவசாயிகள் அரும்பாடுபட்டு பலமுறை நிலத்தை ஏற்கனவே உழுதிருப்பதால் களைப்பிரச்னை பெரிய அளவில் வராது. களையெடுத்து அதிக மழை வந்தால் 10 கிலோ யூரியா, 10 கிலோ பொட்டாஷ் இவைகளை இரண்டாவது மேலுரமாக இடலாம். புழுதிக்கால் சாகுபடியில் பூச்சி, பாதிப்பு அதிகம் இல்லையெனிலும் பூஞ்சாண வியாதிகள் வருவதற்கு வாய்ப்பு உண்டு. அனேகமாக பயிரினை குலைநோய் தாக்கக்கூடும். இதனை உடனே கட்டுப் படுத்த வேண்டும். விவசாய அதிகாரிகள் நல்ல யோசனைகளை வழங்குவார்கள். சிபாரிசுபடி மருந்து அடிக்கலாம். பயிர் பூத்த 25 முதல் 30 நாட்களில் அறுவடை கட்டம் தோன்றும். அப்போது கதிரின் அடிபாகத்திலுள்ள 4, 5 மணிகள் பசுமையாக இருக்கும். ஆனால் இதர மணிகள் முற்றிய நிலையில் இருக்கும். இக்கட்டத்தை கண்டறிந்து நெல் அறுவடை செய்தால் சுமைகளை களத்து மேட்டிற்கு கொண்டுபோகும்போது நெல்மணிகள் கொட்டாது. இந்த கவனிப்பினால் விளைச்சல் திறன் அதிகரிக்கின்றது. இம்முறை சாகுபடிக்கு ஏக்கருக்கு செலவு ரூ.6,500/- வரை ஆகும். சீரிய முறையில் சாகுபடி பணிகளை செய்தால் பொடி நெல் சாகுபடியில் ஏக்கரில் 40 மூடை நெல் (மூடை 61 கிலோ) கிடைக்கும். 40 மூடை நெல்லின் மதிப்பு சுமார் ரூ.24,000/-. வைக்கோலின் மதிப்பு ரூ.500/-. மொத்தவரவு ரூ.24,500/-. ஏக்கரில் லாபம் ரூ.18,000/- வரை எடுக்க இயலும். மதுரை பகுதியில் கண்மாய் பகுதிகளிலும் நெல் சாகுபடி இதே பட்டத்தில் செய்யப்படுகின்றது. இச்சூழ்நிலையில் நெல் நாற்று விட்டு நடப்படுகின்றது. இதற்கு சாகுபடி செலவு ரூ.11,000/-. சாகுபடியில் மகசூல் ஏக்கரில் 40 மூடையும், ஏக்கரில் லாபம் ரூ.18,000ம் கிடைக்கின்றது.

0 comments: