இயற்கை முறையில் முட்டைக் கோசு சாகுபடி: நாற்றங்கால்: நிலத்தை நன்கு பண்படுத்தி ஒரு மீட்டர் அகலம், 15 செ.மீ. உயரம், தேவைக் கேற்ப நீளம் கொண்ட மேட்டுப் பாத்திகள் அமைத்து 1 சதுர மீட்டருக்கு 2 கிலோ தொழு உரம் இடுவதற்கு முன்பு 200 கிராம் மண்புழு மட்கு உரம், 40 கிராம் மைக்கோரைசா வேர் <உட்பூசணம், 200 கிராம் அசோஸ்பைரில்லம், 200 கிராம் பாஸ்போ பாக்டீரியா ஆகிய வற்றை கலந்து இடவேண்டும். 2 நாட்களுக்கு ஒரு முறை நீர் பாய்ச்ச வேண் டும். 40-45 நாட்களில் நாற்றுக்கள் தயாராகிவிடும். ஏக்கருக்கு விதை அளவு 150 கிராம்.
விதை நேர்த்தி: முட்டைக்கோசு விதைகளை 3 சதம் தசகவ்யா, 10 சதம் சாண மூலிகை உரம் மற்றும் 5 சதம் சூடோமோனாஸ் புளோரசன்ஸ் ஆகியவற்றின் கரைசலில் அரைமணி நேரம் ஊறவைத்து பின் நன்கு உலரவைத்து விதைக்க வேண்டும். நாற்றுக்களை பிடுங்கி நடுவதற்கு முன் சூடோமோனாஸ் புளோரசன்ஸ் 5 சதம் கரைசலில் வேர்களை நன்கு நனைத்து நடவு வயலில் நடவேண்டும்.
நடவு வயல் தயாரிப்பு: நிலத்தை நன்கு பண்படுத்த வேண்டும். பின் ஏக்கரில் 12 டன் நன்கு மக்கிய தொழு உரம் இட்டு நன்கு கலக்க வேண்டும். மேலும் 75 கிராம் கொம்பு சாண உரத்தை 40 லிட்டர் தண்ணீரில் கரைத்து மண்ணில் தெளிக்க வேண்டும்.
உரமிடுதல்: ஏக்கருக்கு இயற்கை உயிராற்றல் மட்கு உரம் 2 டன், மண்புழு மக்கு உரம் 1 டன், வேப்பம் புண்ணாக்கு 200 கிலோ நிலம் தயாரிக்கும்போது இடவேண்டும். நடும்போது பார்களில் 2 கிலோ வீதம் அசோஸ்பைரில்லம் மற்றும் பாஸ்போ பாக்டீரியா உயிர் உரங்களை தொழு உரத்துடன் கலந்து இடவேண்டும்.
நடவு: வாளிப்பான நாற்றுகளை வரிசைக்கு வரிசை மற்றும் செடிக்கு செடி 40 செ.மீ. இடைவெளியில் நடவு செய்ய வேண்டும். நடும்பொழுது 1 ஏக்கருக்கு தேவையான நாற்றுக்களை 2 பொட்டலம் அசோஸ் பைரில்லம் மற்றும் 2 பொட்டலம் பாஸ்போ பாக்டீரியா நுண்ணுயிர் கலவையை 4 முதல் 6 லிட்டர் நீரில் கரைத்து நாற்றுக்களின் வேர்பாகத்தை 20 நிமிடம் நனைத்து பின் நடவு செய்ய வேண்டும்.
நீர் பாய்ச்சுதல்: நடவு செய்த பின் நீர் பாய்ச்ச வேண்டும். பின் மழை இல்லாதிருப்பின் 2 நாட்களுக்கு ஒரு முறை நீர் பாய்ச்ச வேண்டும்.
பயிர் பாதுகாப்பு: வெட்டுப்புழுக்கள்: கோடைகாலத்தில் விளக்கு பொறி வைத்து தாய் அந்துப்பூச்சிகளைக் கவர்ந்து அழித்தும், தெளிப்பு நீர் பாசனம் மூலம் வயலுக்கு நீர் பாய்ச்சி புழுக்கள் தண்ணீரின் மேல் மிதக்கும்போது பறவைகள் அவற்றை எடுத்து உண்பதன் மூலமும் கட்டுப்படுத்தலாம்.
அசுவினி பூச்சியைக் கட்டுப்படுத்த நெட்டில் இலைச்சாறு 10 சதம் கரைசலை 45, 60 மற்றும் 75வது நாட்களில் இலைவழி தெளிக்க வேண்டும். வெள்ளைப்புழுக்கள், வெள்ளை ஈ ஆகியவற்றை விளக்குப்பொறி வைத்தும், புழுக்களை கையால் பொறுக்கியும், வெள்ளை ஈயை விளக்கெண்ணெய் தடவப்பட்ட மஞ்சள் நிற குடங்களை ஒட்டுப் பொறியாக்கிக் கொண்டு 4 முறை 1 வார இடைவெளியில் பிடிக்க வேண்டும்.
நோய்களைக் கட்டுப்படுத்த டிரைகோடெர்மா விரிடி மற்றும் சூடோமோனாஸ் புளோரசன்ஸ் ஏக்கருக்கு 1 கிலோ வீதம் இடுவதன் மூலம் வேர் அழுகல், வாடல், நூற்புழுக்கள், இலைப்புள்ளி மற்றும் கருகல்நோய் ஆகியவற்றைக் கட்டுப்படுத்தலாம். (தகவல்: த.செல்வராஜ், க.வ.ராஜலிங்கம், சி.அனிதா, வணிக தோட்டக்கலை நிலையம், ஊட்டி-643 001. போன்: 0423-244 2170)
0 comments:
Post a Comment