Saturday, September 26, 2009

மாவட்ட ஆட்சியரின் கேள்விகள் மற்றும் விவசாயிகளின் பதில்கள்

(1) உங்கள் கிராமத்தில் விவசாயம் செய்வதற்கு போதிய நீர் ஆதாரங்கள் இருக்கிறது என்று நீங்கள் கருதுகிறீர்களா? இருக்கிறது எனில் என்ன நீர் ஆதாரங்கள்?
i) ஆறு
ii) ஏரி/குளம்
iii) கிணறு
iv) மழைநீர்
இல்லையெனில் எது காரணம் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்? இப்பொழுது இதை சரிபடுத்துவதற்கு நீங்கள் எடுக்கும் முயற்சி என்ன? அரசிடமிருந்து நீங்கள் என்ன எதிர்பார்க்கிறீர்கள்?

மாவட்டத்தில் பெரும்பாலும் ஏரி, குளம், கிணறு மற்றும் மழைநீர் ஆகிய நீர் ஆதாரங்களைக் கொண்டே விவசாயம் செய்யப்படுகிறது. ஆறு மற்றும் குளங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்றி, தூர் வாரப்பட வேண்டும். மழைநீரைத் தேக்கிட வேண்டி கசிவு நீர்க்குட்டைகள் மற்றும் தடுப்பணைகள் கட்டப்பட வேண்டும். விவசாயத்திற்கென உதவிட தேசிய வேளாண் மற்றும் ஊரக வளர்ச்சி வங்கி துவக்கி செயல்படுத்தப்பட வேண்டும்.

(2) உங்களது நிலத்தில் வேளாண்மை செய்திட தேவையான அளவிற்கு மண்வளம் இருக்கிறது என்று கருதுகிறீர்களா? இல்லையெனில் என்ன காரணம் என்ன நினைக்கிறீர்கள்? அதை நிவர்த்தி செய்வதற்கு உங்களது முயற்சி என்ன? அரசிடமிருந்து நீங்கள் என்ன எதிர்பார்க்கிறீர்கள்?

மண்வளம் உள்ளது. பயிர்களுக்குத் தேவையான சத்துக்களை ஈடுகட்ட கால்நடை எரு இடுவதற்கு கால்நடை வளர்ப்புத் திட்டங்களை முனைப்புடன் செயல்படுத்த வேண்டும். பசுந்தீவன விதைகளை துறை மூலமாக இலவசமாகவோ, மானியத்திலோ வழங்க வேண்டும். வேளாண்மைத்துறை அலுவலர்கள் மூலமாக கிராமங்களில் மண் ஆய்வுக்கூடங்கள் அமைத்து, விவசாயிகளுக்கு இயற்கை வேளாண் முறைகள் குறித்த பயிற்சிகள் அளித்து, ஒருங்கிணைந்த இயற்கை வேளாண் முறைகளை செயல்படுத்த வேண்டும்

(3) உங்களுக்கு தரமான விதைகள் கிராமங்களில் தேவையான நேரத்தில் தேவையான அளவில் கிடைக்கிறதா? இல்லையெனில் அதை நிவர்த்தி செய்திட உங்களது முயற்சி என்ன? அரசிடம் நீங்கள் என்ன எதிர்பார்க்கிறீர்கள்?

பெரும்பாலும் விவசாயிகள் விருப்பப்படும் விதைகள் கிடைப்பதில்லை. எனவே தற்போதைய நிலையைவிட சிறப்பாக செயல்படுத்த, துறை மூலமாகவும், கிராமங்களில் உள்ள நியாயவிலைக் கடைகள் மூலமாகவும் விவசாயிகளின் விருப்பத்திற்கும் அந்தந்தப் பகுதிகளுக்கும் தேவையான தரமான வீரிய இரக விதைகள் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும். அதிலும் அந்தந்த கிராமங்களிலேயே, உரிய பருவகாலத்திற்குள் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்

(4) உங்களது கிராமத்தில் உங்களது பயிர்களுக்கு தேவையான உரம் தேவையான அளவில் கிடைக்கிறதா? இல்லையெனில் இதை நிவர்த்தி செய்வதற்கு உங்களது முயற்சி என்ன? சரிசெய்யப்படுவதற்கு அரசாங்கத்திடமிருந்து என்ன எதிர்பார்க்கிறீர்கள்?

தேவையான உரங்கள் தேவையான அளவில் கிடைப்பதில்லை. கிராமங்களில் கூட்டுறவு சங்கங்களில் முன்கூட்டியே திட்டமிட்டு சாகுபடி பரப்பிற்கேற்ப தேவையான உரங்கள் தேவையான அளவில் இருப்பு வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இயற்கை உரங்கள், பசுந்தாள் உங்கள் மற்றும் மண்புழு உர பயன்பாடு குறித்த வழிப்புணர்ச்சி ஏற்படுத்த வேண்டும். தனியார் கடைகளில் அதிக விலைக்கு விற்பதையும், தரமற்ற உரங்கள் விற்பதையும் தடுக்க வேண்டும்

(5) இயற்கை வேளாண்மை முறை உழவர்களுக்கு பொருளாதார ரீதியில் சரியான என கருதுகிறார்கள்? இல்லையெனில் இதை நிவர்த்தி செய்வதற்கான உங்களது முயற்சி என்ன? அரசிடம் என்ன எதிர்பார்க்கிறீர்கள்?

சரியான முறைதான். இதற்காக கறவைமாடுகள் மற்றும் கால்நடைகள் வாங்கிட கடனுதவி மற்றும் மானியங்கள் வழங்கப்பட வேண்டும். துறை அலுவலர்கள் மூலம் கிராமங்களில் விழிப்புணர்ச்சி ஏற்படுத்தப்பட வேண்டும். மேலும் டான்வாப் சுய உதவிக்குழுக்கள் மூலம் பயிற்சிகள் அளிக்கப்பட வேண்டும். பொதுமக்களுக்கு இயற்கை வேளாண் விளைபொட்கள் விஷமற்றது என்பதற்கும், நஞ்சு கலந்த மரபணுமாற்ற உணவுப் பொருட்கள் உடல்நலத்திற்கு தீங்கானது என்பதை அரசு விளம்பரங்கள் மூலம் உணர்த்தி விழிப்புணர்ச்சி ஏற்படுத்த வேண்டும். இயற்கை வேளாண்மை விளைபொருட்களுக்கு நல்ல விளை கிடைக்க அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்

(6) உங்களது நிலங்களில் பயிர்செய்வதற்கு தேவையான அளவிற்கு கடன் வசதி செய்து கொடுக்கப்படுகிறதா? இல்லையெனில் உங்களது முயற்சி என்ன? அரசிடம் என்ன எதிர்பார்க்கிறீர்கள்?

பெரும்பாலும் கடன் கிடைப்பதில்லை. அப்படியே கடன் கொடுத்தாலும், மிகக் குறைவான தொகை, பயிர் சாகுபடி சமயத்தில் கிடைக்காமல், காலதாமதமாகவே வழங்கப்படுகிறது. இப்பிரச்சினைகளை நிவிர்த்தி செய்து, கிராமங்களில், கூட்டுறவு சங்கங்களில் அனைத்து விவசாயிகளையும் உறுப்பினர்களாக சேர்த்து, பழைய கடன்தாரர்களுக்கு மட்டுமின்றி அனைத்து விவசாயிகளுக்கும் தேவையான அளவு கடன் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்

(7) விவசாயத்தொழிலாளர்கள் உங்கள் கிராமத்தில் பயிர் செய்திட தேவையான அளவில் கிடைக்கிறர்களா? இல்லையெனில் இதை நிவர்த்தி செய்வதற்கு உங்களது முயற்சி என்ன? அரசிடமிருந்து என்ன எதிர்பார்க்கிறீர்கள்?

விவசாயத் தொழிலாளர் பற்றாக்குறை அதிக அளவில் உள்ளது. எனவே வேளாண்மைத்துறை மூலம் உழவு, பார் பிடித்தல் மற்றும் அறுவடை ஆகிய பணிகளுக்குத் தேவையான நவீன, தரமான இயந்திரங்களை அதிக மானியத்துடன் வழங்கிட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இக்கருவிகளை டான்வாப் சுயஉதவிக்குழுக்கள் மூலம் வழங்கி அந்தந்தப் பகுதிகளில் பயன்படுத்த முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும். மேலும் கிராமங்களில் உழவர் மன்றங்கள் அமைத்து, விவசாயிகளை ஒருங்கிணைத்து தேவைக்கேற்ப முன்னுரிமை வழங்கி பணிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கலாம்.

(8) நீங்கள் உற்பத்தி செய்யக்கூடிய விளைபொருட்களுக்கு உரிய நியாயமான விலை உங்களது கிராமத்தில் கிடைக்கிறதா? இல்லையெனில் உங்களது முயற்சி என்ன? அரசிடம் என்ன எதிர்பார்க்கிறீர்கள்?

நியாயமான விலை கிடைப்பதில்லை. தானிய ஈட்டுக்கடன் வழங்க வேண்டும். இடைத்தரகர்கள் மூலம் விளைபொருட்களை விற்பனை செய்ய வேண்டியுள்ளதால் நியாயமான விலை கிடைப்பதில்லை. உள்ள10ர் வியாபாரிகள் கூட்டுசேர்ந்து கொண்டு, வெளியூர் வியாபாரிகளுக்கு நெருக்கடி கொடுப்பதாலும், நல்ல விலை கிடைப்பதில்லை. கூட்டுறவு சங்கங்கள் மூலம், உரிய விலை நிர்ணயம் செய்து, கொள்முதல் செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். விளை பொருட்களை சேமித்து வைக்க குளிர்சாதன வசதி கொண்ட கிடங்குகள் அமைக்க வேண்டும். மரவள்ளிக்கு ஆலை அதிபர்கள், விவசாயிகள் மற்றும் அரசு அதிகாரிகள் கூடி பேச்சு வார்த்தை நடத்தி விலை நிர்ணயம் செய்யப்பட வேண்டும்

(9) விவசாயத்தினை கூடுதலாக லாபம் தரக்கூடிய ஒரு தொழிலாக மாற்றுவதற்கு என்ன முயற்சிகள் நீங்கள் எடுக்கிறீர்கள்? எதை எல்லாம் அரசாங்கத்திடம் எதிர்பார்க்கிறீர்கள்?

துல்லிய பண்ணைய திட்டத்தின் மூலமும், இயற்கை மற்றும் பசுந்தாள் உர பயன்பாடு குறித்தும் விழிப்புணர்ச்சி ஏற்படுத்த வேண்டும். கால்நடை வளர்ப்பு, தோட்டக்கலை பயிர்கள் வளர்ப்பு போன்ற தொழில்களை அரசாங்கம் கிராமங்களுக்கு இட்டுச் செல்ல வேண்டும். மின்வசதி, நீர்நிலைகள் ஆகியன ஏற்படுத்தி தரப்பட வேண்டும். விளைபொருட்களுக்கு நியாயமான நல்ல விலை நிர்ணயித்து ஊக்குவிக்க வேண்டும். விவசாயத்தை லாபகரமானதாக மாற்ற மண்வளம், உர நிர்வாகம், பூச்சி கொல்லி நிர்வாகத்தில் இயற்கை முறையை கடைபிடிக்க வழிவகை ஏற்படுத்த வேண்டும். 'ஓர் ஊர் ஓர் விவசாயம'; என அறிவிக்க வேண்டும். அரசு அதிகாரிகள் மாதம் ஒருமுறை வயல்களை நேரிடையாக பார்வையிட்டு, விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்

(10) தமிழக அரசு அறிவித்து செயல்படும் துல்லிய பண்ணையம் திட்டத்தால் கூடுதலான விளைச்சல் பெறுவது பற்றி நீங்கள் அறிவீர்களா? அறிவீர்களேயானால் நீங்கள் கையாளுகிறீர்களா? இல்லையெனில் ஏன் செயல்படுத்தவில்லை?

ஆம், அறிந்துள்ளோம். பிற மாவட்டங்களில் உள்ள வசதிகள், மானியங்கள், நமது மாவட்டத்திற்கும் தேவை. வேளாண் கருவிகள், இயந்திரங்கள் ஒன்றியங்களில் வழங்கப்பட வேண்டும். செலவு அதிகமாக உள்ளதால், கூடுதல் மகசூல், கூடுதல் செலவு என சரியாகிவிடுகிறது. எனவே இதனை சிறு விவசாயிகள் நடைமுறைப்படுத்துவது கடினம். இதுகுறித்து துறை அதிகாரிகள் கிராமங்களில் முகாமிட்டு ஆலோசனைகள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

(11) செம்மை நெல் சாகுபடியால் பெறக்கூடிய கூடுதலான பலன்களை நீங்கள் அறிவீர்களா? அறிவீர்களேயானால் நீங்கள் அதனை கையாளுகிறீர்களா? இல்லையெனில் ஏன் கையாளவில்லை? இதற்காக நீங்கள் எடுத்துக்கொண்ட முயற்சிகள் என்ன? அரசிடம் என்ன எதிர்பார்க்கிறீர்கள்?

ஆம், அறிவோம். சிறப்பாக உள்ளது. நேரடி நெல் விதைப்பு முறையையும் கையாண்டு நல்ல மகசூலை குறைவான செலவில் பெற்றோம். நல்ல பலன் கிடைக்கிறது. மேலும் கூடுதல் பலன்களை பெற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கிராமங்களில் செயல்முறை விளக்கங்கள் செய்து காண்பிக்க வேண்டும். வயல்களுக்கு சென்று ஆலோசனைகள் வழங்க வேண்டும். நீர் ஆதாரம் இல்லாத பகுதிகளில் இதனை செயல்படுத்த பாசன வசதி ஏற்படுத்த உதவ வேண்டும். மேலும் ஒவ்வொரு வட்டாரத்திலும், விவசாயிகளை தேர்ந்தெடுத்து, அவர்களது பண்ணைகளிலேயே பயிற்சிகள் வழங்கி, திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்

(12) விவசாயிகளின் வேளாண்மை முயற்சியில் இயந்திரங்களைக் கொண்டு உபயோகப்படுத்தி செலவுகளை குறைத்திட முடியும் என்று நீங்கள் நம்புகிறீர்களா? விவரத்தை தருக

ஆம். கண்டிப்பாக நம்புகிறோம். இயந்திரங்கள் செலவினத்தைக் குறைக்கின்றன. வேளாண்மைத்துறை மூலம் அனைத்துப் பணிகளுக்குமான இயந்திரங்களையும் குறைந்த வாடகையில், குறிப்பிட்ட காலங்களில் வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இந்த இயந்திரங்களுக்கான டீசலை மானிய விலையில் வழங்கிட வேண்டும். இயந்திரங்கள் நிலங்களுக்கு எளிதாக கொண்டு செல்லக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட வேண்டும். மானிய விலையில் கருவிகள் விநியோகிக்கப்பட வேண்டும்

(13) கலப்பு பண்ணையம் (வேளாண்மையுடன் கால்நடை செல்வங்களை வளர்த்தல்) மூலமாக வருவாயை அதிகரிக்க முடியும் என்று நீங்கள் நம்புகிறீர்களா? விவரம் தருக.

ஆம். கண்டிப்பாக முடியும். நிச்சயமாக நம்புகிறோம். கால்நடைகள், கோழி வளர்ப்பு, மண்புழுக்கள் வளர்ப்பு என்ற துணைத் தொழில்களைக் கையாண்டு, தற்சார்பு வேளாண்மையில் ஈடுபட்டு நல்ல முறையில் வருமானம் ஈட்டலாம். ஏந்த இலவச அறிவிப்பையும் எதிர்நோக்க வேண்டியதில்லை. ஏனெனில் பால் உற்பத்தி மூலம் தினசரி வருமானமும், கோழி வளாப்பில் 3 மாதத்திற்கு ஒருமுறை வருமானமும், ஆடு வளர்ப்பில் 6 மாதத்திற்கு ஒருமுறை வருமானமும், மண்புழு உற்பத்தியில் ஓராண்டிற்கான உரச்செலவு மிஞ்சுவதாலும் லாபகரமானதாக உள்ளது. எனவே ஆடு, மாடு போன்ற கால்நடைகள் வாங்கிட கடன் வழங்கிட அரசு முன்வர வேண்டும்

(14) உங்கள் கிராமத்தில் நீங்கள் பாரம்பரியாக செய்யக்கூடிய பயிருக்கு பதிலாக மாற்றுப் பயிர் (மூலிகைää ப10ச்செடிகள் மரங்கள்ää பழ வகைகள்) கொண்டு வந்தால் விவசாயிகளுக்கு கூடுதலாக வருவாய் கிடைக்கும் என்று நம்புகிறீர்களா? அதற்காக நீங்கள் எடுத்துக்கொண்ட முயற்சிகள் என்ன? அரசிடம் என்ன எதிர்பார்க்கிறீர்கள்.

நம்புகிறோம். அரசு நடவடிக்கை எடுத்து திட்டத்தை செயல்படுத்தும் போதுதான் விவசாயிகளுக்கு பலன்கள் சென்றடையும். அரசின் மூலம் மூலிகைப் பண்ணைகள் ஏற்படுத்தப்பட வேண்டும். மேலும் மூலிகை பயிர்களின் பலன்கள் குறித்து பொதுமக்களுக்கும், பயிர் சாகுபடியில் உள்ள பலன்கள் குறித்து விவசாயிகளுக்கும் அரசால் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும். அதேபோல் உற்பத்தியை சந்தைப்படுத்துதல், பயன்பாடு, விலை உத்தரவாதம் குறித்தும் அரசு உறுதி அளிக்க வேண்டும். எனினும் உணவு உற்பத்தியை விடுத்து, வருவாய்க்கென மாற்றுப் பயிர் சாகுபடிக்கு சென்று, இருப்பதையும் இழந்துவிடும் நிலை தேவையானதா என யோசிக்க வேண்டும்.

(15) உங்கள் பகுதியில் விளைபொருட்கள் சேமித்து வைக்கக் கூடிய சேமிப்பு கிடங்கு உருவாக்கவேண்டுமென்று கோருகிறீர்களா? தேவையெனில் அதற்கான தங்களது முயற்சி என்ன? அரங்சாங்கத்திடம் எதை எதிர்பார்க்கிறீர்கள்?

ஆம். சேமிப்புக் கிடங்குகள் அவசியம் தேவை. அதற்கான முயற்சிகளிலும் ஈடுபட்டுள்ளோம். கிராமங்களில் அந்தந்த தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மூலம் சேமிப்பு கிடங்குகள் உருவாக்க வேண்டும். தனி நபர்கள் செயல்படுத்த அதிக மானியம் வழங்கினால் கிடங்குகளின் பராமரிப்பு நன்றாக இருக்கும். அரசின் திட்டம் என்னவென்று தெரியவந்தால் விவசாயிகள் இணைத்து செயல்பட முடியும். எனவே சேமிப்பு கிடங்குகள் அமைக்க மாவட்ட நிர்வாகம் அரசுக்கு பரிந்துரை செய்து தக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்

(16) உங்கள் பகுதிகளில் நிலத்தடி நீர் வலுப்படுத்தப்படுவதற்கான கீழ்க்கண்ட முயற்சிகளை எடுக்கவேண்டுமென்று நீங்கள் நம்புகீறிர்களா?
(i) தடுப்பணை கட்டுதல்
(ii) ஏரி குளங்களை ஆழப்படுத்துதல்
(iii) கிணற்றிற்கு செயற்கைமுறையில் செறிவ10ட்டல்
(iv) பண்ணைக் குட்டைகள் அமைத்தல்
(v) மழைநீர் சேகரிப்பு அமைப்பு

ஆம். மேற்கண்ட முறைகளை நடைமுறைப்படுத்த அவசியம் முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

(17) விவசாய விளைபொருட்களை விற்பனை செய்வதற்கு ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள் உருவாக்கவேண்டுமென்று எண்ணுகிறீர்களா? அதற்கான உங்களின் முயற்சி என்ன? அரசிடமிருந்து என்ன எதிர்பார்க்கிறீர்கள்?

ஆம். அவசியம் உருவாக்கப்பட வேண்டும். அதற்காக போராடிக் கொண்டிருக்கிறோம். கிராமம் தோறும் அல்லது ஒன்றியம் வாரியாக ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்கள் அமைக்கப்பட வேண்டும். தற்போது இயங்கிவரும் விற்பனைக்கூடங்கள் சரியான முறையில் செயல்பட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். கிராமங்களில் 15 நாட்களுக்கு ஒருமுறை விற்பனை ஏலம் நடத்தப்பட வேண்டும். விற்பனைக் கூடங்கள் அமைக்க நிதி ஆதாரம், கட்டிட வசதி மற்றும் அலுவலர்கள் நியமனங்களுக்கு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

(18) நகர்ப்புற வளர்ச்சியாலும் தொழில் வளர்ச்சியாலும் கிராமப்புறங்களில் நீர் ஆதாரங்கள் மாசுபடுவதாக நீங்கள் கருதுகிறீர்களா? அதை தடுப்பதற்கான உளமார்ந்த உங்களது முயற்சி என்ன? அரசிடமிருந்து எதை எதிர்பார்க்கிறீர்கள்?

ஆம். நகர்ப்புறத்தில் இருந்து வரும் கழிவு நீர் கிராமப்புற விவசாய நிலங்களுக்கு சென்று நிலத்தடி நீர்; மாசுபடுகிறது. எனவே நகர்ப்புற எல்லையை விட்டு தண்ணீர் செல்வதற்கு முன்பு தண்ணீரை சுத்தம் செய்து விவசாயத்திற்கு பயன்படுத்தலாம் என உறுதி செய்யப்பட்ட பின்னர்தான் தண்ணீர் செல்ல வேண்டும். மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் மூலம் கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். ஓவ்வொரு தொழிற்காலையிலும் கழிவுநீர்; சுத்திகரிப்பு நிலையங்கள் கண்டிப்பாக இயங்க வேண்டும். பாசன வாய்க்கால்களில் கழிவுகள் கலப்பதைத் தடுக்க வேண்டும்.

(19) கிராமப்புறங்களில் விவசாயிகள் பெறக்கூடிய சொற்ப வருவாயையும் நகர்ப்புறங்களில் செலவழிக்கப்படுகிறது. அதன்விளைவாக கிராமப்புறங்களில் பணப்புழக்கம் ஒன்றுமே இல்லை. கிராமப்புறத்தில் பணப்புழக்கத்தை அதிகரிப்பதற்கான வழி என்ன?

கிராமப்புறங்களில் பணப்புழக்கத்தைப் பெருக்க வேளாண் விளை பொருள் சந்தைகளை கிராமங்களுக்கு கொண்டு வர வேண்டும். நகரங்களில் கிடைக்கும் வசதிகளை கிராமங்களுக்கும் கொண்டு சேர்க்க வேண்டும். நுகர்வு கலாச்சாரம் பற்றிய விழிப்புணர்வு அவசியம். இயற்கையான வாழ்க்கை இனிக்கும் என்பதை சிறு குழந்தை முதல் பழக்கப்படுத்த வேண்டும். ஓவ்வொரு கிராமத்திலும் ஏதாவது ஓர் அரசு அலுவலகம் கண்டிப்பாக இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கிராமங்களில் வங்கிகள் துவங்கப்பட வேண்டும். விளைபொருட்களை லாப முறையில் விற்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். காய்கறி, பால் உற்பத்தி, கால்நடைகள் மற்றும் பறவைகள் உற்பத்தி மூலம் இறைச்சி உற்பத்தி, மலர்கள் சாகுபடி போன்ற தொழில்களை உருவாக்குவதன் மூலம், விற்பனையில் நாள்தோறும் நகர நுகர்வோரிடமிருந்து கிராமங்களுக்கு வருவாய் வரும். பணப்புழக்கம் இருக்கும். கிராமங்களில் வேளாண் விற்பனை நிலையங்கள் துவக்கி செயல்படுத்தினால், நகர மக்கள், கிராமங்களுக்கு வந்து விளைபொருட்களை வாங்கி செல்கையில் பணப்புழக்கம் பெருகும். சிக்கனம் மற்றும் சேமிப்பு முறைகளை கிராம மக்களுக்கு உருவாக்க வேண்டும்.

(20) கிராமப்புறங்களிலிருந்து மக்கள் நகரங்களை நோக்கி வெளியேறும் சூழல் இருக்கிறதே அதற்கு முக்கியமான காரணங்கள் என்ன? இந்த நிலை மாற்றுவதற்கு உங்களது முயற்சி என்ன? அரசாங்கத்திடம் எதை எதிர்பார்க்கிறீர்கள்?

பொருளாதாரம், தொழில், வேலைவாய்ப்பு காரணமாக வெளியேற வேண்டியுள்ளது. கிராமங்களில் சிறுதொழில் மற்றும் கைத்தொழில்களை உருவாக்க வேண்டும். வருவாய் குறைவு, நகரங்களில் அதிக கூலி, பொழுது போக்கு அம்சங்கள் காரணமாக வெளியேற வாய்ப்புள்ளது. இவை கிராமங்களில் உருவாக்கப்பட்டால், நகரங்களை நோக்கி யாரும் செல்லமாட்டார்கள். விவசாயத்தில் வருவாய் குறைவால் ஆர்வமும், ஆதரவும் குறைந்து கிராமத்தை விட்டுச் செல்ல நேரிடுகிறது. குல்வி கற்றோர் எல்லாம் வயலுக்குள் கால் பதிக்காமல், நகரத்தை நோக்கிச் செல்கின்றனர். முக்களுக்குத் தேவையான அனைத்து பொருட்களும் கிராமத்திலேயே கிடைத்தால் யாரும் வெளியேற வாய்ப்பில்லை. குல்வி மற்றும் மருத்துவ வசதிகள் நகரங்களில் அதிக அளவில் கிடைப்பதே கிராமத்தை விட்டுச் செல்லக் காரணம்

(21) கிராமப்புறங்களில் பல்வேறு அரசுத்துறை அலுவலர்கள் பணியாற்றுகிறார்கள் அவர்கள் கிராமங்களுக்கு வந்து குறிப்பாக விவசாயிகளுடைய பிரச்சினைகளை அறிந்து தேவையான நடவடிக்கைகளை உடனுக்குடன் எடுக்கிறார்களா என்று நீங்கள் நம்புகிறீர்களா? இல்லையெனில் விவரம் தருக.

கிராமங்களில் பணிபுரிவோர் எவரும் அங்கு தங்குவதில்லை. அரசுப் பணியிலிருப்பதற்காக மட்டுமே கிராமங்களில் பணியாற்றுகிறார்கள். அவர்கள் அங்கு தங்கிட ஏதுவாக அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றிக் கொடுக்க வேண்டும். வற்புறுத்தலின்பேரில் செயல்படாமல் சுய ஆர்வத்துடன் அவர்களை செயல்பட வைக்க வேண்டும். அதிகாரிகள் கிராமத்தில் தங்கி செயல்பட்டு, மக்களை சந்தித்து அவர்களது பிரச்சினைகளை அறிந்து நன்மை செய்ய பாடுபட வேண்டும்.

(22) அரசின் எந்த துறையிடமிருந்து விவசாயிகளின் மேம்பாட்டிற்கு அதிக அளவிற்கு பணிகளை எதிர்பார்க்கிறீர்கள்? அவை எந்தவகையில் இருக்கவேண்டுமென்று எதிர்பார்க்கிறீர்கள்?

தற்போதுள்ள சூழ்நிலையில் பெரும்பாலான விவசாயிகள் பொருளாதார ரீதியாக பின்தங்கியுள்ளதால், நிதித்துறை, வருவாய்த்துறை, வேளாண்துறை, மின்சார வாரியம், கூட்டுறவுத்துறை உட்பட அனைத்து துறைகளும் கிராமங்களுக்கும், விவசாயத்திற்கும் முக்கியத்துவம் கொடுத்து விவசாயிகளின் உணர்வுகளை புரிந்து அவர்களது குறைகளை நிவிர்த்தி செய்யும் வகையில் செயல்பட வேண்டும்.

(23) பாடுபடும் விவசாயிகளும் - பணியாற்றும் அரசு அலுவலர்களும் உளமாற ஒன்றுசேர்ந்து முயற்சித்தால் கிராமங்களின் வளர்ச்சி சாத்தியம் என நீங்கள் நம்புகிறீர்களா? விபரம் தருக.

ஆம். நிச்சயம் கிராமங்கள் உயரும். பாடுபடும் விவசாயிகளும், பணியாற்றும்; அரசு அதிகாரிகளும் உளமாற ஒன்றுசேர்ந்தால் இந்திய வேளாண்மை உயரும். நீடித்த, நிலைத்த தன்மையிலான வேளாண்மை வளர்ச்சி இருக்கும். கிராமத்திற்கு வந்து அடிக்கடி அதிகாரிகள் மக்களை சந்தித்தால் கிராம வளர்ச்சி சாத்தியமடையும். கிராமத்திற்கு வந்து விவசாயிகளை சந்திப்பதே அவமானம் என்று அதிகாரிகள் நினைக்கும் நிலை மாற வே;ணடும். தொழில்கூடங்களை அதிக அளவில் கிராமப்புறங்களில் அமைக்க வேண்டும். கிராமப்புறங்களில் குடியிருக்கும் ஓய்வுப் பெற்ற அரசு அதிகாரிகள் கிராம மக்களுக்கு விழிப்புணர்ச்சி ஏற்படுத்த வேண்டும். இதற்கு அரசு அதிகாரிகள், மனித நேயம், தியாக உணர்வு, கடமை உணர்வு மற்றும் பொறுமையுடன் பணியாற்ற வேண்டும். 'பாரத நாடு பழம்பெரும் நாடு, விவசாயிகளே இதற்கு முதுகெலும்பு' என்ற சொல் நிறைவேறும். இது சாத்தியம் மட்டும் அல்ல சத்தியமும் கூட.

0 comments: