மதுரை: நீர் வளம் குறைந்து போனதால், பாரம் பரிய விவசாயத்தில் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. கிடைக்கும் குறைவான நீரை, சிக்கனமாக பயன் படுத்த வேண்டும் என்பதற்காக சொட்டு நீர் பாசனம் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் மூலம், அதுவரை வாய்க்கால்கள் மூலம் பயிர்களுக்கு நீர் பாய்ச்சும் முறை மாற்றப்பட்டு, குழாய்கள் மூலம் நீர் சொட்டு, சொட்டாக பயிர்களுக்கு பாய்ச்சப்பட்டது. இம்முறையில், குழாய்கள் சேதமடைந்ததால், நீர் வீணானது. இதை தடுக்க, புதிய சொட்டு நீர் பாசனம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது, உசிலம்பட்டியில் அரசு மானியத்துடன், குறைந்த செலவு கொண்ட புதிய சொட்டுநீர் பாசன முறை செயல்படுத்தப்படுகிறது. இதற்கென வடிவமைக்கப்பட்ட பிரத்யேக டிராக்டர், பூமிக்கு அடியில் ஒரு அடி ஆழத்திற்கு குழி தோண்டியவாறே ஊர்ந்து வருகிறது. டிராக்டரின் பின்புறம் பிலிம் புரொஜக்டர் வடிவில் சுற்றப்பட்டிருக்கும் "டியூப்' ஒரு அடி பள்ளத்தில் பதிக்கப்படுகிறது.
நிலத்தின் இரு பகுதிகளிலும் பி.வி.சி., பைப்கள் பதிக்கப்பட்டுள்ளன. இதில், ஒருபுறம் தண்ணீர் பாய்ச்சவும், மறுபுறம் கழிவுநீர் வெளியேறும் வகையிலும் டியூப்கள் இணைக்கப் பட்டுள்ளன. பூச்சிக்கொல்லி மருந்தும் இதே முறையில் செலுத்தப்படுகிறது. இப்புதிய முறையால், நீர் பாய்ச்சவும், மருந்து தெளிக்கவும் ஆகும் செலவு வெகுவாக குறைகிறது. இப்புதிய சொட்டுநீர் பாசன திட்டத்திற்கு, 50 சதவீத அரசு மானியம் உண்டு. குறைந்தது 3 ஏக்கர் பரப்பளவு உள்ள நிலத்தில் இந்த புதிய முறையை அறிமுகப்படுத்தினால் மட்டுமே லாபம்.
0 comments:
Post a Comment